திங்கள், 4 மார்ச், 2019

உதயசூரியன் சின்னத்தில் நிற்க தயங்கும் வைகோ.,திருமா ..

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நிபந்தனை; ஏற்க மறுக்கும் வைகோ, திருமா“திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்காக திருமாவளவன், ரவிகுமார் உள்ளிட்டவர்கள் ஸ்டாலினை பார்த்திருக்கிறார்கள். அப்போது ஸ்டாலின், ‘நீங்க மூன்று கேட்டிருக்கீங்க. நிறைய கட்சிகள் இருப்பதால் அது சாத்தியமில்லை. உங்களுக்கு 2 தொகுதி தருகிறோம். ஒரே ஒரு கண்டிஷனுக்கு நீங்க ஒப்புக்கணும். விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடணும்’ என்று கேட்டாராம். அதை திருமா எதிர்பார்க்கவில்லையாம்.
‘சீட் 2 தான் கொடுக்க முடியும்னு நீங்க சொல்றதை நாங்க ஏத்துக்குறோம். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பது சரியாக இருக்காது. விடுதலை சிறுத்தைகளுக்கு என கொள்கைகள் இருக்கு. இப்போ சீட்டுக்காக எல்லாத்தையும் நாங்க விட்டுட்டு வந்தால் அது எங்க தன்மானத்தை விட்டுட்டு வர்ற மாதிரி இருக்கும். நாங்க தனியாக சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் விரும்புறோம். எங்களை தயவு செய்து நீங்க கட்டாயப்படுத்தாதீங்க. இதுக்கு எங்க நிர்வாகிகள் யாரும் ஒத்துக்கவே மாட்டாங்க...’ என்று சொல்லி இருக்கிறார் திருமா.

அதற்கு ஸ்டாலின், ‘நீங்க அவசரமா எந்த பதிலும் சொல்ல வேண்டாம். உங்க கட்சியில் கூடிப் பேசி அதுக்குப் பிறகு கூட சொல்லுங்க. எனக்கு நீங்க உதயசூரியனில் போட்டியிட்டால் நல்லா இருக்கும் என்பது எண்ணம்...’ என்று சொல்ல... ‘எங்க நிர்வாகிகள் ஒத்துக்க மாட்டாங்க... இருந்தாலும் நீங்க சொல்றதால பேசிப் பார்க்கிறேன். ஆனாலும் எனக்கே இதுல உடன்பாடு இல்லை...’ என்று சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறார் திருமா. ஆலோசனை கூட்டம் நடத்தினாலும் ஸ்டாலின் கோரிக்கையை திருமா ஏற்கப் போவதில்லை என்றே சொல்கிறார்கள்” என்பதுடன் முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து அடுத்த மெசேஜ்ஜும் வந்தது. “வைகோவுக்கும் கிட்டதட்ட இதே பிரச்சினைதான் என்று சொல்கிறார்கள். வைகோவும் 2 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்ய சபாவும் கேட்டிருக்கிறார். ஆனால் திமுக தரப்பிலோ, ஒரு ராஜ்யசபாவும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஓகே சொல்லப்பட்டிருக்கிறது. திமுக தரப்பில் இருந்து வைகோவிடம் பேசியவர்கள், ‘தொகுதி முன்ன பின்ன பேசி முடிச்சுக்கலாம். ஆனால் நீங்க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடணும்னு தலைவர் நினைக்கிறாரு...’ என்று சொல்லியிருக்கிறார்கள். வைகோ ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டார்களாம். ‘வைகோ எப்படி மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியும். கூட்டணிக்காக என்னுடைய கொள்கையை நான் எப்படி விட்டுத்தர முடியும்? கூட்டணி என்றால் சீட் பத்தி மட்டும் பேசுங்க. சின்னத்தை பத்தியெல்லாம் ஏன் பேசுறீங்க?’ என்று கோபமாகவே கேட்டிருக்கிறார். ‘நீங்க கட்சியில் கூடிப் பேசிட்டு சொல்லுங்க..’ என்று அவரிடம் சொன்னபோது, ‘இதுல கூடிப் பேச என்ன இருக்கு. நான் தான் கட்சி. கட்சிதான் நான். நான் சொல்றதை யாரும் மீற மாட்டாங்க... நீங்க யோசிச்சு சொல்லுங்க..’ என்று சொல்லிவிட்டாராம். இந்த தகவலும் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
வைகோ, திருமா இருவருமே இப்படி முரண்டு பிடிப்பார்கள் என்பதை ஸ்டாலின் எதிர்பார்க்கவே இல்லையாம். திருமாவளவன் நிர்வாகிகளோடு ஆலோசித்து வருகிறார். வைகோவும் நாளை காலை 11 மணிக்கு உயர் நிலை செயல் திட்டக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். இவர்களின் இறுதி முடிவு நாளைதான் தெரியும்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக