சனி, 30 மார்ச், 2019

புதிய இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: மோடி

புதிய இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: மோடிமின்னம்பலம் :புதிய இந்தியாவை நோக்கிய பயணத்தில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு தெலங்கானா மாநில மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகத் தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தனக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களையும், சுமத்தப்பட்ட குற்றங்களையும் தாண்டி, மக்களின் பேராதரவுடன் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். மக்களின் ஆதரவால்தான் இந்த அரசாங்கத்தைத் தன்னால் சிறப்பாக நடத்தமுடிவதாகக் கூறிய அவர், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் ராசிப்பலன் தொடர்பான நம்பிக்கையை விமர்சனம் செய்தார். சென்ற ஆண்டில் சந்திரசேகர ராவ் வெற்றிபெற்றவுடன் அமைச்சரவையைக் கூட்டுவதில் சந்திரசேகர ராவ் மிகவும் தாமதித்துவிட்டதாக மோடி குற்றஞ்சாட்டினார்.

தெலங்கானா மாநிலம் மஹபூப்நகரில் பிரச்சாரம் செய்த மோடி மேலும் பேசுகையில், “எனது ஐந்தாண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சிறப்பான மேம்பாடு ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ’மிஷன் சக்தி’ மூலமாக விண்வெளி துறையில் இந்தியா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி நீங்கள் வெறும் பாராளுமன்ற உறுப்பினருக்காகவோ அல்லது பிரதமருக்காகவோ வாக்களிக்கப்போவதில்லை; நீங்கள் புதிய இந்தியாவுக்காக வாக்களிக்கப் போகிறீர்கள். அது தெலங்கானா மாநிலத்துக்கும் நன்மை பயக்கும். தற்போது நாட்டில் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு சிறப்பாக உள்ளது” என்று கூறி பாஜகவுக்கு வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக