திங்கள், 25 பிப்ரவரி, 2019

அன்புமணியை கேள்விகளால் திணறடித்த ஊடகங்கள் ..வீடியோ ..உறவினரே விமர்சிப்பாருன்னு கனவிலும்கூட நினைக்கல..’


விஷ்ணு பிரசாத்vikatan.com -malaiarasu": பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து பேசும்போது தன் உறவினரின் விமர்சனத்தை நினைத்து அன்புமணி ராமதாஸ் வருத்தப்பட்டார்.
அன்புமணிவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி உடன்படிக்கை செய்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமாகி தொகுதிப் பங்கீடும் முடிந்துவிட்டது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க-வுக்கு
7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு தற்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தது குறித்து பா.ம.க மீது விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் அந்தக் கட்சிக்கு எதிராக ட்ரோல்கள் வெளியாக ஆரம்பித்தன. இந்த நிலையில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி விளக்கம் கொடுத்துள்ளார். சென்னையில் தி.நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். குட்கா ஊழல் உள்ளிட்ட ஊழல் புகார்களை அ.தி.மு.க அமைச்சர்கள் மீது தெரிவித்துவிட்டு இப்போது அவரிடம் கூட்டணி வைத்துள்ளீர்களே எனக் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் செய்தியாளர்கள் இடையே வாக்குவாதம் செய்தார். 

மேலும், கூட்டணிக்காக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எங்களை அணுகின. தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவில்லை என்ற காரணத்தால் ஸ்டாலின் எங்களை விமர்சிக்கலாம். அது தோல்வி பயமாகக்கூட இருக்கலாம். ஆனால், நாங்கள் தி.மு.க-வை விமர்சிக்க மாட்டோம் எனப் பேசினார். அப்போது உங்கள் உறவினர் விஷ்ணு பிரசாத்தே உங்களை விமர்சிக்கிறாரே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அன்புமணி, ``விஷ்ணு பிரசாத்தை 32 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர் மட்டுமல்ல என் சொந்த மைத்துனரும்கூட. இப்படி அவர் விமர்சனம் செய்வார் எனக் கனவிலும்கூட நினைக்கவில்லை. அவரது விமர்சனத்தால் எங்கள் கட்சிக்கோ, கூட்டணிக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் அவரது விமர்சனத்தால் எனக்கு மிகப்பெரிய மனஉளைச்சலும் பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. என் மனைவியும் அவரை நினைத்து வருந்தியுள்ளார்.

கருணாநிதி இருந்த காலத்தில் எங்கள் மீது விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் அல்லது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வைத்துதான் விமர்சிப்பார், அறிக்கைகள் வெளியிடுவார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போதுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று என்னுடைய உறவினரை வைத்து எங்கள் மீது விமர்சனத்தையும் அவதூறையும் பரப்புகிறார் என எனக்குத் தகவல் வந்தது. ஆனால், அவர் மீது நாங்கள் எந்த விமர்சனத்தையும் செய்யப்போவதில்லை. திருமாவளவன் எங்களை விமர்சனம் செய்தால்தான் அவருக்கு அரசியல். எங்களைக் கடுமையாக எதிர்த்தால்தான் அவருக்கு சீட் கிடைக்கும். அதே செயலை செய்தால் நமக்கும் சீட் கிடைக்கும் என நினைத்து விஷ்ணு பிரசாத் இவ்வாறு விமர்சித்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், ஒரு சீட்டுக்காக 30 ஆண்டுக்கால உறவு, பந்தம், பாசம், ஒரு குடும்பத்தை விட்டுக்கொடுப்பார் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை’’ என வருத்தமான முகத்துடன் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக