வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

சிறுமி கொலை: இளைஞருக்கு தூக்குத் தண்டனை! திருப்போரூர் ..

சிறுமி கொலை: இளைஞருக்கு தூக்குத் தண்டனை!மின்னம்பலம் : திருப்போரூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்.
2017ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி கொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, ஆலத்தூரைச் சேர்ந்த அசோக்குமார் என்ற இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, பின்பு கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய திருப்போரூர் போலீசார், அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், இன்று (பிப்ரவரி 15) நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். அசோக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, பாலியல் வல்லுறவு செய்ததற்கு ஆயுள் தண்டனை மற்றும் 21,000 ரூபாய் அபராதம் விதித்தார். சிறுமியைக் கொலை செய்ததற்காக அசோக்குமாரை சாகும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிட்டார் நீதிபதி வேல்முருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக