வியாழன், 14 மார்ச், 2019

குமரியில் ராகுல் ..கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துகொண்டே இருந்தது. முழு ரிப்போர்ட்


மின்னம்பலம் :மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி குமரி வந்து சென்ற நிலையில், நேற்று (மார்ச் 13) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவிலில் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
சென்னையில் நேற்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் சந்திப்பு, பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டுப் புறப்பட்ட ராகுல் காந்தி, திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஹெலிபேடில் இறங்கினார்.
4.10க்கு ஸ்கோட் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். பொதுக்கூட்ட மேடை ஏறும் முன் ராகுலுக்குக் கைகொடுத்து வரவேற்க 60 விவிஐபிக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பல நூறு விவிஐபிக்களில் 60 பேரைத் தேர்ந்தெடுத்தாகக் கூறுகிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
ஒருபக்கம் ராகுல் காந்தி மற்ற தலைவர்களோடு மேடையேறிவிட்ட நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துகொண்டே இருந்தது. கல்லூரி வளாகத்தைத் தாண்டி சாலைகளிலும் பெருங்கூட்டம் நின்றது. காரணம் பாதுகாப்பு கெடுபிடிச் சோதனைகள் காரணமாகப் பலர் கல்லூரி வளாகத்துக்குள் நுழைவதே பெரும் சிரமமாகிப் போனது.

இந்தப் பரபரப்புக்கு இடையே பொதுக்கூட்டம் தொடங்கியது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ராகுல் காந்தி 5.50க்கு ஹெலிகாப்டரில் புறப்பட வேண்டும் என்று ஏற்கனவே நேரம் குறிக்கப்பட்டதால், தலைவர்கள் பேச சிற்சில நிமிடங்களே அளிக்கப்பட்டது.
குமரியில் ராகுல்: முழு ரிப்போர்ட்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனக்கே உரிய பாணியில் புயலாகப் பேசியபோது, ‘ஹானரபிள் ராகுல்மோடி’ என்று சொல்லிவிட்டார். காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசுகையில், நிகழ்ச்சி ஏற்பாட்டைப் புகழ்ந்தார்.
ஸ்டாலின் பேசி முடித்த பிறகு ராகுல் காந்தி உரையாற்றத் தொடங்கினார். அவருக்கு அருகே முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு நின்றபடி ராகுலின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று இடம் பெறுவதற்குப் பதிலாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.
கலைஞரும் காமராஜரும்!
காமராஜரையும், நேசமணியையும் நினைவுகூர்ந்து உரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி,
“விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வரப்போகிறார். கலைஞர் நம்முடன் வாழ்கிறார் என்று ஸ்டாலின் கூறினார். நான் சிலமுறை கலைஞரைச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன், அதற்காக கௌரவப்படுகிறேன். கலைஞர் நம்மிடம் இருக்கிறார் என்பதோடு அவர் நம்மை எப்போதும் வழிநடத்துவார் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். காமராஜரும், கலைஞரும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து, “தமிழகத்தின் முன்னணி தலைவர்கள் இந்த மேடையில் திமுக தலைமையில் ஒருங்கிணைந்திருப்பதை நான் மகிழ்ச்சியோடு பார்க்கிறேன். நாம் அனைவரும் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறவர்களாக இருக்கிறோம். இது சாதாரணக் கூட்டணி அல்ல, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மக்கள் கூட்டணி. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் தமிழர்களுடைய வாழ்வுரிமைக்கும் எதிரானவை நடந்துவருவதை நாம் பார்க்கிறோம். அதனை வென்றெடுக்கவே இந்தக் கூட்டணியை நாம் அமைத்துள்ளோம். இந்தத் தேர்தல் தமிழக மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தின் ரிமோட் கன்ட்ரோல் டெல்லியில்
தமிழக அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பிரதமர் அலுவலகம் இயக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் திமுக - அதிமுக என்ற போட்டி இருந்தது. இரு கட்சிகளிலும் பெரிய தலைவர்கள் இருந்தனர். ஆனால், தற்போது தமிழகத்தை ஆள்பவர்களைப் பின்புறமாக இயக்குவதைப் பார்க்கிறோம். மத்தியில் தமிழகத்தின் மாபெரும் தலைவர்களின் கை ஓங்கியிருந்த காலம் இருந்தது. தமிழர்களுடைய உணர்வால் பின்னப்பட்ட ஆட்சி அங்கு இருந்தது. தற்போது மத்தியில் இருந்துகொண்டு ஒவ்வொரு மாநிலங்களை அடக்கி ஆள்வதற்கு முயற்சி செய்கிறார் மோடி. ஆனால் அடக்கி ஆளும் தன்மையைத் தமிழக மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்” என்றவர்,
“2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடுவதை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களுடைய நிலையைக் கண்டு நான் வருத்தமடைந்தேன். மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளோம். மக்களுக்காக அல்லாமல் தனது தொழில் நண்பர்களுக்காகப் பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான பகுதியான ஜம்மு காஷ்மீர் அனில் அம்பானி கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “பாதுகாப்புத் துறையினுடைய வரிப்பணம் 30,000 கோடி அனில் அம்பானி கைகளுக்கு மோடியால் கொடுக்கப்பட்டுவிட்டது. உண்மை வெல்லும் என்று திருவள்ளுவர் கூறினார். அது நரேந்திர மோடி விவகாரத்தில் பலிக்கவில்லை. உண்மை வெல்லும்போது நரேந்திர மோடி சிறையில் இருப்பார்” என்றும் தெரிவித்தார்.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி!
இறுதியாக, “நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துவருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை மாற்றியமைப்போம். ஒரே வரி, எளிமையான வரி, குறைந்தபட்ச வரியை அமல்படுத்துவோம். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகள் தமிழகத்தில் இருக்கிறது. பாஜக அரசாங்கம் போல காங்கிரஸ் அரசு பணக்காரர்களுக்குப் பணத்தை வாரிக் கொடுக்காது. மீண்டும் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சியைக் கொண்டுவருவோம்.
மீண்டும் மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம். 33% மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை முதலில் நிறைவேற்றுவோம். அதுமட்டுமல்ல, மத்திய அரசுத் துறை வேலைவாய்ப்புகளில் 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம்” என்று ராகுல் உறுதியளித்தார்.

தமிழ் ‘படுத்திய’ தங்கபாலு
ராகுலின் பேச்சை வழக்கமாக பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்ப்பார். ஆனால் நேற்றைய கூட்டத்தில் அவரைக் காணவில்லை. விசாரித்தபோது டெல்லியில் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால் தங்கபாலு மொழி பெயர்த்தார். ராகுல் காந்தியே மிக அழகாக, சிலேடையாகப் பேசியபோதும் தங்கபாலு அதை உல்டாவாக மாற்றி தமிழ்ப் ‘படுத்திவிட்டார்’ என்று விமர்சனங்கள் ராகுல் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்திலும் சமூக தளத்திலும் எழுந்தன. ப.சிதம்பரம், ஜோதிமணி போன்றோரை மொழிபெயர்க்கச் சொல்லியிருந்தால் ராகுலின் உணர்ச்சிகரமான உரையில் இன்னும் கொஞ்சம் உஷ்ணமேற்றி மிளகாய், கடுகு போட்டுத் தாளித்திருப்பார்களே என்ற ஆதங்கமும் மேடைக்குக் கீழே எழுந்தது.
சக்தி உறுப்பினர்களுக்குச் சான்றிதழ்!
ராகுல் பேசி முடிக்கும் தருவாயிலே திடீரென மேடையில் காங்கிரஸ் கட்சி சார்பிலான ஒரு முக்கியமான நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது. சக்தி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காங்கிரஸுக்கு அதிக உறுப்பினர்களைச் சேர்த்த பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி தன் கையால் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சிதான் அது.

பாதுகாப்பு அதிகாரிகளோ, ‘ஆறு மணிக்கு மேல் ஹெலிகாப்டர் புறப்பட இயலாது. அந்தி மேகங்கள் சூழ்ந்தால் ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் இருக்கும்’ என்று நிகழ்ச்சியை முடிக்க அறிவுறுத்தினர். ஆனாலும் கட்சிக்காரர்களுக்குச் சான்றிதழ் கொடுப்பதில் ஆர்வம் காட்டிய ராகுல், அதேநேரம் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடியே சான்றிதழைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதன்பின் திட்டமிட்டபடி 5.50க்கு ஹெலிகாப்டரில் ஏறி கேரளா புறப்பட்டார் ராகுல். இன்று கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்தை முறைப்படித் துவக்கிவைக்கிறார் ராகுல்.
- மின்னம்பலம் டீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக