ஞாயிறு, 10 மார்ச், 2019

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் - தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் - தமிழ்நாட்டில்  ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவுமாலைமலர் : நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகள்  மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் சுமுகமான முறையில் நிர்ணயிக்கப்பட்டதாகவும் சுனில் அரோரா குறிப்பிட்டார் சி.பி.எஸ்.சி.இ. தேர்வுகள் மற்றும் சில திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கான தேதிகள் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமார் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8.4 கோடி வாக்களர்கள் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்களர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடியாகும்.

இந்த தேர்தலில் 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தாங்கள் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான இயந்திரங்கள் வைக்கப்படும். இதற்காக 17.4 லட்சம் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க ரிசர்வ் போலீசார் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். இன்று மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள், வாக்குச்சாவடிகளில் நடைபெறும் விதிமீறல்கள் பற்றி புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரின் அடையாளம் பாதுகாக்கப்படும்.

இந்த முறை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்  வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29-ம் தேதியாகும். 
7 கட்ட தேர்தல்களும் முடிந்த பின்னர் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 23-ம் தேதி எண்ணப்படும் என சுனில் அரோரா அறிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக