வியாழன், 7 மார்ச், 2019

கொடுப்பதற்காக கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை - ப்ளூம்பெர்க்

Karthikeyan Fastura : சந்தை நிலவரம் குறித்து அறிய ப்ளூம்பெர்க் வெப்சைட்டை
தினமும் பார்ப்போம். ஆனாலும் அது உருவான கதையை பற்றி யோசிக்கவே இல்லை. ஒரு சனிக்கிழமை சந்தை இல்லாத போதும் கைவிரல்கள் பழக்கதோசத்தில் ப்ளூம்பெர்க் சைட்டுக்கு சென்றது. அன்று சனிக்கிழமை என்று நினைவுக்கு வர சிரித்துக்கொண்டேன். அந்த நிறுவனத்தின் அதிபர் மைக்கேல் ப்ளூம்பெர்க் பற்றி படிக்க ஆரம்பித்தேன். வாவ். படிக்க படிக்க அவ்வளவு மகிழ்ச்சி.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பிரைட்டன் என்ற ஊரில் மிக சாதாரண ஒரு கணக்கர் உத்தியோகத்தில் இருந்த வில்லியம் ஹென்றி தம்பதியருக்கு பிறந்தார் மைக்கேல். அவர் தாத்தா ரஷ்யாவில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர். மைக்கேல்லின் இளவயது நடுத்தர மக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் தான் சென்றது. ஆனாலும் நன்றாக படித்தார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் இளங்கலை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்தார். பின்னர் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் MBA படித்தார்.

பிறகு சிறு சிறு நிதி நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு சாலமன் பிரதர்ஸ் என்ற வங்கி நிறுவனத்தில் இணைந்தார். அங்கு தான் அவருக்கு தன் பலம் என்ன என்று தெரிந்தது. மிக விரைவில் அடுத்தடுத்து அந்நிறுவனத்தின் பங்கு வர்த்தக துறைக்கு தலைவரானார். கம்ப்யுட்டர் யுகம் பிறக்கும் சமயம் வணிகத்திலும் தொழில்நுட்ப வசதிகள் ஊடுருவ அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவரானார். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது. திடிரென்று ஒருநாள் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்நிறுவனத்தை இன்னொரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்கியது. வாங்கிய கையோடு பலரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அதில் அவரும் ஒருவர். ஆனால் அந்நிறுவனத்தின் Business Partnerஆகவும் இருந்ததால் இவருக்கு பத்து மில்லியன் மதிப்புள்ள பங்குகள் கிடைத்தது.
1981 ஆம் ஆண்டு. கணினி தொழில்நுட்பம் வளர்ந்த மற்றும் இணையம் பிறந்த சமயம். இவருக்கு புரிந்தது இனி இதில் தான் வர்த்தக உலகம் இயங்கப்போகிறது என்று. பங்குசந்தை வேகமாக வளர்வதற்கு வேகம் முக்கியம். பெரும் திரளான தகவல்களை முறைபடுத்துவது முக்கியம். அதை மக்களுக்கு கொண்டு செல்வது அதை விட முக்கியம். இந்த மூன்றையும் இணையத்துடன் இணைந்த கணினி உலகில் தான் முடியும். சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்தார் Innovative Market Systems என்ற பெயரில். பேப்பரில் புழங்கிக்கொண்டிருந்த பங்குச்சந்தை தகவல்களை கணினியில் ஏற்றி தேவையான வடிவில் நிறுவனங்களுக்கு தருவது தான் அந்நிறுவனத்தின் சேவை. ஒரே வருடத்தில் மெரில் லின்ச் என்ற பெரிய நிதி நிறுவனம் அவர்களின் வாடிக்கையாளரானது மேலும் அந்நிறுவனத்தில் முதலீடும் செய்தது. ப்ளூம்பெர்க் என்ற அவரது பெயரிலேயே நிறுவனத்தை மாற்றினார். பங்குசந்தையில் உள்ள தகவல்களை மக்களுக்கு எளிதாக சென்று சேர இவரது நிறுவனத்தில் மேலும் சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. அடுத்த ஆறு வருடங்களில் அந்நிறுவனம் 8000 டெர்மினல்களை உலகம் முழுவதும் நிறுவியது.
பிறகு அந்நிறுவனம் அதனுடன் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் கால் பதித்தது. News சேனல்கள், பத்திரிகைகள், ஆன்லைன் வர்த்தக தளங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது. 2015 உலகமெங்கும் சுமார் 325000 டெர்மினல் சந்தாதாரர்கள் உருவாகினர். பிறகு இவர் நியுயார்க்கின் முக்கிய செய்தி நிறுவனங்களை கொண்டுவந்தார். இவருடைய wbbr அந்நகரின் முக்கியமான FM நிறுவனமாக மாறியது. பிறகென்ன தலைவர் அரசியலுக்குள்ளும் அடியெடுத்து வைத்தார். உலகின் மிகப்பெரிய வர்த்தக நகரான நியுயார்க்கின் மேயரானார். பனிரெண்டு வருடங்கள் அவர் அந்த பதவியில் இருந்தார். அதாவது அவர் போட்டி இட்டவரை அவர் தான் ராஜா. பிறகு நிறுவனத்தை கவனிக்க வந்துவிட்டார். இருமுறை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக அவரை நாடினார்கள். அவர் மறுத்துவிட்டார்.
நிறைய நிதி உதவியை அளித்திருக்கிறார். அவர் அரசியலில் இருந்த வரை அவரது தேர்தல் செலவு முழுக்க அவரே பார்த்துக்கொண்டார். மிகத் தாராளமாக தேர்தலுக்கு செலவு செய்தார். அந்த பதவியில் இருந்தவரை மிகக் கண்ணியமாகவும், நேர்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றினார். அதை பிசினஸாக பார்க்கவில்லை. சமூகத்திற்கு தனது பங்களிப்பாகவும் அதில் அவருக்கு இருந்த மகிழ்ச்சிக்காகவும் இதை செய்தார்.
பின்னாளில் அவர் பயின்ற பல்கலைகழகமான ஜான் ஹாப்கின்ஸ் தேவையான வசதிகளை நிதிகளை 1.8 பில்லியன் டாலர் அளவிற்கு கொடுத்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய நன்கொடைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே போல ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் அவரது தந்தை பெயரில் ஒரு மையத்தை ஏற்படுத்தி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும்வண்ணம் ஏற்படுத்தி இருக்கிறார். இவ்வாறு அவர் செய்த மொத்த நன்கொடைகளின் அளவு 8.2 பில்லியன்கள். இந்திய மதிப்பில் 58000 கோடிகள். இது எதோ வருமானவரி கணக்கு காட்ட அறக்கட்டளை தொடங்கி நானும் செய்கிறேன் வகையறாவாக இல்லை. உண்மையாகவே செய்திருக்கிறார்.
இன்று அவரது சொத்து மதிப்பு மட்டும் 52 பில்லியன் டாலர்கள்.இந்திய மதிப்பில் 3.64 லட்சம் கோடிகள். நம்ம ஊர் அம்பானிகெல்லாம் மேலே தான். இத்தனைக்கும் அவரது நிறுவனம் பங்கு சந்தையில் கிடையாது. பங்குசந்தையின் தகவல்களை பராமரிக்கும் நிறுவனமாக இருந்துகொண்டு அதில் இருப்பது நேர்மையான செயலாக இருக்காது. இவரது வெற்றி சந்தேகத்திற்கு உள்ளாகும். இதை படித்தபோது முகேஷ் அம்பானி ஞாபகம் வந்தார். மணிக்கண்ட்ரோல்.com என்று பங்குச்சந்தை தகவல் இணையதளத்தையும் நடத்திக்கொண்டு, சேனல்களையும் நடத்திக்கொண்டு பங்குசந்தையில் வெல்வதெல்லாம் என்ன வகை நேர்மையோ தெரியவில்லை. அதனாலேயே இவர்கள் நடத்தும் இணையதளத்தின் எந்த செய்தியையும் நாங்கள் பொருட்படுத்துவதில்லை.
இப்போ எங்க கதைக்கு வருகிறேன். நாங்கள் என்ன செய்கிறோம்? அன்று மைக்கேல் செய்த அதே சேவையை மொபைல் தொழில்நுட்பத்தில் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். என்ன ஒன்று அவர் மாதிரி பெரும் முதலீடோடு உள்ளே வராததால் போராடிக்கொண்டிருக்கிறோம். மற்றபடி நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் அவருடையதில் இருந்து பெரிதாக வேறுபடவில்லை என்பதே உண்மை.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக