வியாழன், 14 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: பண்ணை வீட்டில் ஆய்வு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: பண்ணை வீட்டில் ஆய்வு!மின்னம்பலம் : பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர் சிபிசிஐடி அதிகாரிகள்.
ஃபேஸ்புக் மூலமாக மாணவிகள், இளம்பெண்களிடம் பழகி, அதன்பின்னர் அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 12ஆம் தேதியன்று இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் மற்றும் ஐந்து ஆய்வாளர்கள் உள்ளடக்கிய தனிப்படை இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவித்தார் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவிருப்பதாகவும், இது தொடர்பான சட்ட சிக்கல்கள் குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றினால் எங்களிடமுள்ள ஆவணங்களை ஒப்படைப்போம் எனவும் அவர் கூறினார்.

அதிகாரிகள் ஆய்வு
நேற்று மாலையில் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் சின்னப்பம்பாளையத்தில் திருநாவுக்கரசு குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். இது தவிர மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் ஒருவர் கைது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் இளைஞர் ஒருவர் மீது நேற்று காவல் துறையிடம் புகார் அளித்தார். தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதாகவும், ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டிப் பணம் பறித்ததாகவும், தன்னைப் போல நூற்றுக்கணக்கான பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, பாலா என்ற நபரைக் கைது செய்தனர் போலீசார்.
பெண் வழக்கறிஞர்கள் மனு
நேற்று திருச்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்திராணி, சித்ரா ஆகியோர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரிடம் மனு அளித்தனர். “பெண்களுக்குப் பாலியல் ரீதியான வன்முறைகள், மனரீதியான வன்முறை, உடல் ரீதியான துன்புறுத்தல்கள், உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை, வார்த்தைகளால் செய்கைகளால் துன்புறுத்தப்படுதல், செல்போனில் ஆபாசமாக ஒலி, ஒளி படமெடுத்து மிரட்டுதல் போன்ற விதங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்குக் குறை தீர்க்கும் அமைப்பு, குறை முறையீட்டுக் குழு, சிறப்பு உளவியல் நல ஆலோசனையாளர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தரும் ரகசிய காப்பையும் உருவாக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜெயந்திராணி, சித்ரா இருவரும் தெரிவித்துள்ளனர்.
16 பேருக்குத் தொடர்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் 16 பேருக்குத் தொடர்பு இருப்பதாகவும், போலீசார் நான்கு பேரை மட்டுமே கைது செய்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக