ஞாயிறு, 31 மார்ச், 2019

ராகுல் காந்தி கேரளாவிலும் போட்டி .. தென்னிந்தியாவின் செல்லப்பிள்ளையாகிறார்?

கேரளா வயநாடு தேர்தல் தொகுதியின் ஒரு எல்லையாக தமிழகமும் மறு எல்லையைக் கர்நாடகமும் அமைத்துள்ளது . மூன்று மாநிலங்களையும் தொட்டு கொண்டு இருப்பதால் இத்தொகுதி ஓரளவு முழு தென்னகத்தையும் குறிப்பதாக கருதப்படுகிறது
tamilthehindu :.உபி.யின் அமேதி மக்களவைத் தொகுதியைத் தொடர்ந்து, 2-வது தொகுதியாக, கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்று வருகிறார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், இந்த முறையும் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை எதிர்த்து களமிறங்குகிறார்.
இந்நிலையில், 2-வது தொகுதியாக, கர்நாடக மாநிலத்திலும், கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்று தகவல் வெளியானது. ராகுல் காந்தி தென் மாநிலங்களில் போட்டியிட வேண்டும், கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்று முதன் முதலில் சித்தராமையா குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநில காங்கிரஸும், தமிழக காங்கிரஸும் வலியுறுத்தின.
இதில் வெற்றிவாய்ப்பு மிகுந்த கேரளாவின் வயநாடு  மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகினாலும் உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி, செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், " ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், 2-வதாக கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதன் மூலம் வடமாநிலம், தென் மாநிலத்துக்கும் ஒற்றுமை என்றும் செய்தியை ராகுல் வலியுறுத்துகிறார்.
தென் மாநிலங்கள் மிகவும் முக்கியம் என்பதை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தென் மாநில காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை ராகுல் காந்தியிடம் எடுத்துரைத்தோம். தென் மாநில மக்களின் பாரம்பரியம், மொழி, மரபுகளுக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் எப்போதும் மதிப்பளிக்கும். வடஇந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் ராகுல் காந்தி இணைப்புப்பாலமாகச் செயல்படுவார் " எனத் தெரிவித்தனர்.
காரணம் என்ன?
தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டபோது கடந்த 2008-ம் ஆண்டு வயநாடு மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்டது. இதில் வயநாடு மாவட்டம், மணன்தாவாடி, சுல்தான்பத்தேரி, கல்பேட்டா, திருவம்பாடி, மலப்புரம் மாவட்டத்தில் எரநாடு, நிலம்பூர், வண்டூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி உண்டு. 5 தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர்.
கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஐ.ஷாநவாஸ் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். ஆனால், எம்.பி. ஷாநவாஸ் காலமாகி ஓராண்டுகிவிட்டதால், காலியாக இருக்கிறது.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கணக்கின்படி, வயநாடு தொகுதியில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 97 வாக்காளர்கள் இருந்தனர். ஷாநவாஸ் அதில் 4.10 லட்சம் வாக்குகள் அதாவது 49.86 சதவீத வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.ரஹ்மத்துல்லா 31.23 சதவீதம் வாக்குகள், அதாவது 2.57 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
அந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.வாசுதேவன் மாஸ்டர் 31,687 வாக்குகள், 3.85 சதவீதம் வாக்குகள் பெற்று 4-வது இடம் பெற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி கே.முரளீதரன் 12 சதவீத வாக்குகள் 99,663 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் ஷாநவாஸ் வென்றபோதிலும் கூட கடந்த 2009-ம் ஆண்டு வெற்றியைக் காட்டிலும் சற்று கடினமாக இருந்தது. ஷாநவாசுக்கும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் மோகேரிக்கும் இடையே 20 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது.
ஷாநவாஸ் 30.18 சதவீதம் வாக்குகள் அதாவது 3.77 லட்சம் வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் 3.56 லட்சம் 28.51 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக சற்று முன்னேற்றம் கண்டு 3-ம் இடத்தைப் பிடித்தது. பாஜக வேட்பாளர் பி.ஆர்.ரஸ்மில்நாத் 80 ஆயிரத்து 752 வாக்குகள், 6.46சதவீத வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு சதவீதம் வாக்குகள் பெற்றனர்.
ஆதலால், வயநாடு மக்களவைத் தொகுதி என்பது, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பாதுகாப்பான, வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் தொகுதி என்பதால், ராகுல் காந்தியை இங்கு போட்டியிட கேரள காங்கிரஸ் கட்சியினர் அழைத்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக