சனி, 30 மார்ச், 2019

ராமதாஸின் ஜாதி நிறத்தை மாற்றியதே திருமாதான்!'

ராமதாஸ்vikatan.com - vijayanand.a : 93-ம் ஆண்டில் மதுரைக்கு ராமதாஸை அழைத்துச் சென்று கூட்டம் நடத்தியிருக்கிறார் திருமாவளவன். அப்போதெல்லாம் ராமதாஸ் யார் என்றே மக்களுக்குத் தெரியாது.சி
தம்பரம் தொகுதி முழுக்க பானைச் சின்னத்தைக் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் வி.சி.க. தொண்டர்கள். `திருமாவளவன் குறித்து ராமதாஸ் பேசிய கருத்துகளுக்குப் பிரசாரத்தில் பதில் கொடுத்து வருகிறோம். சொல்லப் போனால், சாதி முத்திரையிலிருந்து ராமதாஸின் நிறத்தை மாற்றியதே திருமாதான்' என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள்.
மூப்பனார்தி.மு.க கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தையும் சிதம்பரம் தொகுதியில் பானைச் சின்னத்தையும் முன்வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். உதயசூரியன் சின்னம் என்பதால், வி.சி.க வேட்பாளர் ரவிக்குமாருக்கான செலவுகளை தி.மு.க கவனித்துக் கொள்கிறது. சிதம்பரம் தொகுதியில் தேர்தல் செலவுகளை மேற்கொள்வதில் நெருக்கடிகள் இருப்பதால், கட்சித் தொண்டர்களிடம் நிதி உதவி கோரியிருக்கிறார் திருமாவளவன். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், `தேர்தல் என்பது எத்தகைய சவால்கள் நிறைந்த களம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவற்றில் முதன்மையானது பொருளாதார நெருக்கடியே ஆகும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள உங்களின் மகத்தான பங்களிப்பும் தேவை என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றியைப் பெறுவதற்கு தங்களால் இயன்ற அளவில் நிதியுதவி அளித்திட வேண்டுகிறேன்' எனக் கோரியிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று வி.சி.க தொண்டர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்துப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அப்போது, `திருமாவளவனைப் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மதுரையில் இருந்த திருமாவளவனை அழைத்து வந்து அரசியலில் அறிமுகம் செய்தது நான்தான். பின்னர் இருவரும் இணைந்து பல்வேறு இயக்கங்களை நடத்தினோம். வடலூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்து, முதன் முதலாக அவரைப் பேசவைத்தேன். `உங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கம் நடத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்துங்கள்' என்றேன். ஆனால் அவர், இளைஞர்களுக்கு வேறு மாதிரி பயிற்சி கொடுத்தது, பிறகுதான் தெரிந்தது.

அந்தக் கட்சிக் கொடியைப் பார்த்தாலே மக்கள் முகம் சுளித்தனர். அவர் எனக்கு `அம்பேத்கர் விருது', 'தமிழ்க் குடிதாங்கி' எனப் பட்டம் கொடுத்தார். எனது தோட்டத்தில் அம்பேத்கர் படத்தை அவர் கையால் திறக்கவைத்தேன்.

ஈழத்தமிழர் பிரச்னையில் இணைந்து போராடினோம். ஆனாலும், அவரிடம் எந்த மாற்றமும் இல்லை' எனப் பேசினார். ராமதாஸின் இந்தப் பேச்சு வி.சி.க தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராமதாஸின் கருத்தை திருமாவளவன் ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.


வி.சி.க மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம். ``திருமாவை அரசியலுக்கு நேரடியாக அழைத்து வந்தது நான்தான் எனப் பேசியிருக்கிறார் ராமதாஸ். அதே கூட்டத்தில் பேசும்போது, `கருணாநிதியிடம் பேசி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கியது நான்தான்' என்கிறார். அவருக்கு மனநோய் ஏற்பட்டுவிட்டதைத்தான் பார்க்க முடிகிறது. 99-ம் ஆண்டில் திருமாவை நேரடி அரசியலுக்கு அழைத்து வந்தது ஜி.கே.மூப்பனார்தான். `உங்கள் பின்னால் பெரும் படையே இருக்கிறது. தேர்தல் அரசியலில் இறங்கினால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்' எனக் கூறியவர் மூப்பனார். அதுவரையில் தேர்தல் புறக்கணிப்பு அரசியலைத்தான் திருமாவளவன் முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

மூப்பனாருடன் இணைந்துதான் வி.சி.க முதன்முதலாகத் தேர்தலையே சந்தித்தது. அதே காலகட்டத்தில், மூப்பனாரிடம் பெரிய பெரிய பேப்பர் கட்டுகளைக் கொடுத்து, `இவரைச் சேர்க்காதீர்கள். இவர் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் ரௌடிகள். உங்களைப் போன்றவர்கள், திருமாவளவனுக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்வதன் மூலம், மக்கள் இவரை நல்லவர் என நம்பிவிடுவார்கள்' எனக் கதை கட்டிவிட்டவர் இந்த ராமதாஸ்தான்.< ஆனால், இப்போது கதையையே திரித்துப் பேசி வருகிறார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், 93-ம் ஆண்டில் மதுரைக்கு ராமதாஸை அழைத்துச் சென்று கூட்டம் நடத்தியிருக்கிறார் திருமாவளவன். அப்போதெல்லாம் ராமதாஸ் யார் என்றே மக்களுக்குத் தெரியாது.

அவர் மீது வன்னியர் சாதி முத்திரை இருந்தபோது, `இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் வேலை செய்கிறார்' எனக் கூறி தமிழ்க் குடிதாங்கி பட்டத்தைக் கொடுத்து ராமதாஸின் நிறத்தை மாற்றியவர் திருமாவளவன்" என விவரித்தவர்,

சிதம்பரம் தொகுதியில் களநிலவரம் வி.சி.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது. காடுவெட்டி குரு பிரச்னை, வேல்முருகன் எதிர்ப்பு போன்ற காரணிகளால் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாமல் பின்வாங்கிவிட்டது பா.ம.க. திருமாவுக்கு எதிராக பா.ஜ.க-வும் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கிறது. சித்தாந்தரீதியாகவும் பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறார் திருமா.

`அனைத்துச் சமூக தலைவர்களையும் சமாதானப்படுத்த முடிகிறது. திருமாவைக் கொண்டு வர முடியவில்லை' என்ற கோபம் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. இதற்காக அ.தி.மு.க துணையோடு பணத்தை வாரியிறைக்கிறார்கள். அ.தி.மு.க-வின் சதிகளை முறியடிக்கவும் வி.சி.க. தயாராக இருக்கிறது. பானைச் சின்னம் மக்களிடம் பெரியளவில் சென்று சேர்ந்துவிட்டது. இந்தச் சின்னம் கிடைத்ததும் ஒருவகையில் நல்லதுதான். தொகுதி மக்கள் கொடுக்கும் ஆதரவால் உற்சாகத்தில் இருக்கிறார் திருமா" என்றார் அமைதியாக >

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக