வியாழன், 21 மார்ச், 2019

தேர்தல் : ரூ.2000 வழங்குவது நிறுத்திவைப்பு!

தேர்தல் : ரூ.2000 வழங்குவது நிறுத்திவைப்பு!மின்னம்பலம் : மக்களவை தேர்தலையொட்டி 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 21) தெரிவித்துள்ளது
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளியோர், விவசாய தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

ஆனால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி கடந்த மார்ச் 7ஆம் தேதி தொடர்ந்த வழக்கில், “வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை 2000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதை எதிர்க்கவில்லை எனவும், இதற்காக அரசு மேற்கொள்ளும் நடை முறையை மட்டுமே எதிர்ப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, முதலில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக குடும்ப அட்டைதாரர்கள் அனைவரின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்து வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காண பல்வேறு விதிகளை வகுத்து 2007ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையைப் பின்பற்றிச் சிறப்பு உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத், பயனாளிகளைக் கண்டறியச் சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அரசாணையைத் திருத்தி அதிகாரிகள் வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் மீண்டும் இன்று (மார்ச் 21) விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் தலைமை செயலகத்திலிருந்து அரசாணை ஆவணம் வெளியானது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது, மக்களவை தேர்தல் காரணமாக 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையைத் தேர்தலுக்குப் பின்னர் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக