வியாழன், 21 மார்ச், 2019

தமிழச்சி தங்கபாண்டியன் கூட்டம் .. தென் சென்னையை கலக்கிய உதயநிதி ஸ்டாலின் .. வீடியோ



மின்னம்பலம் :உதயநிதி ஸ்டாலின் தனது தமிழையும், கட்சிப் பற்றையும்தான் அழகு என்று குறிப்பிட்டதாக தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதனையடுத்து தென்சென்னை தொகுதி தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது பேசிய உதயநிதி, “இவ்வளவு அழகான வேட்பாளரை தென்சென்னை தொகுதி மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தவறவிடாதீர்கள். அழகு என்று நான் சொல்வது அவருடைய தோற்றத்தை அல்ல. அவருடைய அழகு தமிழையும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற கொள்கையையும், திமுக மீதான கொள்கைப் பிடிப்பையும்தான்” என்று தெரிவித்திருந்தார். உதயநிதி இவ்வாறு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை கே.கே.நகரில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “பெண்கள் பொதுவெளியில் வந்தாலே சமூக ஊடகங்கள்தான் ஏதேனும் சிறிய விஷயத்தைக் கூட பெரிதுபடுத்திக் காண்பிக்கின்றன. அழகு என்று கூறியதற்கான விளக்கத்தை உதயநிதியே தந்துள்ளார். தமிழச்சியின் அழகு என்பது தமிழ் சார்ந்தது, திமுகவின் மீது அவரது குடும்பம் வைத்திருக்கும் பற்று சார்ந்தது என்று கூறியிருக்கிறார். ஒரு கருத்தை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொடக்க உரையை மட்டும் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனம் செய்வது ஆரோக்கியமானது கிடையாது” என்று தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளாரே என்ற கேள்விக்கு, “சிறுவயதில் இருந்தே இந்த வாக்குறுதிகளை கேட்டு வருகிறேன் என்று கமல்ஹாசன் கூறுகிறார் அல்லவா, அந்த அறிக்கையில் இருக்கும் வாக்குறுதிகளில் இதுவரை எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் அவர் படித்துப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். மேம்போக்காக பேசுவது மட்டும் அழகல்ல” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக