வியாழன், 28 மார்ச், 2019

காஷ்மீர் தனிநாடா ? பேஸ்புக் நிறுவனத்தின் பட்டியல் .. தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது

மின்னம்பலம் : காஷ்மீரை தவறுதலாக தனிநாடு என பட்டியல் இட்டதற்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் மார்ச் 27ஆம் தேதி போலித்தனங்களை ஊக்குவிக்கிற செயல்பாடுகளைக் கொண்ட 513 பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஈரானிய குழுக்களால் செயல்பட்டு வந்தவை. இத்தகைய செயல்பாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா, எகிப்து மற்றும் இந்தோனேசிய நாடுகளும் இடம்பெற்றிருந்தன. அதே சமயத்தில் காஷ்மீரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
காஷ்மீர் தனிநாடு இல்லை என்பதால் தவறுதலாகப் பதிவேற்றப்பட்ட இச்சம்பவத்துக்கு பேஸ்புக் நிர்வாகம் பொறுப்பேற்று மன்னிப்பு கோரியுள்ளதோடு, காஷ்மீர் பெயரை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியும் உள்ளது. இதுகுறித்து பேஸ்புக் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரானிய குழுக்களைச் சார்ந்தவர்கள் உள்ள பகுதிகள் மற்றும் நாடுகளை எங்கள் வலைதளத்தில் பட்டியலிடும்போது அதில் தவறுதலாகக் காஷ்மீரும் இடம் பெற்றுவிட்டது. அதற்காக மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அத்தகைய பக்கங்களின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகள் பெரும்பாலும் போலி கணக்குகளை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள பேஸ்புக், “ஈரான் விவகாரங்கள், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம், சிரியா மற்றும் யேமனில் உள்ள முரண்பாடுகள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையிலான பதற்றம், இஸ்லாமிய மத விவகாரங்கள், இந்திய அரசியல், வெனிசுலாவின் சமீபகால நெருக்கடி ஆகியவை குறித்து நீக்கப்பட்ட பக்கங்களில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக