வியாழன், 7 மார்ச், 2019

ஈமச்சடங்கு செலவுக்காக கொத்தடிமையான மகன்!

ஈமச்சடங்கு செலவுக்காக கொத்தடிமையான மகன்!மின்னம்பலம் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை பார்த்துவந்த பத்து வயது சிறுவனை, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மீட்டுள்ளனர் தமிழக அரசு அதிகாரிகள். தந்தையின் ஈமச்சடங்கு செலவுக்கு வாங்கிய கடனுக்காக, அவரது தாயே அந்த சிறுவனைக் கொத்தடிமையாக விற்றது தெரிய வந்துள்ளது.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள சூரப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சூர்யா. 10 வயதான இந்த சிறுவன், 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கஜா புயலின்போது மரம் முறிந்து விழுந்ததில், இவரது தந்தை நடராஜ் மரணமடைந்தார். அவரது ஈமச்சடங்கு செலவுக்காக, பொட்டலங்குடியைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற நிலக்கிழாரிடம் இருந்து 6,000 ரூபாய் பெற்றார் சூர்யாவின் தாய் சித்ரா. ஆனால், அதனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், தன்னுடைய மகன்களில் ஒருவர் அவரிடம் கொத்தடிமையாகப் பணியாற்றச் சம்மதித்தார். அதற்காக, சூர்யா பலிகடா ஆக்கப்பட்டார்.

கடந்த 2 மாதங்களாக, ஒருவேளை கஞ்சியை மட்டும் உணவாக உட்கொண்டு வந்துள்ளார் சூர்யா. 24 மணி நேரமும் 200 ஆடுகளை மேய்த்துப் பாதுகாப்பதே அவரது பணியாக இருந்து வந்துள்ளது. இது குறித்து, சைல்டுலைன் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறுவன் கொத்தடிமையாக இருப்பது குறித்து தமிழக அரசு வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று (மார்ச் 6) அதிகாரிகள் சூர்யாவை மீட்டனர். தற்போது, தஞ்சாவூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு, தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறது. இதன் முதன்படியாக, சம்பந்தப்பட்ட சிறுவன் அல்லது சிறுமியருக்கு முதல்கட்டமாக 20,000 ரூபாய் வழங்கப்படும். அந்த தொகை சூர்யாவுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “அந்த சிறுவனின் பேரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அவருக்கான தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்படும். அந்த நிலக்கிழார் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி.சுரேஷ்.
கஜா புயலுக்குப் பிறகு, கொத்தடிமையாக மீட்கப்பட்ட இரண்டாவது சிறுவன் சூர்யா. இதற்கு முன்னர் கஜா புயலினால் விவசாயப் பாதிப்புகளைச் சந்தித்த ஒரு நபர் தனது மகனை கொத்தடிமையாகப் பணிக்கு அனுப்பியது அரசு அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. சூர்யாவை கொத்தடிமையாகப் பயன்படுத்திய மகாலிங்கம் தற்போது தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோல அந்த சிறுவனின் தாய் சித்ராவையும் அரசு அதிகாரிகளால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. “ஆடுகளுடன் வாழ்ந்த அந்த சிறுவன் தங்குவதற்கு ஒரு கூரை கூட இல்லை” என்று வருத்தம் தெரிவித்துள்ளார் சைல்டு லைன் அமைப்பின் இயக்குனர் பாத்திமா ராஜ்.
கஜா புயலின் பாதிப்பினால் இன்னும் பலர் இது போன்ற பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருக்கக் கூடும் என்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக