புதன், 27 மார்ச், 2019

பாமகவுக்காக களமிறங்கிய தேர்தல் ஆணையம்: மாம்பழம் கிடைப்பதில் சிக்கல்!

டிஜிட்டல் திண்ணை:  பாமகவுக்காக களமிறங்கிய தேர்தல் ஆணையம்:  மாம்பழம்  கிடைப்பதில் சிக்கல்!மின்னம்பலம் :   “இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று ஏதோ ஒரு அரசியல் கட்சியைப் போல விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு நீதி என்றும், பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு வேறு ஒரு அளவுகோல் என்று தேர்தல் ஆணையம் வைத்திருப்பதாக தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுதும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக எழும் புகார்கள் வலுவாகிக் கொண்டே வருகின்றன. அதில் முக்கியமானது தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் சிறப்பு முயற்சி சர்ச்சையாக வெடிக்கப் போகிறது.

பாமகவுக்கு வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி மாம்பழம் சின்னம் கிடைக்காது என்ற சூழலே நிலவியது. தேர்தல் ஆணைய விதிகளின்படி மாநிலக் கட்சிகள் தமது மாநில சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகள் பெற வேண்டும், அல்லது குறைந்தது 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயித்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தல் ஆணையம் அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்ட சின்னம் ரத்து செய்யப்படும். இந்த விதியின்படி வரும் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் கோர உரிமையில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக மாம்பழம் சின்னம் சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. அதாவது பாமக நிற்கும் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சைகள் யாராவது மாம்பழ சின்னத்தைக் கேட்டால் அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதே நிலைமை. ஆனால் தேர்தல் ஆணையமே பாமகவுக்காக களமிறங்கிய செயல்தான் இப்போது பெரிய புயலாக வீச இருக்கிறது.
அதாவது மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (ஆர்.ஓ.) ஓர் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, பாமக சார்பில் மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கும்படி அந்தக் கடித்தில் ஆர்.ஓக்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது. மாம்பழம் சின்னம் சுயேச்சைகளின் சின்னங்களில் சேர்க்கப்பட வேண்டிய நிலையில் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தல் சென்றிருக்கிறது. இதை இப்போது அதிமுக கூட்டணியின் எதிர்கட்சிகள் மோப்பம் பிடித்துவிட்டன.
தேர்தல் சட்டங்களின்படி ஆர்.ஓ.க்களுக்கு என்று கையேடு இருக்கிறது. அந்தக் கையேட்டின்படிதான் அவர்கள் செயல்பட வேண்டும். அந்த கையேட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சுயமாக முடிவெடுக்கும் நீதிபதி ஸ்தானத்தில் செயல்பட வேண்டும். தேர்தல் சட்டங்களைப் பொறுத்த வரையில், ‘ரிட்டனிங் ஆபீசர்’ எனப்படும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இல்லாத சிறப்பு அதிகாரம் இருக்கிறது. மனு பரிசீலனையின்போது ஒரு மனுவின் நம்பகத் தன்மையை எதிர்தரப்பு கேள்விக் குறியாக்கினால் அதுபற்றி விசாரித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் தனித்துவமான சிறப்பம்சம். அவரை தலைமைத் தேர்தல் ஆணையர் கூட செல்வாக்கு செலுத்த முடியாது என்பதுதான் சட்டம். ஆனால் இதற்கு மாறாக பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழச் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தில் இருந்து ஆர்.ஓ.க்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் போயிருப்பது சட்ட விரோதமானது, இதை சும்மா விடமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர் திமுகவினர்.
இதற்கு உதாரணமாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் வெளியான தீர்ப்பையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வழக்கில் அதிமுக வேட்பாளர் போஸின் வேட்பு மனுவை மேலதிகாரிகளின் ஆணைக்கிணங்க ஏற்றுக் கொண்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் அப்போதைய திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் ஆர்.ஓ.வான ஜீவா. வேட்பாளரின் ஏ,பி படிவங்களில் ஜெ. கைரேகை பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் வேட்பு மனுவை ஏற்குமாறு எனக்குச் சொன்னார்கள். அதனால் ஏற்றுக் கொண்டேன் என சொன்னார் ஆர்.ஓ. அந்த வழக்கின் தீர்ப்பில், ‘தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஊதுகுழலாக செயல்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டு போஸின் வேட்புமனுவே செல்லாது என்றும், அதனால் அவர் வெற்றியும் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு இரு நாட்கள் முன்னதாகத்தான் மார்ச் 20 ஆம் தேதி மீண்டும் ஆர்.ஓ.க்கள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில், ‘பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழத்தை ஒதுக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் கடிதம் எழுதிய தகவல் தற்போது கசிந்திருக்கிறது. இதன்படி பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டால், அதில் தேர்தல் ஆணையத்தின் விருப்பமும் தலையீடும் இருக்கிறது என்பது உறுதியாகிவிடும். இதை சட்ட ரீதியாக எதிர்த்து பாமகவுக்கு மாம்பழம் ஒதுக்கப்படாமல் தடுப்பதற்கான வேலையில் திமுக இறங்கிவிட்டது. விரைவில் இது பெரிய விவகாரமாக வெடிக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக