வியாழன், 14 மார்ச், 2019

மேல்மருவத்தூர் பங்காரு அடியான் ஆக்கிரமித்த நீர்நிலைகள் புறம்போக்கு நிலங்கள் .. .மிரட்டப்படும் எதிர்ப்பாளர்கள்

ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்? - வழக்குத் தொடுத்தவருக்குக் கொலைமிரட்டல்... சி.ரவிக்குமார் திமன்றங்கள் பலமுறை கண்டனம் தெரிவித்தும்கூட, நீர்நிலைகளை அழித்துக் கட்டடங்கள் கட்டப்படும் போக்கு பல இடங்களில் தொடர்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள சாமானிய மக்களின் குடிசையை அகற்றுவதில் அரசு எந்திரம் காட்டும் வேகம், அதிகாரம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இருப்பதில்லை. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சொந்தமான
அறக்கட்டளையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது
ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை இயங்குகின்றன. மேலும், இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமாக வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களும் உள்ளன. இவற்றில் பல அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன என்று, அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.


“மேல்மருவத்தூர் அடிகளாரின் குடும்பத்துக்குச் சொந்தமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட அறக்கட்டளையின் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிகக் கட்டடங்கள், வாகன நிறுத்துமிடம், சித்தர் பீடத்தின் சில பகுதிகள் ஆகியவை அரசுப் புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டப்பட்டுள்ளன. கீழ்மருவத்தூர் ஏரியில் (சர்வே எண்: 47) நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம், ஹோட்டல் மற்றும் கடைகள் உள்ளன. மேல்மருவத்தூர் குளத்தின் (சர்வே எண்: 10) நான்கு பக்கங்களையும் சுருக்கி, மேல்மருவத்தூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஜி.பி பள்ளிக்குச் செல்லும் வழியை அமைத் துள்ளனர். குளக்கரையில் கடைகளைக் கட்டியுள்ளனர்.

மேல்மருவத்தூர் ஏரியில் (சர்வே எண்: 13/2) அடிகளார் திருமண மண்டபத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப் பட்ட இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. ஏரியிலேயே கார் பார்க்கிங், கட்டணக் கழிப்பிடம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்டவை அமைந்திருப்பதால், அடிகளார் திருமண மண்டபத்துக்குத் தடையில்லாச் சான்று பெறவில்லை. ஆனால், அந்தத் திருமண மண்டபம் பல வருடங்களாக இயங்கிவருகிறது. மேல்மருவத்தூர் கோயிலில் வேலை செய்பவர்களுக்கு ஏரிக்குக் கீழ் 30 வீடுகள் கட்டிக் கொடுத்திருப்பதால், ஏரியில் (சர்வே எண்: 59) சாலை அமைத்துள்ளனர். சோத்துப்பாக்கம் குளத்தில் (சர்வே எண்: 130) வீடுகளும் கடைகளும்,  சோத்துப்பாக்கம் ஏரியில் (சர்வே எண்: 190) 60 வீடுகளும் கட்டப் பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான கருணை இல்லத்துக்கு அரசு அனுமதி பெற்றுவிட்டு, அந்த இடத்தில் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்திவருகிறார்கள். பள்ளியின் வாயில் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஸ்டேட் பேங்க், குடோன், லாட்ஜ், கடைகள் உள்ளன. பழைய தேசிய நெடுஞ்சாலையில் (சர்வே எண்: 12) எட்டு கடைகளை அடிகளாரின் மகள் ஸ்ரீதேவி ஆக்கிரமிப்புச் செய்துள்ளார் என்று வருவாய்த் துறையினரே தகவல் அளித்திருக்கிறார்கள். ஆனால், அங்கு 45-க்கும் மேற்பட்ட கடைகள், வாகன நிறுத்தம், பெரிய ஷெட், நுழைவு வளைவுகள் உள்ளிட்ட ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

 2015- இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டார். எனவே, அந்த இடங்களை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் 2018 மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகிய மூவரும் சேர்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கைத் தெளிவாக இல்லாததால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ‘விரிவான அறிக்கை கொடுங்கள்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு, கடந்த ஒரு வருடமாக நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை. ஆனால், ‘கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவே ஆக்கிரமிப்புச் செய்துள்ளோம்’ என்று ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் அன்பழகன், அவராகவே மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.;

 நான் வழக்குத் தொடுத்ததால், எனக்குக் கொலை மிரட்டல்கள் வருகின்றன. 2018-ல் வருவாய்த் துறையினர் சர்வே செய்தனர். அன்றைய இரவே என் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினார்கள். ‘வழக்கை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால், உன் தலையை வெட்டிக்கொண்டுவந்து கோயிலில் வைத்துவிடுவேன்’ என்று மிரட்டினார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் என்மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். எப்படியோ தப்பிவிட்டேன். என் புகார்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்” என்றார் வேதனையாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதிபராசக்தி ஆன்மிகத் தொண்டு இயக்க நிறுவனர் அன்பழகனிடம் விளக்கம் கேட்டோம். “வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அது நிலுவையில் இருக்கும்போது அதுபற்றி விரிவாகப் பேச முடியாது. நாங்கள் ஆக்கிரமிப்புச் செய்திருக்கிறோமோ இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவுசெய்யும். கொலை மிரட்டல் இருப்பதாக அந்த நபர் சொல்வது வழக்கமான ஒன்றுதானே. அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” என்றார்.

- பா.ஜெயவேல்

படங்கள்: சி.ரவிக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக