திங்கள், 4 மார்ச், 2019

விஜயகாந்துடன் ஓ.பி.எஸ். அவசர சந்திப்பு.... தேமுதிகவுக்கு 7 தொகுதிகள்....

தே.மு.தி.க.வை வளைக்க இறுதிக்கட்ட முயற்சி? - விஜயகாந்துடன் ஓ.பி.எஸ். அவசர சந்திப்பு
தேமுதிக - அதிமுக கூட்டணி இறுதியடைவதை ஒட்டி ஓபிஎஸ் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கி அதிமுகவுடன்  நாளை உடன்பாடு எட்டப்படலாம் எனத் தெரிகிறது
மாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை வரவழைக்கும் இறுதிக்கட்ட முயற்சியாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். இன்று மாலை விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இரு அணிகள் மோத உள்ளன.
அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது.

தே.மு.தி.க. முதலில் டெல்லி சென்று பா.ஜனதாவுடன் பேச்சு நடத்தியது. எனவே அந்த கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தே.மு.தி.க.வுக்கு முன்னதாக பா.ம.க.வுக்கு 7 இடங்களை அ.தி.மு.க. விட்டுக் கொடுத்ததால் அதே போன்று 7 இடங்கள் தங்களுக்கும் வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கூறப்பட்டதால் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை விழுந்தது.


இதற்கிடையே விஜயகாந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள். இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று கருதப்பட்டது.

ஆனால், தி.மு.க. கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. அதிக பட்சமாக 5 தொகுதிகள் தான் தருவோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க. அணியில் இடம் பெறுவதை தே.மு.தி.க. தவிர்த்தது.

தே.மு.தி.க.வுக்காக இனி காத்திருக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தி.மு.க. தன் தோழமைக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் தி.மு.க.வில் அனைத்து தொகுதிகளுக்கும் உடன்பாடு எட்டப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சு நடத்தினார்கள். கடந்த வார இறுதியில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த பேச்சுவார்த்தையில் திடீர் சிக்கல் தோன்றியது.

இதற்கு தே.மு.தி.க. தரப்பில் வைக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க.விடம் 7 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக பேசி வந்த தே.மு.தி.க. பிறகு சற்று இறங்கி வந்தது.

5 தொகுதிகள் கொடுத்தால் போதும் என்று கூறிய தே.மு.தி.க. தலைவர்கள் மேல்-சபையில் ஒரு இடம் வேண்டும் மேலும் 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனையால்  அ.தி.மு.க.-தே.மு.தி.க. பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடிக்கிறது.

இந்த நிலையில் தே.மு.தி.க.வின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.


இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வரும் 6-ந்தேதி சென்னைக்கு வருவதால் தே.மு.தி.க.வுடனான பேச்சு வார்த்தையை நாளைக்குள் முடித்து விட வேண்டும் என்று அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர். 

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.கவை வரவழைக்கும் இறுதிக்கட்ட முயற்சியாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று மாலை 5.45 மணியளவில் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக