செவ்வாய், 26 மார்ச், 2019

சுதர்சன நாச்சியப்பனை சிதம்பரம் கவிழ்த்தது எப்படி?

கார்த்தி, கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ், சிதம்பரம், காங்., மன்மோகன் சிங், சோனியா, ராகுல்,Congress,Manmohan Singh,தினமலர் : புதுடில்லி: காங்., வேட்பாளர் பட்டியல் வெளியான போது, அதில் சிவகங்கை தொகுதி மட்டும் இடம்பெறவில்லை. அந்த தொகுதியை பெற, காங்., மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன், நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் முட்டி மோதினர்.
வேட்பாளர் தேர்வு குழுவில் இருக்கும்,13 பேரில், ஏழு பேர் கார்த்திக்கு சீட் கொடுக்கலாம் என்றனர். மற்றவர்கள், கார்த்தியும் அவரது குடும்பமும் சந்திக்கும் வழக்குகளை சுட்டிக் காட்டி எதிர்த்தனர். 'ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான், எம்.பி., பதவி' என்ற ராகுலின் அறிவுறுத்தலையும் நினைவூட்டினர். தேர்வு குழுவின் திண்டாட்டத்தை அறிந்த ராகுல், டில்லியில் முகாமிட்டிருந்த சுதர்சன நாச்சியப்பனை அழைத்தார். 24ம் தேதி, காலையில் ராகுலை சந்தித்தார் நாச்சியப்பன். 'நீங்கள் தான் சிவகங்கை வேட்பாளர். உடனே, கிளம்பி, வேட்பு மனு தாக்கலுக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என ராகுல் கூறி சென்னைக்கு அனுப்பினார். 

அன்று மதியம் வெளியான காங்., வேட்பாளர் பட்டியலை பார்த்த நாச்சியப்பனுக்கு கடும் அதிர்ச்சி. அவரது பெயர் இருக்க வேண்டிய இடத்தில் கார்த்தி பெயர் இருந்தது. இடையில் என்ன நடந்தது என்பது குறித்துதான், காங்கிரசார் பரபரப்பாக பேசுகின்றனர். டில்லியில், 23ம் தேதி இரவு வரை கார்த்திக்கு ஆதரவான சூழல் இல்லை. அப்பா சிதம்பரத்தை நெருக்கியிருக்கிறார் கார்த்தி. அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசினார்.'உங்கள் தலைமையிலான ஆட்சியில், நான் எடுத்த உறுதியான நடவடிக்கைகள், இன்று எனக்கு எதிராக நிற்கின்றன.

பா.ஜ., அரசு கொடுக்கும் அத்தனை நெருக்கடிகளையும் கட்சி தலைமைக்கு அடுத்த நிலையில், நான்தான் சந்தித்து வருகிறேன். தமிழகத்தில், மூப்பனாருக்கு பிறகு, காங்கிரசுக்கு இருக்கும் ஒரே முகம் நான்தான். அதனாலேயே, என்னையும், என் குடும்பத்தையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மோடியும், சுப்பிரமணியன் சுவாமியும் துடிக்கின்றனர். இந்த வயதில், கோர்ட், கோர்ட்டாக ஏறி இறங்குகிறேன். என்னை ராஜ்யசபா எம்.பி.,யாக்கி விட்டதற்காக, என் மகனுக்கு சீட் மறுத்து, அவனை தவிக்க விடலாமா? நம் கட்சியை விட்டால் அவனுக்கு என்ன பாதுகாப்பு?' என்று தனக்கே உரிய பாணியில் வாதங்களை முன்வைத்தார் சிதம்பரம். குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், அகமது படேல், அந்தோணி ஆகியோரிடமும் உருக்கமாக பேசியிருக்கிறார்.


'வேட்பாளர் தேர்வில் தலையிட மாட்டேன்' என, கூறி அனைவரையும் தட்டிக் கழித்து வந்த மன்மோகன் சிங், சிதம்பரம் பேச்சால் கலங்கினார். சோனியாவிடம் பேசினார். 'நெருக்கடியான நேரங்களில், காங்கிரசுக்கு ஆதரவாக சிதம்பரம் இருந்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக, ராகுலுக்கு பக்கபலமாக இருக்க வேண்டியவர் சிதம்பரம். இப்படித்தான் 2004ல் அவரை, காங்கிரசுக்கு அழைத்து வந்து, சிவகங்கையில் வெற்றி பெற வைத்து, நிதியமைச்சர் ஆக்கினோம். அப்போதும், இதே பிரச்னை எழுந்தது. சுதர்சன நாச்சியப்பனிடம் நீங்கள் சொன்னதும், அவர் அமைதியாகி விட்டார். பின், அவரை ராஜ்ய சபா எம்.பி.யாக்கி அமைச்சராக்கினோம். அதேபோல, இம்முறையும் செய்யலாம்' என்றார். 'எத்தனையோ முன்னாள் அமைச்சர்கள் இருந்தாலும், சிதம்பரம் மீது தான் மோடி அரசு வன்மம் காட்டுகிறது. அவரது குடும்பமும் சிக்கலில் இருக்கிறது. இந்த நேரத்தில், நாம் அனுசரணையாக இல்லாவிட்டால், தொண்டர்களே அதிருப்தி அடையக்கூடும்' என, மென்மையான எச்சரிக்கையும் விட்டார் மன்மோகன் சிங்.


இப்படி பல தரப்பில் இருந்தும் அழுத்தம் வர, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினார் ராகுல். அவரும், பச்சைக் கொடி காட்டியதை அடுத்து, 'ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் எம்.பி., வாய்ப்பு' என்ற கொள்கையை தளர்த்தினார் ராகுல். அதன்பிறகே, வேட்பாளர் பட்டியலில் கார்த்தி இடம் பெற்றார். அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே கார்த்தியும், சிதம்பரமும் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர். அதே நேரம், எதிர் கோஷ்டியினரும், கார்த்தியை வீழ்த்த களம் இறங்கி விட்டனர். சிவகங்கை காங்கிரஸ் சீமையாக இருந்தாலும், சிதம்பரம் குடும்பத்துக்கு இருக்கும் எதிர்ப்பலையில் நீந்தி வெற்றிக் கோட்டை தொட, கார்த்தி போராட வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக