வெள்ளி, 22 மார்ச், 2019

BBC : திருப்பூர் மக்களவைத் தொகுதி: வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெற்றியை நிர்ணயிப்பார்களா?

தொழில் வளர்ச்சி அதிகமாகவும் பரவலாகவும் உள்ள மேற்குத் தமிழகத்தின்
முக்கியமானதொரு நகரமான திருப்பூர், தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. காலம் காலமாகவே கொங்கு மண்டலம் என்று கூறப்படும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் இரு முக்கிய நகரங்களாக கருதப்பட்ட கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய இரு நகரங்களுக்கு மத்தியில், இருக்கும் திருப்பூர், அந்த இரு நகரங்களில் இருந்தும் கிட்டத்தட்ட சம தொலைவிலேயே அமைந்துள்ளது.
அதனால், நகர்ப்புறங்களை அதிகம் உள்ளடக்கிய கோவை மக்களவைத் தொகுதி, கிராமப்புறங்களை அதிகம் உள்ளடக்கிய ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகிய இரண்டின் தன்மையையும் ஒருங்கே பெற்றுள்ளது திருப்பூர் தொகுதி.
பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதி, 2009இல் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின்போது இல்லாமல் போனது.
இந்தத் தொகுதியில் இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதியுடன், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் ஓர் அங்கமாக இருந்த திருப்பூர் சட்டமன்றத் தொகுதி இணைக்கப்பட்டு திருப்பூர் மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

தேர்தல் ஆண்டு வென்றவர் கட்சி இரண்டாமிடம் கட்சி





2009 சி. சிவசாமி அதிமுக கார்வேந்தன் காங்கிரஸ்
2014 வா.சத்தியபாமா அதிமுக செந்தில்நாதன் திமுக
1952 முதல் 2006 சட்டமன்றத் தேர்தல் வரை திருப்பூர் ஒரே சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளாக அது பிரிக்கப்பட்டது.
தற்போது திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது திருப்பூர் மக்களவைத் தொகுதி.
1952 முதல் 2004 வரை நடந்த 13 மக்களவைத் தேர்தல்களில், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக ஆறு முறையும், காங்கிரஸ் நான்கு முறையும், திமுக மூன்று முறையும் வென்றுள்ளன.
திருப்பூர் மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டபின், இதுவரை நடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் அதிமுகதான் அங்கு வென்றுள்ளது.

திருப்பூருக்கு பெருகிவரும் முக்கியத்துவம்

1980களில் திருப்பூரில் தொடங்கிய பின்னலாடைத் தொழில் வளர்ச்சி மேற்குத் தமிழகத்தின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் சமூக-கலாசார தளம் ஆகிய இரண்டிலுமே மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த மாற்றங்களில் அதிகமானவை நடந்தது கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில்தான் எனலாம்.

கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் இருந்தபோது வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொழிலுக்காக அதிகம் திருப்பூரைத் தேடி வருவது நிகழ்ந்தது.
2008இல் திருப்பூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்த சில பகுதிகளைப் பிரித்து, அவற்றை ஒன்றாக இணைத்து தனி மாவட்டமாக திருப்பூர் உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டம் உருவான மூன்றே மாதங்களில் தனி மக்களவைத் தொகுதியாக உருவானது.
    இவை அனைத்தும் தொழில் நகரம் எனும் அளவில் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்த திருப்பூரை, சமூக-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மாற்றியது.

    பிரதமர் நரேந்திர மோதியின் பிரசாரம்

    இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபின், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்தில் கலந்துகொண்ட முதல் பொதுக்கூட்டம் நடைபெற்ற ஊர் திருப்பூர்.

    படத்தின் காப்புரிமை Arun Karthick
    Image caption பிப்ரவரி மாதம் திருப்பூரில் நடைபெற்ற ஓர் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோதியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
    அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கினர் வட இந்தியத் தொழிலாளர்கள் என்கின்றனர் உள்ளூர் ஊடகவியலாளர்கள்.
    திருப்பூர் மக்களவைத் தொகுதியின் பெரும்பாலான வாக்காளர்களைக் கொண்டுள்ள திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாக்காளர்களாக உள்ளனர்.
    இவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியினரையும் வெற்றி பெற வைக்கும் அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் இல்லையென்றாலும், போட்டி மிகவும் நெருக்கமாக இருக்கும் சமயத்தில், வாக்குரிமை உள்ள சில ஆயிரம் பேர் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடும் என்பது மறுக்க முடியாதது.
    திருப்பூர் தொகுதியின் பிரச்சனைகள்
    பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு என புதிதாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனை இங்கு விரைவில் அமைக்கப்படவுள்ளது. இது இங்கு ஒரு நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
    இது மட்டுமல்லாது தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி, பெண் தொழிலாளர்களுக்கான அரசு தங்கும் விடுதி, ஏற்றுமதியாகும் பின்னலாடை உற்பத்திப் பொருட்களை துறைமுகம் கொண்டு சேர்ப்பதற்கான சிறப்பு சரக்கு ரயில் ஆகிய கோரிக்கைகள் ஏற்கப்படாமல் உள்ளன.
    பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரை அமலுக்கு வந்தபின் தொழில் துறையில் ஏற்பட்ட சரிவு, அதனால் உண்டான வேலையிழப்பு, நீர்நிலைகளில் சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் சாயக் கழிவுகளால் உண்டாகும் மாசு ஆகியனவும் திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முக்கியப் பிரச்சனையாக உள்ளன.

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் உள்ள திருப்பூர் நகரில் போதிய உள்கட்டமைப்பு முன்னேற்றம் இல்லாததும் பொதுமக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
    ஆனால், திருப்பூருக்கு வெளியே உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் முக்கியத்துவமும் பிரச்சனைகளும் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.
    அந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் அதிமுக பாரம்பரியமாக செல்வாக்கு மிக்க பகுதிகளாக பார்க்கப்படுகின்றன.
    பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வேளாண் பிரச்சனை பிரதானமாக உள்ளது. அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டல் திட்டம், நொய்யல் நதியில் நிலவும் சாயக் ஆலைக் கழிவுகளால் உண்டான மாசு சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் மீது செலுத்தும் தாக்கம், நீர்ப்பாசன வசதிகளின் போதாமை, வேளாண் பொருட்களுக்கான குளிர்பதன வசதியுடைய கிடங்கு அமைக்கப்படாதது ஆகியன இங்கு முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
      வேளாண் நிலங்களில் பதிக்கப்பட்டுள்ள கெயில் எரிவாயு குழாய், வயல் வெளிகளில் நடப்பட்டுள்ள மின் கோபுரங்கள் போன்றவை கடந்த காலங்களில் விவசாயிகளின் போராட்டங்களுக்கான காரணிகளாக இருந்துள்ளன.

      சமீபத்திய தேர்தல்கள்

      2009 ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட புதிய கட்சியான கொங்குநாடு முன்னேற்றக் கழகம், திருப்பூரில் 12.85% வாக்குகளைப் பெற்றது. தமிழகம் முழுதும் கணிசமான வாக்குகளைப் பெற்று பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பெற்ற தேமுதிக, கொங்கு மண்டலத்தில் நான்காம் இடம் பெற கொமுக ஒரு காரணமாக இருந்தது.
      கொமுகவில் இருந்து பிரிந்து, அக்கட்சியைவிட ஒப்பீட்டளவில் வலுவாகத் தோன்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திமுக கூட்டணியில் இருப்பது அந்தக் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
      2014 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தேர்தலில் மூன்று சத்தியபாமாக்கள் களமிறங்கினர். ஒருவர் அதிமுக. இருவர் சுயேச்சைகள். அதிமுக வேட்பாளர் வென்றார்.

      இரண்டாவது இடம் பிடித்தவர் தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமார். திமுக வேட்பாளர் செந்தில்நாதன் மூன்றாம் இடம்தான் பெற்றார்.
      இந்த முறை திமுக கூட்டணி சார்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன் போட்டியிடுகிறார்.
      அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.என்.ஆனந்தன் போட்டியிடுகிறார்.
      15,11,643 வாக்காளர்கள் உள்ள இந்தத் தொகுதியில் 7,56,922 எனும் எண்ணிக்கையில் உள்ள பெண் வாக்காளர்கள், 7,54,593 எனும் எண்ணிக்கையில் உள்ள ஆண் வாக்காளர்களைவிட சற்றே அதிகமாக உள்ளனர். இங்குள்ள மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 128.
      பிரதமர் பிரசாரம் செய்த தொகுதியில் அதிமுக செல்வாக்கு மிக்க சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மக்களவைத் தொகுதியில் அதிமுக வெல்லுமா இல்லை கம்யூனிஸ்டுகள் வலுவாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் தொழில் நகரத்தை உள்ளடக்கியது என்ற வகையிலும், கொமுதேகவை இணைத்து திமுக கூட்டணி கூட்டணி அமைத்த வியூகமும் வெல்லுமா என்பது இன்னும் ஒரு மாத காலத்தில் தெளிவாகும்.

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக