வியாழன், 14 மார்ச், 2019

மோடியின் எண்ணம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்; தமிழகத்தில் நடக்காது' - ராகுல் காந்தி ஆவேசம்!


ராகுல் காந்தி
பிரசார கூட்டம்vikatan.com - sindhu-எல்.ராஜேந்திரன்" ரா.ராம்குமார் : மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வரும்போது 'மேக் இன் தமிழ்நாடு' என உற்பத்தி பொருள்களில் எழுதியிருக்கும். சீனா ஆதிக்கத்தில் இருந்து நம் நாடு விடுபடவேண்டும் என நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்திநாகர்கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ``தமிழகத்தின் தவப்புதல்வர் காமராஜர், மண்ணின் மைந்தர் மார்சல் நேசமணி ஆகியோரை நினைத்து இந்த உரையைத் தொடங்குகிறேன். ஸ்டாலின் அருமையான உரையை நிகழ்த்தியுள்ளார். வெகுவிரைவில் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வர உள்ளார். நான் கலைஞரை சந்தித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் மறைந்துவிடவில்லை அவர் தமிழக வளர்ச்சியில் இரண்டறக் கலந்திருக்கிறார். அதுபோலத்தான் காமராஜரும் மக்களுடன் இணைந்திருக்கிறார். கலைஞரும், காமராஜரும் மக்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க தலைமையில் இங்கு ஒன்றிணைந்திருக்கும் நாம் அனைவரும் தமிழக மக்களின் உணர்வைக் காப்பவர்களாக உள்ளோம். தமிழகத்தில் இன்று நடக்கும் ஆட்சி மோடியின் கைப்பாவையாக நடக்கிறது. கடந்த காலத்தில் தி.மு.க, அ.தி.மு.க இடையே போட்டி இருந்தது. இரண்டு கட்சியிலும் வலுவான தலைமை இருந்தது. இன்று தமிழகத்தில் பின்புறமாக ஆட்சி நடக்கிறது. மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கிய காலமும் உண்டு.

இன்று மோடி மத்தியில் இருந்துகொண்டு ஒவ்வொரு மாநிலத்தையும் அடக்கியாள நினைக்கிறார். வேறு எங்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். ஆனால், தமிழகத்தில் அடக்கியாளும் தன்மையை மக்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். தமிழர்கள் உண்மையின் பக்கம் உள்ளனர். நன்மைக்காக, நியாயத்துக்காகத் தமிழக மக்களின் குரல் இருக்கும். மோடி பொய்யைத் தவிர வேறொன்றும் சொல்வதில்லை. 2014-ல் ஆட்சிக்கு வரும் முன் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துவிட்டது, விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராடியதை நான் பார்த்திருக்கிறேன். பல மாநிலங்களில் விவசாயக் கடனை காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது. மோடி தொழில் வர்த்தக நண்பர்களுக்காக ஆட்சி செய்கிறார். ஜம்மு - காஷ்மீர் அனில் அம்பானி கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மோடி திட்டம் அனைத்தும் பணக்கார வர்க்கத்துக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு வருமானம் இல்லை, இளைஞர்களுக்கு வேலை இல்லை. இந்தியாவின் காவலாக இருக்க விரும்புகிறேன், பிரதமராக இருக்க விரும்பவில்லை என்கிறார் மோடி. பணக்கார அணில் அம்பானிக்கு 30,000 கோடி எடுத்துக் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் அரசில் ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்க இருந்தோம். மோடி அந்த ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு வழங்கிவிட்டார். அந்த விமானத்தை 1,526 கோடி ரூபாய்க்கு வாங்கி மக்கள் வரிப்பணத்தை வீணடித்துவிட்டனர்.
ஹெச்.சி.எல்.க்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கொடுக்க பிரான்ஸ் நாட்டு அதிபரிடம் மோடி பேசியிருப்பதாக என்னிடம் கூறினார்கள். அதனால் 30,000 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகிவிட்டது. ஆனாலும் உண்மை வெல்லும், அந்த உண்மையால் மோடி சிறை செல்வார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம். முதலில் ஜி.எஸ்.டி.வரியை மாற்றி அமைப்போம். அது சாதாரண மக்களை பாதிக்காத வகையில் மக்களுக்கான வரியாக அமையும். தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறும். இப்போது சீனா கம்பெனி மொபைல் போன் வைத்துள்ளீர்கள். சட்டையில் `மேட் இன் சீனா' என எழுதியிருக்கும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வரும்போது `மேக் இன் தமிழ்நாடு' என உற்பத்தி பொருள்களில் எழுதியிருக்கும். சீனா ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுபட வேண்டும். நீரவ் மோடி, அனில் அம்பானி ஆகியவர்களுக்குக் கோடிக்கணக்கில் மோடி கொடுத்துவிட்டார். நாங்கள் கோடிக்கணக்கான மக்களுக்குக் கடன் வழங்குவோம். இந்தியாவில் சீனாவைவிட வலிமையான உற்பத்தியைப் பெருக்குவோம். தமிழகத்தில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சிறப்பாக்குவோம். இந்தியாவில் பசுமைப் புரட்சியை, வெண்மைப் புரட்சியையும் கொண்டு வருவோம். மக்களுக்குக் குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்ட திட்டத்தை அளிக்க இருக்கிறோம். குறைந்தபட்ச வருவாயை உறுதிப்படுத்தும் திட்டத்தைத் தொடங்குவோம்.
சாதி, மதம், இனம் மொழி பார்க்காமல் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்றுத்தருவோம். தமிழக மக்களுக்குப் புயல் நிவாரணங்களை மத்திய அரசு தரவில்லை. ஆனால் 15 பேருக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கொடுத்துவிட்டார்கள். மீனவர்கள் வாழ்க்கை கடலில் மிதக்கிறது. மீனவர்கள் குடும்பங்களுக்கு மறுவாழ்வு வழங்குவோம். மீனவர்களின் உரிமையைக் காக்க மத்தியில் மீனவர் நலத்துறை அமைச்சகம் அமைக்கப்படும். மீனவர்களின் துன்பங்களை மாற்றி அவர்கள் வாழ்க்கையை உயர்த்துவோம். நீங்கள் அனைவரும் நாட்டின் முக்கியமானவர்கள். நாட்டை வாழவைத்துக் காப்பவர்கள். உங்கள் உரிமைக்குரல் நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். முதலில் இந்திய பெண்கள் உரிமைக்காக 33 சதவிகிதத்தைப் பெற்றுத்தருவோம். 33 சதவிகிதம் உரிமையை மேலவை, கீழவையிலும் கொண்டுவருவோம். பெண்களுக்குச் 33 சதவிகிதம் மத்திய அரசுத் துறையில் வழங்கப்படும்.
மேடையில் உன்னதமான தலைவர்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் உரிமையைக் காக்கும் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள். இங்கிருக்கும் தலைவர்கள் அனைவரும் தமிழர்களின் உரிமையை விட்டுத்தரமாட்டோம். நம் தமிழ்மொழியை மோடியும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அழிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். சரித்திரத்தை மாற்றுவதை, மாணவர்களின் உரிமையைப் பறிப்பதை அனுமதிக்கமாட்டோம். மோடி தமிழக மக்களை மட்டும் அழிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழியையும் அழித்து வருகிறார். ஒரு மொழி, ஒரு மதம் என்பதுதான் மோடியின் திட்டம். மோடி தமிழக மக்களின் எதிரி. அத்தனை மக்களின் மொழி கலாசாரத்தை மதிக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அனைத்து கலாசாரமும் மதிக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக