வியாழன், 14 பிப்ரவரி, 2019

நிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?- வானிலை ஆர்வலரின் பதில்

சென்னை, நில நடுக்கம் - tamil.thehindu.com/ சென்னைக்கு அருகில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? அந்தமான், வங்கக்கடல் நில நடுக்கம் உணர்த்துவது என்ன என பல்வேறு கேள்விகளுக்கான வானிலை ஆர்வலர் பதில் அளித்துள்ளார்.
இயற்கையை கணிப்பதும், அதை வெல்வதும் மனிதகுலம் இன்றுவரை செய்ய முடியாத ஒன்று. அதற்கு சிறந்த உதாரணம் நில நடுக்கத்தைக்கூறலாம். பல் விஷயங்களை முன் கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்ற மனித விஞ்ஞான வளர்ச்சி நிலநடுக்கம் குறித்து முன் கூட்டியே கணிப்பதில் இதுவரை வெற்றிபெற முடியவில்லை.

காரணம் பூமிக்கு அடியில் கண்டத் தட்டுகளில் நடக்கும் மாற்றங்கள் யாரும் கணிக்க முடியாத ஒன்று. நெருப்பு பந்து அதன்மீது தார் கலவைப் போன்றை குழம்பு அதன் மீது 80 கிமீ தடிமனான நிலத்தட்டு எனப்படும் பிளேட் அதன்மீது நிலமும் (கண்டங்கள்), சமுத்திரங்களும் என பூமி தனது வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுத்தான் இருக்கிறது.
பூமியின் மேற்பரப்பு  பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், 12  சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் மீதுதான் ஐந்து கண்டங்களும், மிக பெரிய சமுத்திரங்களும் உள்ளன.
பிளேட்டுகள் அடியில்தான் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருக்கிறது. பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்புகளும் நகர்வதால் அதற்கு, மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன், நகர்ந்தும் செல்கிறது. இந்த பிளேட்களின் லேசான உராய்வு கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.
சாதாரண முறை பிளேட்டுகள் விலகும் இடங்களில் அசைவு 7 ரிக்டர் அளவுக்கு இருக்கும். இது பெரிய பாதிப்பை உருவாக்காது. நிலத்தட்டுகள் மோதி ஒன்றன் அடியில் ஒன்று செல்வது சப்டக்‌ஷன் மண்டலம் என்று நிலவியல் அறிவியலில் வழங்கப்படுகிறது.  இதுதான் அதிக ரிக்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்தும்.
 இவை 7 ரிக்டருக்கு மேல் இருக்கும். கடலுக்கடியில் இந்த வகை நிலத்தட்டுகள் மோதி மேலுழும்பல் மற்றும் தட்டுக்கள் ஒன்றன் அடியில் ஒன்று செல்லும்போது ஏற்படும்போது 9 ரிக்டர் அளவுக்கு இருக்கும், இது கடலில் நிகழ்ந்தால் சுனாமி ஏற்படவும் வாய்ப்புண்டு. இதுதான் 2004 சுனாமியில் ஏற்பட்டது.
இவ்வளவு முன் கதை எழுத காரணம் சென்னைக்கு மிக அருகில் என ரியல் எஸ்டேட்காரர்கள் கூறுவதுபோன்று சென்னைக்கு மிக அருகில் வங்கக்கடலில் 600 கி.மீ தொலையில் நில நடுக்கம் ஏற்பட்டது.
மறுநாளே அந்தமானில் நில நடுக்கம் இவைகள் தமிழகத்துக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா? நில நடுக்கம் மீண்டும் வர வாய்ப்பு உண்டா? போன்ற கேள்விகளுக்கு வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த் இந்து தமிழ் திசைக்கு அளித்த பதில்:
 சென்னைக்கு அருகே ஏற்பட்ட நில நடுக்கம் தமிழகத்துக்கு விடப்பட்டுள்ள ஆரம்ப எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளலாமா?
அப்படி சொல்ல முடியாது. இது சாதாரணமாக நிலத்தட்டுகள் பக்கவாட்டில் உராயும் ஒரு நிகழ்வு. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
இதற்கும் அந்தமானில் வந்த நில நடுக்கத்துக்கும் சம்பந்தம் உள்ளதா?
ஒரு சம்பந்தமும் இல்லை, அதை சாதாரண பிளவு என்பார்கள் (fault line) 1950-களிலிருந்து அப்பகுதியில் இவ்வகையான நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. அதற்கும் சென்னைக்கு அருகே கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
வங்கக்கடலில் இதற்கு முன்னர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதா?
ஏற்பட்டுள்ளது, இரண்டு மூன்று முறை இருக்கும்
சென்னைக்கு வருங்காலங்களில் நில நடுக்க பாதிப்பு இருக்கிறதா?
வாய்ப்பு இல்லை, இந்தியாவைப் பொருத்தவரை இமயமலைப்பகுதியை பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாகவும், அடுத்து கிழக்கு தொடர்ச்சி மலைகள், மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற பகுதிகள் அடுத்த இடத்திலும் உள்ளன. தமிழகம் அதிலும் சென்னையைப் பொருத்தவரை பாதுகாப்பான மண்டலத்தில் உள்ளது என்று சொல்லலாம்.
நில நடுக்கம் வருவதை முன் கூட்டியே கணிக்க முடியுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை, ஜப்பான் போன்ற நாடுகளில் ஐந்து நிமிடம் அல்லது சில நிமிடங்கள் முன்பு கணிக்கும் செயலிகளை வைத்துள்ளார்கள். வானிலைப்போன்று இதை கணிக்க முடியாது.
 இதுபோன்ற கடலில் ஏற்படும் நில நடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏற்படுமா?
நிலத்தட்டுகள் பக்கவாட்டில் உராயும் இதுபோன்ற நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் நிலத்தட்டுகள் மோதி இறங்கும் நிலையில் ஏற்படும் நிலநடுக்கம்தான் ஆபத்தானது. அதன் அளவு 9 ரிக்டருக்கு மேல் இருக்கும். அப்போதுதான் சுனாமி ஏற்படும். 2004 சுமத்ராவில் அப்படி ஏற்பட்ட நிலநடுக்கம்தான் சுனாமியாக மாறியது.
ஆகவே சென்னையில் ஏற்பட்ட நில நடுக்கம் குறித்த பீதியடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக