வெள்ளி, 22 மார்ச், 2019

தருமபுரி மாணவிகளை எரித்தவர் அமமுக வேட்பாளர்! கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா.. கருகிய மாணவிகள்

மின்னம்பலம் :அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணைப்
பொதுச் செயலாளர் தினகரன் இன்று (மார்ச் 22) வெளியிட்டார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிடுவதால் அவரை எதிர்க்க வலுவான வேட்பாளர் வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் பழனியப்பனை நிறுத்தியுள்ளார். பழனியப்பனின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு தருமபுரி மாவட்ட அமமுக செயலாளரான டி.கே.ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் இரண்டாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகள் எரிப்பு வழக்கில் சிறைசென்றவர் அமமுக வேட்பாளர்!வழக்கின் விபரம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், 2000ஆவது ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த வன்முறையின்போது, கோவை வேளாண் பல்கலைக் கழகத்திலிருந்து சுற்றுலா சென்று வந்த மாணவிகளின் பேருந்துக்கு சிலர் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர். இதில் சிக்கி கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல்கருகி பலியாகினர்.


தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய அதிமுக ஒன்றியச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு மரண தண்டனையும், ராஜேந்திரன் உள்பட 25 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து 2007 பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் மரணமடைந்துவிட்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து 28 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், 3 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தும், 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தும் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை காலத்திலேயே தண்டனையை அனுபவித்துவிட்டதால் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
பேருந்து எரிப்பு சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்த சாலை மறியலை ஒருங்கிணைத்தவர் என்பதன் அடிப்படையில் டி.கே.ராஜேந்திரன் இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இதே டி.கே.ராஜேந்திரனை வேட்பாளராக அறிவித்துள்ளார் தினகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக