ஞாயிறு, 17 மார்ச், 2019

நல்ல குடிநீரும்! நடப்பதற்கு பாலமும்! எத்தியோப்பியாவை வியக்கவைத்த கண்ணன் ..மதுரை

ஜோ கார்த்திக் tamil.asiavillenews.com : : இங்குள்ள ஓடைகளில், நீர் வண்டல்
மண்ணுடன் கலந்து வரும். மக்கள் அதை அப்படியேதான் குடிப்பார்கள். குட்டை போல தேங்கிக்கிடக்கும் நீரையும் பயன்படுத்துவார்கள். கால்வாய்கள் அமைத்து ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறை இவர்களுக்குத் தெரியாது.
 நான்கு புறமும், நிலங்கள் சூழ்ந்த அந்த நிலப்பரப்பு, வனங்களும், வன விலங்குகளும், பாலூட்டிகளும், சதுப்பு நிலங்களும், பறவைகளும், அரிய தாவரங்களும், தொடர்மலைகளாலும், ஆபத்தான பள்ளத்தாக்குகளாலும் நிறைந்த அழகிய ஓர் இடம். நைல் நதியில் இருந்து பிரிந்து வரும், நீல நைல் நதியும், வெள்ளை நைல் நதியும் இந்நிலத்தின் நீராதாரங்கள். பல்வேறு விதமான இனக் குழுக்களால் ஆன பூர்வகுடிகள் அதிகம் வாழும் பாரம்பரிய இடம். ஒலிம்பிக் போட்டியிலும், நீண்ட தூர ஓட்டப்பந்தயத்திலும் இம்மண்ணின் மைந்தர்களுடன் போட்டியிட்டு எவராலும் வெல்ல முடியாது. ஒரு குதிரை ஓடுவதை விடவும் அதிகமாக ஆற்றல் கொண்டவர்கள். இந்த வலிமை இவர்களுக்கு இயல்பாக கிடைக்கப்பெற்றது. இவ்வளவு சிறப்புகள் கொண்டிருந்தாலும், இந்நாட்டு மக்கள், இன்றுவரையிலும் தங்களின் அடிப்படை தேவைகளுக்களுக்காகவும், சுகாதார வாழ்விற்காகவும் கல்விக்காகவும், போராடி வருகின்றனர். `


 ஆப்பிரிக்காவின் கொம்பு' என அழைக்கப்படும், ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு எத்தியோப்பியா. உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகவும், உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடாகவும், மிகுந்த இறைநம்பிக்கை கொண்டுள்ள ஒரே ஆப்பிரிக்க நாடாகவும் இருக்கிறது எத்தியோப்பியா.

 உலக அளவில் மற்ற நிலப்பரப்பில் இருந்து குடியேறுபவர்களை, இப்பகுதியில் வாழ்பவர்கள் அவ்வளவு எளிதாக ஏற்க மாட்டார்கள். நீங்கள் அன்பு வைத்திருந்தாலும் சரி, அணுகுண்டு வைத்திருந்தாலும் சரி, அந்நியர்கள் எவரும், இவர்களின் மண்ணை, ஆட்சி செய்யவோ, உரிமை கொண்டாடவோ முடியாது.

  உலக நாடுகள் மிகப்பெரும் அளவில் இந்நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மிகநீண்ட காலமாக இருந்து வரும் அரசியல் ரீதியான பிரச்னைகள் அந்நாட்டு மக்களின் வளர்ச்சியில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. எத்தியோப்பிய நிலப்பரப்பில் இருந்த சில இனக்குழுக்கள் அந்நாட்டிடம் இருந்து விடுதலை பெற விரும்பின. எத்தியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா தனிநாடாக விடுதலை பெற 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி போராடியது. விடுதலைக்காக இந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது.

 மிகநீண்ட காலமாகவே, இனக்குழுக்களுக்கிடையே அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது பல்வேறு விதமான வளர்ச்சித் திட்டங்களை முடங்கச்செய்து விடுகிறது. அரசியல் அழுத்தங்கள் ஒருபுறம், போதிய கல்வியறிவு, விழிப்புணர்வு போதாமை ஒருபுறம். ஊடக சுதந்திரமும் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டதே. இவ்வாறான பிரச்னைகள் நிறைந்த இடத்திற்கு வெளிநாட்டவர்கள் குடிபெயரவோ, உயர் பதவிகளை வகிக்கவோ, களப்பணி செய்யவோ தயங்குவார்கள். ஆனால், மதுரையில் இருந்து பணிக்காக சென்ற ஒருவர், அப்பகுதிக்கு குடிபெயர்ந்து, அம்மக்களை நேசித்து, அவர்களோடு ஒன்றோடு ஒன்றாகக் கலந்து, அவர்களின் அடிப்படை பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற முயற்சி செய்து வருகிறார் என்றால் நம்புவீர்களா? 7 மதுரை அலங்காநல்லூரில் இருந்து

 கி.மீ., தொலைவில், பொந்துகம்பட்டிதான் 42 வயதாகும் கண்ணனின் சொந்த ஊர். மதுரை தியாகராஜா கல்லூரியில் இளநிலையும், சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் முதுநிலையும் முடித்தவர், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் சில காலங்கள் வேலை தேடி அலைந்திருக்கிறார். பிறகுதான், கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. எத்தியோப்பியாவில் இங்கிருந்து சுமார் 575 கிமீ தொலைவில் இருக்கும் ஓர் சிறிய சந்தை நகரம் நெகிம்டே (nekemte). அங்குள்ள உள்ள வொலிகா பல்கலைக்கழகத்தில் (Wollega University -WU), பொது நிர்வாகத்துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த கண்ணன், தற்போது அத்துறையில் முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக எத்தியோப்பியாவில் வசித்து வரும் கண்ணனிடம் அவரின் களப்பணிகள் குறித்து பேசினோம்.

வரலாற்று ரீதியாக எத்தியோப்பியாவில் அரசியல், ஆட்சியில் ஆயிரம் பிரச்னைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும், இயல்பில் இம்மக்கள் மிகவும் அன்பானவர்கள். சகமனிதர்களை அளவு கடந்து நேசிப்பவர்கள். வெளி நபர்கள் எவரும் இவர்களைத் தேடி வருவதில்லை; இவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. எனவே, இவர்களுக்காக அவ்வாறு யாரேனும் உதவ வந்தால் அவர்களுக்கு மிகுந்த மரியாதை தருவார்கள். இம்மக்களின் கலாச்சாரம், மொழி, உணவு என அனைத்தும் சற்று புதிதாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இந்த வாழ்க்கை முறையை பழகிக்கொள்வது கடினமாகவே இருந்தது. இன்று இவர்களில் ஒருவனாக இருக்கிறேன். இம்மக்கள் மாம்பழத்தை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். பெருமளவு மாம்பழ சாகுபடி செய்யப்படுகிறது. சுவையான மலைத்தேன் கிடைக்கும். அதை அனைவரும் ஒன்றாகக் கூடி அமர்ந்து பகிர்ந்து உண்பார்கள். பிடித்தவர்களுக்கு அன்பின் அடையாளமாக நிலத்தை வழங்குவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். அளவு கடந்த அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒருவருக்குத்தான் நிலத்தைத் தானமாக கொடுப்பார்கள்.

முதன்முறையாக 6 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மலைக்கிராமங்களுக்கு களப்பணிக்குச் சென்றேன். அப்போது கிடைத்த அனுபவம் என்னை வெகுவாக பாதித்தது. இங்குள்ள மலைக் கிராமங்களில் மிகமுக்கிய பிரச்னை குடிநீர். இங்குள்ள ஓடைகளில் நீர், வண்டல் மண்ணுடன் கலந்து வரும். மக்கள் அதை அப்படியேதான் குடிப்பார்கள். குட்டை போல தேங்கிக்கிடக்கும் நீரையும் பயன்படுத்துவார்கள். கால்வாய்கள் அமைத்து ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறை இங்குள்ள மக்களுக்குத் தெரியாது. போதிய கல்வி வாய்ப்பும், விழிப்புணர்வும் இல்லாததும் ஒரு காரணம். அரசியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன. இளைஞர்கள் தங்களின் கிராமங்களை முன்னேற்ற மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார்கள். ஆனால், போதிய வழிகாட்டுதல் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

 இங்குள்ள மக்கள் பெரும்பாலும் காலணி அணிவதில்லை. கரடுமுரடான பாதைகளை சர்வசாதாரணமாகக் கடப்பார்கள். மலைப்பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல, சாலை வசதிகள் கிடையாது. ஆறு, ஓடைகளைக் கடக்க பாலங்கள் கிடையாது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவைகள் அனைத்தையும் பார்த்து விட்டு என்னால் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியவில்லை. மனதில் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. இவர்களுக்கு என்னால் முடிந்த ஏதோ ஒன்றைச் செய்ய நினைத்தேன். எனவே, பல்கலைக்கழக மாணவர்களை களப்பணியில் ஈடுபட அறிவுறுத்தினேன்.

 மாணவர்களை, அவர்கள் வாழும் கிராமங்களில் உள்ள பிரச்னைகளை அடையாளப்படுத்தச் சொன்னேன். அதற்குத் தீர்வு காண, யோசனைகளை வழங்கினேன். அதோடு நிறுத்திவிடாமல் களத்தில் இறங்கி பணி செய்யத் தொடங்கினோம். தற்போது பல மாணவர்கள் அவர்கள் பகுதி பிரச்னைகளுக்கு ,அவர்களே தீர்வு காணத் தொடங்கி விட்டனர். இந்த மாற்றம் அவர்களுக்கே வியப்பாக இருக்கிறது.

மலைக்கிராமத்தின் பல இடங்களில், இயற்கை முறையில் வடிகால் அமைத்திருக்கிறோம். இதனால், அசுத்தநீர் வடிகட்டப்பட்டு, பயன்படுத்த ஏதுவாக மாற்றப்படுகிறது. எனக்குத் தெரிந்த சில அரசியல் தலைவர்களின் உதவியோடு, உள்ளூர் மக்களையும், என் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு மலைப்பகுதிகளில் சிறிய பாலங்களை அமைத்திருக்கிறோம். நீண்ட நாட்களாக சிரமத்தைச் சந்தித்துவந்த மக்களுக்கு இது பேருதவியாக இருக்கிறது. பலரும் என்னைச் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். எனக்கும் அது மிகப்பெரும் மனநிறைவை தந்திருக்கிறது.

யாரென்றே தெரியாத என் மீது இன்று இந்த மலைவாழ் மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்க என்னளவில் என்ன சாத்தியமோ, அதைச் செய்து வருகிறேன். இன்னும் அனைத்துத் தரப்பில் இருந்தும் போதிய ஒத்துழைப்பு கிடைத்தால், இங்குள்ள மக்களின் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய முடியும். உண்மையில் இம்மக்களுக்கு உதவி தேவை. ஆனால், அது அவ்வளவு சுலபமா? சாத்தியமா? என்றுதான் தெரியவில்லை. ஆனாலும், என்னால் முயன்றதை செய்து வருகிறேன், என்கிறார் ஆப்பிரிக்க மக்களின் நம்பிக்கை மனிதர், தமிழரான கண்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக