திங்கள், 4 மார்ச், 2019

திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, இந்திய கம்யூ. மார்க்சிஸ்ட்டுக்கு தலா 2 தொகுதி...

tamil.thehindu.com : விருதுநகர் பட்டம்புதூரில் திமுக பெருந்திரள் பொதுக்
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிடும் தெற்கு மாவட்ட செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற எண்ணிக்கை ஓரளவு முடிவாகிவிட்டது. ஆனால், சில தொகுதிகளை பல கட்சிகளும் கேட்பதால் உடன்பாடு எட்டப்படாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 10, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மமக ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்க திமுக விரும்பியது.
மமக தவிர மற்ற 4 கட்சிகளும் தலா 2 தொகுதிகள் கேட்டன. இதை ஏற்றுக்கொண்டு, மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
ஆனால், ஒரே தொகுதிக்கு பல்வேறு கட்சிகள் போட்டி போடுவதால், தொகுதி உடன்பாடு தாமதம் ஆவதாக திமுக நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கேட்கிறது. ஆனால், 2014-ல்தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், கன்னியாகுமரியில் 2.44 லட்சம் வாக்குகள் பெற்றது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் 35 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. இதை சுட்டிக்காட்டும் காங்கிரஸ், கன்னியாகுமரி தங்களுக்கே என்பதில் உறுதியாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் தொகுதியைக் கேட்கிறது. ஆனால், டெல்டாமாவட்டங்களில் திமுக போட்டியிட விரும்புவதால் நாகையை தர மறுத்துவிட்டது. நாகை இல்லாவிட்டால் கோவையை இந்திய கம்யூனிஸ்ட் கேட்கிறது. இங்கு 2009-ல் போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் இங்கு போட்டியிட விரும்புகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு தென்காசி, மார்க்சிஸ்ட்டுக்கு கோவையை ஒதுக்க திமுக விரும்புகிறது. அதிமுக, பாஜக, புதிய தமிழகம் ஆகிய 3 கட்சிகளுக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால் தென்காசியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் தயங்குவதாக தெரிகிறது.
கோவை தொகுதியை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விரும்புகின்றன. இதனால் சிக்கல் நீடிக்கிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியிலும், விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு திமுக சம்மதம் கூறிவிட்டதாக தெரிகிறது.
காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக ஆகியவை ராமநாதபுரத்தையும், காங்கிரஸ், மமக ஆகியவை மயிலாடுதுறையையும் கேட்கின்றன. இந்த இழுபறியால் தொகுதி உடன்பாடு தாமதமாகிறது. எனினும், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை இன்று அல்லது நாளைக்குள் இறுதி செய்யப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடஐஜேகே தலைவர் பாரிவேந்தர் தயாராக இருப்பதால், அவருக்கு பெரம்பலூர் தொகுதியைஒதுக்குவது குறித்து நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக