சனி, 23 மார்ச், 2019

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி? ... கேரளா

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி?மின்னம்பலம் : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமேதி தொகுதியுடன் கூடுதலாக தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் போட்டியிட வேண்டுமென தமிழ்நாடு, கேரள, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்திவந்தனர்.

கன்னியாகுமரி தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று தமிழகத் தலைவர்கள் எதிர்பார்த்த நிலையில், கன்னியாகுமரி தொகுதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் ஹெச்.வசந்தகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள காங்கிரஸார் கூறுகிறார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி இதுகுறித்து ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறுகையில், “வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ராகுலின் முடிவு நேர்மறையானதாக இருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக உம்மன் சாண்டி கூறுகையில், “இதுகுறித்து சித்திக்கிடம் ஏற்கனவே கூறிவிட்டோம். ராகுல் போட்டியிடுவதற்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்” என்றார்.
ராகுல் போட்டியிடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த கேரள காங்கிரஸ் தலைவர் முல்லம்பள்ளி ராமச்சந்திரன், “ஒரு மாதத்திற்கும் மேலாக இதுகுறித்த பேச்சு இருந்துவந்தது, முதலில் ராகுல் போட்டியிடுவதற்கு தயாராக இல்லை. ஆனால் எங்களுடைய வற்புறுத்தலின் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதனை ஹிஸ்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவிக்கையில், “ராகுல் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை கேரள காங்கிரஸார் தெரிவித்துள்ளனர். தான் பணியாற்றும் இடம் அமேதிதான் என்று ஏற்கனவே ராகுல் காந்தி கூறியுள்ளார். இருப்பினும் கேரள காங்கிரஸின் கோரிக்கையை மனமுவந்து பரிசீலித்து முடிவை அறிவிப்பார்” என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் ஒன்றான வயநாட்டில் 2009, 2014 ஆகிய தேர்தல்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷாநவாஸ் வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக