புதன், 27 மார்ச், 2019

கனிமொழி, தமிழிசை இருவரின் வேட்பு மனுக்களையும் ஏற்பதில் சிக்கல்: இரு கட்சிகளும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார்

THE HINDU TAMIL : தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மற்றும் தமிழிசை சவுந்தரராஜனின்  வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக கடந்த மார்ச் 19-ம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அன்றில் இருந்தே வேட்புமனுத் தாக்கலும் தொடங்கியது. மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியும், பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று முன்தினம் 25-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுத் தாக்கல் நேற்று முடிந்த நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இந்நிலையில், கனிமொழி, தமிழிசை இருவரின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு மீதான பரிசீலனை மதியத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பாரத் பெட்ரோலியத்தில் இயக்குநராக உள்ளதையும், கணவரின் வருமானத்தையும் அவர் குறிப்பிடவில்லை என்றும் திமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, கனிமொழி மனுவை ஏற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கணவரின் பான் கார்டு எண்ணை அவர் குறிப்பிடவில்லை என்றும், தனக்கு வாக்கு சேப்பாக்கத்தில் இருப்பதாக விண்ணப்பத்தின் ஒரு பக்கத்தில் தெரிவித்து உள்ளதாகவும் மற்றொரு பக்கத்தில் தூத்துக்குடி என தெரிவித்துள்ளதாகவும் பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், அவருடைய மனு மீதான பரிசீலனையும் மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக