வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

மலக்குழி மரங்கள் ..தமிழகம் முதலிடத்தில் ! உயிரிழப்போரின் எண்ணிக்கையில்..

துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்!மின்னம்பலம் : கழிவுநீர் சுத்தம் செய்யும்போது உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 14) கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதிலளித்தார். அப்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவுநீரைச் சுத்தப்படுத்தும்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 144ஆக உள்ளது. இதற்கடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 71 ஆக உள்ளது. தமிழகத்தில் 144 பேர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றினால் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கோவையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு துப்புரவுத் தொழிலாளர் சங்க அமைப்பாளர் சாமுவேல் வேளாங்கண்ணி கூறுகையில், “தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 3,000 தொழிலாளர்கள் கைகளினால் கழிவுநீர்த் தொட்டியையும், கழிவுகளையும் அகற்றுகின்றனர். எத்தனை பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற விவரம் தமிழக அரசிடம் இல்லை. இங்கு, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.
கும்பகோணம் நகராட்சியில் மட்டுமே கழிவுநீரை முற்றிலும் அகற்ற இயந்திரமும், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய ரோபோவும் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 8 மாதங்களாக இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் உள்ள 250 பாதாளச் சாக்கடைகளிலும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வருகின்றன. கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் லாரிக்கு குறைந்தது ரூ.5,000 செலவு செய்ய வேண்டும். மனிதர்களை வைத்துச் சுத்தம் செய்தால் ரூ.1,000 முதல் 1,500 வரை கொடுத்தால் போதும். கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என குடியிருப்புவாசிகளுக்குத் தெரிவதில்லை. தொழிலாளர்களும் எவ்விதப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யாமலேயே இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இறந்தபின் இழப்பீடு தருவதை விட, அவர்களுக்குக் கெளரவமான வேலை கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக