வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராமலிங்கம் கொலைகாரர்கள் வகாபிய இயக்கத்தவர்கள்?

Muruganantham Ramasamy : · திருபுவனம் ராமலிங்கம் கொலையில் ஈடுபட்டவர்கள் வகாபிய இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என பூர்வாங்க விசாரணையில் தெரிய வருகிறது.. சங்கிகளைப்போலவே வகாபிகள் இந்த தேசத்தின் நல்லிணக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தானவர்களாக உருப்பெற்று வருகிறார்கள்.. மதம் எந்தவொரு தரப்பிற்கும் வாழ்வாதாரம்அல்ல. அதன் பொருட்டு நிகழும் எந்த வன்முறைக்கும் சட்டத்தின் தயவு தாட்சன்யமற்ற இரும்புக்கரமே உகந்தது.. இந்த படுகொலைக்கு காரணமானவர்களும், அதன் பின்னாலிருந்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.. திரு.ராமலிங்கத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்..

மின்னம்பலம் :திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலத்தூண்டி விநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக முன்னாள் நகர செயலாளரான இவர், திருபுவனம் பகுதியில் மதமாற்றம் செய்ய வந்தவர்களை எதிர்த்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் அவரை வழிமறித்த சிலர், ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ராமலிங்கம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொலைக்குக் காரணம் மத மாற்றத்தை அவர் எதிர்த்ததுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மத மாற்றம் செய்ய வந்தவர்களை ராமலிங்கம் எதிர்க்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன் காரணமாக திருபுவனம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ராமலிங்கம் கொலைக்கு ராமதாஸ், தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமலிங்கத்தின் மகன் ஷ்யாம் சுந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வேலைய முடிச்சிட்டு இரவு நான் என் அப்பாவோட ஆட்டோவில் போய் கொண்டிருந்தேன். எங்க ஊருக்கு வர்ற வழியில் பள்ளிவாசல் பக்கத்துல நான்கு பேர் கார்ல எங்கள வழிமறிச்சாங்க. அதுல ஒருத்தன் வந்து எங்க அப்பாகிட்ட, நீங்க இந்த ஊரான்னு கேட்டு பேசினான். அவங்ககிட்ட எங்க அப்பா, தண்ணியடிச்சிருந்தா எனக்குப் புடிக்காது, காலைல பேசுறேன்னு சொன்னாரு. இதுல தாடி வச்சிருந்த ஒருத்தன் என்னை வெட்ட வந்தான். அவனை எங்கப்பா தடுத்தாரு. ஒருத்தன் என் அப்பாவோட கையில வெட்டினான். இதில அப்பா ரத்தம் வழிய கீழே விழுந்துட்டாரு. என்னையும் வெட்ட வந்தான். ஆனா, எங்க அப்பா அவங்களை காலாலேயே எட்டி உதைச்சு விரட்டி விட்டுட்டாரு.
அங்கிருந்து எங்க அப்பாவை சுபம் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனேன். ஆனா அங்க இருந்த வாட்ச்மேன், நர்ஸ் யாருமே ஓடிவந்து தூக்ககூட வரல. அதுக்கப்பறம் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏத்தி கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனோம், அங்கேயும் சரியா கவனிக்கல. உடனே தஞ்சாவூருக்குக் கூட்டிட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. ஆனாலும் போற வழியிலேயே அப்பா இறந்துட்டதாக சொல்லிட்டாங்க” என்று விவரித்தார்.
“ஹாஸ்பிடல் போகும்போது வெட்னவங்க யாருப்பானு கேட்டேன். நம்ம சொந்தக்கார பசங்கதான், தெரிஞ்சவங்க தாண்டான்னு சொன்னாரு. ஆனா, எனக்கு யாரையும் தெரியல” என்று தனது சந்தேகத்தையும் கூறியுள்ளார் ஷ்யாம்.

இதற்கிடையே ராமலிங்கத்தின் இல்லத்துக்கு நேற்று நேரில் சென்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கொலைக்குக் காரணம் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர்தான் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார். ராமலிங்கம் கொலையைக் கண்டித்து வரும் 11ஆம் தேதி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் ராஜா தெரிவித்துள்ளார்.
ராமலிங்கத்தின் மகன் ஷ்யாம் அளித்த புகாரின் பேரில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்த நிலையில் ராமலிங்கத்தின் கொலையில் தொடர்புடையதாக முகமது ரியாஸ், சர்புதீன், நிஜாம் அலி, அசாருதீன், முகமது ரிஸ்வான் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் நேற்று (பிப்ரவரி 7) கைது செய்தனர். கும்பகோணம் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கோதண்டராஜு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக