ஞாயிறு, 10 மார்ச், 2019

காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் .. திருவள்ளூர் அரக்கோணம் ஆரணி திருச்சி சிவகங்கை......

காங்கிரஸ் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரியில்
tamilthehindu : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்டுள்ள 9 தொகுதிகளில் இறுதிப்பட்டியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல்
தொகுதியை குறிப்பிட்டு டெல்லி மேலிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது இதில் என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து பெரிய அளவில் இழுபறி நீடித்தது.
தற்போதும் இழுபறி நீடித்து வரும் நிலையில் இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு ஓரளவு சம்மதத்தை திமுக தெரிவித்துள்ளதாகவும் தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உறுதிப்படுத்தப்படும் என காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.

காங்கிரஸ் தரப்பில் வழக்கமாக ஏற்கப்படும் கன்னியாகுமரி, சிவகங்கை, ஆரணி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தொகுதிகள் திமுக வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அதேநேரம் திருச்சி, ஈரோடு, தென் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்க அதில் திருச்சி அரக்கோணம் ஆரணி உள்ளிட்ட தொகுதிகளுக்கு திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் தென் சென்னை தொகுதியில் திமுக நிற்க முடிவு செய்துள்ளது. அதனால் காங்கிரசுக்கு ஒதுக்க திமுக மறுத்துவிட்டது. இதேபோன்று ஈரோடு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்படுவதால் அதையும் காங்கிரசுக்கு கொடுக்க மறுத்துவிட்டது. இது தவிர கூடுதலாக திடீரென காங்கிரஸ் டெல்லி மேலிடத்தில் இருந்து திண்டுக்கல் தொகுதியை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்லில் முக்கியமான நபர் நிறுத்தப்பட உள்ளதாகவும் அதற்காக அந்த தொகுதியை கேட்டுப் பெறுங்கள் என்று மேலிடம் கூறிய அடிப்படையில் திண்டுக்கல் தொகுதியையும் காங்கிரஸ் கேட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.
ஆனால் திண்டுக்கல் தொகுதியை தருவதற்கு திமுக தரப்பில் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், தொடர்ந்து அழுத்தம் காரணமாக திண்டுக்கல் தொகுதியை அரைமனதுடன் திமுக விட்டுக் கொடுத்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரியில் நிற்பது உறுதியாகி உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.
மேற்கண்ட பட்டியலை தமிழக காங்கிரஸ், டெல்லி தலைமைக்கு அனுப்பி உள்ளதாகவும், டெல்லி தலைமை அதற்கு ஒப்புதல் அளித்த மறுகணம் அறிவாலயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அறிவாலயம் வருவார்கள் என காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.
இதன்மூலம் காங்கிரஸ் வழக்கமாக நிற்கும் தென்சென்னை, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படவில்லை. அதே நேரம் திமுகவின் முக்கிய தொகுதிகளான அரக்கோணம், திண்டுக்கல், விருதுநகர் போன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக