திங்கள், 25 மார்ச், 2019

5 கோடி குடும்பளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் காங்கிரஸ் அறிவிப்பு .. 25 கோடி மக்கள் பயன் பெறுவார்

tamil.thehindu.com : குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் கீழ் நாட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும்  20 சதவீதம் ஏழைக் குடும்பங்களை  வறுமையில் இருந்து மீட்டெடுக்க  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அளித்தார்
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  ஆகிய தாங்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரங்களுக்குள்ளாகவே இருப்பதால் வேட்புமனுத்தாக்கல் முதல் கட்டத் தேர்வு நடக்கும் தொகுதிகளுக்கு தொடங்கியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக ஆலோசிக்கவும், அந்த அறிக்கையை இறுதி செய்யவும் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
அதன்பின் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடந்த காட்சி: படம் ஏஎன்ஐ
 நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறோம். 5 கோடி குடும்பங்கள், 25 கோடி மக்கள் நேரடியாக குறைந்தபட்ச வருமானத் திட்டத்தின் கீழ் பயன் பெறப்போகிறார்கள்.
ஏழை மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்துவிட்டோம். அதற்கான அனைத்து கணக்கீடுகளயும் முடித்துவிட்டோம்.
இதன்படி நாட்டில்  உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்.
ஏழ்மையின் மீதான கடைசிகட்ட தாக்குதல் தொடங்கி இருக்கிறது. இந்த தேசத்தில் இருந்து வறுமையை நாங்கள் ஒழிப்போம். உலகிலேயே இந்த திட்டம்  போன்று வேறு எந்த திட்டமும் இல்லை. இந்த திட்டம் வலிமையானது,மிகவும் சிந்தித்து, நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு.
இந்த திட்டம் தொடர்பாக ஏராளமான பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து, கலந்தாய்வு செய்து அவர்களின் ஆலோசனைக்குப் பின் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆண்டுகளாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் நீதி வழங்க விரும்புகிறோம்.
 இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக