வெள்ளி, 1 மார்ச், 2019

தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் .. திராவிடர் கழக 15 வது தீர்மானம்!

அங்கே, இங்கே என்று இல்லாமல் எங்கும் வெளிமாநிலத்தவர்கள் வியாபித்து
இருக்கிறார்கள். மடிப் பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு தோறும் ஏழெட்டு பேருந்துகள் வந்து நிற்கின்றன. அத்தனையும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணிப்பவை; அவர் களுக்கு என்று இங்கு தனி சிற்றூர்களே உருவாகி விட்டன.
பிற மாநிலத்தவர் ஆதிக்கம்
தஞ்சாவூரில் 23.2.2019 சனியன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டின் 15ஆவது தீர்மானம் முக்கியமான ஒன்றாகும். பிற மாநிலத்தவர்தம் ஆதிக்கம் குறித்த எச்சரிக்கைத் தீர்மானம் அது.
சென்னையின் பொருளாதாரம் தொடர்ந்து ராஜஸ் தானியர்களிடமும், குஜராத்திகளிடமும்தான் இருக்கிறது. சென்னையில் எந்த ஒரு தொழிலிலும் மொத்த விற்பனை யாளர்கள் - முதலாளிகள் அவர்கள்தான். ஒருவேளை அவர்கள் நேரடியாக ஒரு தொழிலில் ஈடுபடவில்லை என்றால், வட்டித் தொழில் மூலம் அவர்களுடைய கரங்கள் அந்தத் தொழிலில் பிணைந்து இருக்கும். இப்போது தொழிலாளர்கள் நிலையிலும் வெளி மாநிலத்தவர்களின் - குறிப்பாக வட இந்தியர்களின் - கை ஓங்குகிறது. சென்னையின் மிகப் பெரிய மால்கள், மல்டிஃபிளக்ஸுகள், பெரிய - சிறிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... எங்கும் வேலைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்கள்தான்! எப்போதுமே வெளியூர்களில் இருந்து வேலை தேடி வருவோருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு கட்டுமானப் பணியாகும். சென்னையின் வரலாற்றிலேயே அதிகமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டம் இது. ஆனால், கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப் புகள் கிட்டத்தட்ட அடைபட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

தென் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணியாற்றுவோரில் 70 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் இந்தத் தொழிற்பேட்டை சென்னையின் வேலைவாய்ப்புக் கேந்திரங்களில் மிக முக்கியமானது.

கீழ்மட்ட வேலைகள்தான் என்று இல்லை; தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட உயர் நிலைப் பணிகளிலும் வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. உதாரணமாக தகவல் தொழில் நுட்பத் துறையில் சென்னையில் பணியாற் றுவோரில் 40-50 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள் என்கிறது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். - நிறுவனத்தின் ஆளெடுப்புத் துறை. இங்கே என்ன ஒரு வேறுபாடு என்றால், கீழ்மட்ட வேலைகளில் ஆதிக்கம் செலுத்துவது வட இந்தியர்கள் என்றால், மேல்மட்ட வேலை களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்! அங்கே, இங்கே என்று இல்லாமல் எங்கும் வெளிமாநிலத்தவர்கள் வியாபித்து இருக்கிறார்கள். மடிப் பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு தோறும் ஏழெட்டு பேருந்துகள் வந்து நிற்கின்றன. அத்தனையும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணிப்பவை;
அவர் களுக்கு என்று இங்கு தனி சிற்றூர்களே உருவாகி விட்டன. ஒரு தொழிலாளிக்கு என்று இருக்க வேண்டிய குறைந்த பட்ச சலுகைகளையும், வேலை செய்வதற்கு ஏற்ற சூழலையும்தான் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இன்றைய முதலாளிகளுக்குத் தர விருப்பம் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு மாற்றாகவே வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துகிறார்கள். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குடும்பங்கள் இங்கு இல்லை. ஆகையால், கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். வெளி யிடங்களில் வேலை பார்க்கும் எல்லாருக்குமே இது இயல்பானது. இந்தியாவில் வேலை தேடி பிற மாநிலங்களை நோக்கிச் செல்வோரின் முதல் தேர்வு இப்போது சென்னைதான். ஏனைய இந்திய நகரங்களைப் போல உள்ளூர்வாசிகளின் கோபம் இங்கு கிடையாது. "தீவிரவாதம், வேலை இல்லை, கடன் தொல்லை... குடும்பச் சூழல் காரணமாகவே இங்கு வேலைக்கு வந்தோம்" என்கிறார்கள். வெறுமனே தொழிலாளர் பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க முடியாது. எங்கிருந்தோ வருகிறார்கள், வேலை பார்க்கிறார்கள், திடீரெனக் காணாமல் போகிறார்கள். இவர்கள் எல்லாம் யார், பின்னணி என்ன... ஒரு விவரமும் நம் அரசிடம் கிடையாது. இப்படி வருபவர்கள் இங்கு ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு தப்பித்துவிட்டால், அவர்களை எப்படி நம்மால் பிடிக்க முடியும்? தொழிலாளர்கள் என்கிற வடிவத்தில் பயங்கரவாதம்கூட இங்கு இறக்குமதி செய்யப் படலாம். இப்போது நடைமுறையில் நடந்து கொண்டுதான் உள்ளது.
தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டின் தீர்மானமும் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு அதாவது குறிப்பாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கோவை, மதுரை, சென்னை போன்ற எல்லை நகரங்களில் அதிக அளவு வட இந்தியர்கள் குவிக்கப்படுகின்றனர். பிறகு அவர்கள் மெதுவாக உள்ளூ ருக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, நெல்லைக்கு அருகில் உள்ள தாழையூத்து; சிற்றூரான இந்த ஊரில் உள்ள சங்கர் சிமிண்ட் தொழிற்சாலைக்குத் தேவையான துணைப் பொருட்களைக் கொடுக்க பல சிறுதொழிற்சாலைகள் தாழையூத்து, கங்கை கொண்டான், கயத்தாறு, உள்ளிட்ட பல இடங்களில் துவக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ளூர்காரர்களுக்கு வேலை கொடுப்பதற்குப் பதிலாக வட இந்தியர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் தங்களின் குடியிருப்புகளில் காவிக் கொடிகளைப் பறக்க விட்டு தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கு கிறார்கள். இந்த ஒரு நிகழ்வே வட இந்தியர்கள் தமிழகத்தில் வருவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டும்.
பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் துறைகளில் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பிரச்சினை மீது ஆழ்ந்த கவனம் செலுத்தி, கழக மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட இது தொடர்பான தீர்மானம் ஆழமானது. மீண்டும் பழையபடி வடவர் ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கை களைத் தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுமோ!
கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக