ஞாயிறு, 3 மார்ச், 2019

வளமான மண்ணின் உயிரை உறிஞ்சியது யார்?

வளமான மண்ணின் உயிரை உறிஞ்சியது யார்?மின்னம்பலம் :வறட்சியின் பிடியில் நல்லாங்குடி சிக்கியது ஏன்? நரேஷ் : தமிழகத்தில்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் அதை நம்ப முடியுமா என்று தெரியவில்லை.
25 அடி இருக்கும் அந்தத் தொட்டி. சிமென்ட் ரிங்குகளால் கட்டப்பட்டிருந்தது. அதை உறைக்கிணறு என்றார்கள். அதன் அடியில் இருக்கும் மண்ணைக்கூட முழுமையாக மூடாத அளவுக்கான நீர்தான் இருந்தது. அதிகபட்சமாக இரண்டு வாளி நீர் இருக்கும், அவ்வளவுதான். அந்த மொத்த ஊருக்கும் அதுதான் குடிநீர்.
ராமநாதபுரத்திலிருந்து உத்திரகோசமங்கை செல்லும் வழியில் இருக்கிறது நல்லாங்குடி. நல்லாங்குடியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது மாலங்குடி. அங்கிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலிருந்தது அந்த ஊருக்கான உறைக்கிணறு. ஒவ்வொரு குடும்பத்தின் பிரதிநிதிகளும் காலிக் குடங்களை நடைவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

அந்த வண்டியைப் பற்றிச் சொல்ல வேண்டுமே… ராமாநாதபுரத்துக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தள்ளுவண்டி அது. ஐந்து குடங்கள் வைக்கும் அளவுக்கான இடைவெளியுடன், இரண்டு சக்கரங்களும் கைப்பிடியுமாக ஒவ்வொரு வீட்டிலும் வறட்சியின் அடையாளமாக நின்றிருந்தது அவ்வண்டி.

இன்னொரு சிறப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். இவ்வளவு வறட்சியான ஊருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வர மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும், அந்த பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப்படும் பொருட்களில் தவறாமல் இடம்பெறுவது இந்த தள்ளுவண்டிதான்.
அடுத்ததாக அந்த உறைக்கிணற்றில் தண்ணீர் எடுக்கும் முறையைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நீர் இறைப்பதற்கு என்று ஒரு சிறிய பெயின்ட் பக்கெட் அல்லது அதற்கு இணையான தூக்கி வாளியும் கயிறும் எடுத்துவர வேண்டும்.
அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து வண்டியை 1.5 கீலோமீட்டர் தள்ளி வந்து வரிசையில் நிற்க வேண்டும். ஒரு ஆளுக்கு ஐந்து குடங்களுக்குத்தான் அனுமதி.
மண்ணுடன் மண்ணாக இருக்கும் நீரைச் சுரண்டி இறைக்க வேண்டும். அந்த சிறிய வாளியிலும் பாதி மட்டுமே நிறைந்து மேலே வரும்.

அவர்கள் நீர் எடுக்க எடுக்க, சொட்டு சொட்டாக நீர் சுரக்கும். கொஞ்சம் வேகமாக இறைத்தாலும், நீர் குறைந்த மண்ணுடன் கலந்த நீர்தான் வரும். எனவே நீர் சுரக்கக் காத்திருந்து பொறுமையாகத்தான் இறைக்க வேண்டும்.
ஒரு குடம் நிறைவதற்குக் குறைந்தபட்சம் அரை மணிநேரம் ஆகும். அதுவே இரண்டு பேர் ஒரே நேரத்தில் நீர் இறைத்தால் ஒரு குடம் நிறைய ஒரு மணி நேரம் ஆகும்.
இறைத்த நீரை உடனடியாகக் குடிக்க முடியாது. ஏனென்றால் நீரைச் சுரண்டி எடுத்ததால் அதில் மணல் துகள்கள் அதிகம் படிந்திருக்கும். கலங்கிய நீர் தெளிந்த பிறகே அருந்த முடியும்.
10.30 மணிக்கு மேல் நீர் இறைக்க இறைக்க, உடலில் உள்ள நீர் வற்றும். அனல் காற்றுடன் தகிக்கும் வெயிலில் நிற்பதே பெரிய சவால். ஆனால், அந்த வெயிலுடன் சண்டையிட்டுத்தான் நீர் இறைக்க வேண்டும்.
“இப்படி தண்ணி இறைச்சே பொழப்பெல்லாம் போகுது சாமி. ஒரு வேலைவெட்டிக்குப் போக முடியல. குடும்பத்துல யாராவது ஒருத்தரை தண்ணி இறைக்கிறக்குன்னே நேந்துவிடணும். இல்லைன்னா உசுரு பிடிக்க முடியாது. அதுவும் அந்த தண்ணீல உப்பு கரிக்கும். கலங்கலாத்தான் இருக்கும். எங்களுக்கு வேற வகையில்ல!” என்றார் சின்னமாயி.
ஏன் இந்த ஊரில் இவ்வளவு வறட்சி? எத்தனை நாட்களாக இந்த நிலை? இப்படித்தான் இருந்ததா இந்த நிலம்?
“ஒரு காலத்துல மதுரையில இருந்தெல்லாம் வண்டி பூட்டிக்கிட்டு வந்து இந்தக் குளத்துல நீரை எடுத்துட்டுப் போவாங்க. அப்போ எல்லா ஊருலையும் பஞ்சம். ஆனா, இங்க மட்டும் தண்ணி இருந்தது. ஏன்னா இது சுரப்பு பூமி. தண்ணி சுரந்துட்டே இருக்கும். சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் வரமா இருந்தது இந்த ஊருணிதான். அத நா என் கண்ணால பாத்திருக்கேன். பாழாப்போன நேரம், எங்களுக்கு இப்படியொரு நிலைமை” என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.
இது இயற்கை நிகழ்வாக இருக்குமோ என்று முதலில் தோன்றியது. ஆனால், செழிப்பாக இருந்த ஊர், இந்த நிலைக்கு மாறியதற்கு மனிதர்களின் பொருளாதார வேட்கைதான் காரணம் என்பது போகப்போகத் தெரிந்தது. காசுக்காக அம்மனிதர்கள் செய்த பாவங்களின் பலன்தான் இந்த நிலை என்பதை அறிந்தபோது வருத்தமாக இருந்தது.
(பணத்துக்காக வளத்தை இழந்த நல்லாங்குடியின் அவலம்… நாளை தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக