செவ்வாய், 9 ஏப்ரல், 2019

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

தினகரன் : டெல்லி : தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
;காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகள்
 தமிழக சட்டசபையில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் இறப்பிற்கு பிறகு தற்போது 22 தொகுதிகள் காலியாக உள்ளது. அதில்,”திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம், ஓசூர் மற்றும் சூலூர் ஆகியவையாகும்.


18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் அறிவிப்பு

இந்நிலையில் மேற்கண்ட காலி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் குறித்து தேர்தல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதனை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்: குறிப்பிடப்பட்டது.  இதில் தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு தான் சூலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுபட்ட தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த கோரி மனுக்கள்

இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அரவக்குறிச்சி தேர்தல் வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டப்பிடாரம் வழக்கும் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுகவின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளும் நடந்து வண்ணம் உள்ளது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவ்வப்போது தேர்தல் ஆணையத்திற்கு திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

மே 19ம் தேதி 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் என அறிவிப்பு

இந்நிலையில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வருகிற மே 19ம் தேதி 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23 -ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

*ஏப்ரல் 22ந் தேதி நான்கு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

*ஏப்ரல் 29ந் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.

*ஏப்ரல் 30ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது.

*மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக