வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

பாஜகவை தேர்தல் நேரத்தில் கழற்றிவிட அதிமுக முடிவு? ..உளவுத்துறை புலனாய்வு

bjp,admk,கூட்டணி,கழற்றிவிட,திட்டமா?,உளவு துறை,பா.ஜ., உஷார்தினமலர் :அ.தி.மு.க.,வுடனான கூட்டணி தொடர்பாக, உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால் உஷாரடைந்துள்ள, பா.ஜ., மேலிடம், சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது. லோக்சபா கூட்டணிக்காக, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், திரைமறைவில் நடத்தி வரும் பேச்சு, பல வாரங்களாக நீடிப்பதற்கு, தொகுதி பங்கீட்டை கடந்து, வேறு சில விஷயங்களும் இருப்பது தான் காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: குறிப்பிட்டு சொல்லும் படியான தொகுதிகளை, பா.ஜ.,வுக்கு தர, அ.தி.மு.க., தயாராக உள்ளது. ஆனால், போட்டியிட விரும்பும் புதுமுகங்களுக்கு எல்லாம், பா.ஜ., தொகுதிகளை கேட்பதால், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை, அந்த கட்சிக்கு விட்டுத்தர வேண்டிய நெருக்கடியில், அ.தி.மு.க., உள்ளது. 'எத்தனை இடங்கள் வெற்றி பெற்றாலும், அதன் பலன் அனைத்துமே, தேர்தலுக்கு பின், பா.ஜ.,வுக்குத் தான் கிடைக்க போகிறது. 'இதனால், 'சிட்டிங்' எம்.பி.,க்கள் பலரது
தொகுதிகள் பறிபோய், கட்சி தொண்டர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபட தயக்கம் காட்டுவர்' என, அ.தி.மு.க., தரப்பு அச்சப்படுகிறது. கூட்டணி குறித்த பேச்சில், தமிழக, பா.ஜ., தலைவர்கள் யாருமே இடம்பெறவில்லை.


தமிழக கள நிலவரங்கள் எதுவும் தெரியாத, டில்லி தலைவர்களுடன் பேசி, விஷயத்தை புரிய வைப்பதில், அ.தி.மு.க., தரப்பு திணறுகிறது. மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூட, கூட்டணி பேச்சு வளையத்தில் தற்போது இல்லை. இது ஒருபுறம் என்றால், பா.ஜ.,வுடன் நடத்தி வரும் பேச்சு குறித்து, அ.தி.மு.க.,வில் இரண்டு அமைச்சர்களை தவிர, வேறு யாருக்கும், எதுவும் தெரியாது. முழுக்க முழுக்க, அந்த இருவர் மட்டுமே முன்னின்று தரும் வாக்குறுதிகள், எந்தளவு நிறைவேறும் என்ற சந்தேகம், பா.ஜ.,வுக்கும் வந்துவிட்டது.

கூட்டணிக்கு சம்மதித்த, அந்த இரண்டு அமைச்சர்களும், 'அது குறித்த அறிவிப்பை மட்டும், உடனே அறிவித்து விட வேண்டாம்' என்ற வேண்டுகோளை அழுத்தமாக வைத்துள்ளனர். துவக்கத்தில், பா.ஜ., தரப்பும், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 'அ.தி.மு.க.,வுக்குள் நிலவும் பூசல்கள், உட்கட்சி நிர்ப்பந்தங்களை சரி செய்ய காலக்கெடு கேட்கின்றனர்' என, கருதிய நிலையில், மத்திய உளவுத்துறை தந்த தகவலை அடுத்து, பா.ஜ., மேலிடம் உஷாரடைந்துள்ளது.

'தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, பேச்சுவார்த்தையை இழு இழுவென இழுத்து, கடைசி நேரத்தில், 'கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு நிலவுவதால், எதுவும் செய்ய இயலவில்லை' எனக் கூறி தப்பிக்கும் திட்டமும், அ.தி.மு.க.,விடம் உள்ளது' என, உளவுத்துறை தகவல் தந்ததாக தெரிகிறது. இந்த தகவல் கிடைத்தபின் தான், 'கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும்; பிரதமரின் தமிழக சுற்றுப் பயணத்தின்போதே, தெளிவு படுத்த வேண்டும்' என்ற நெருக்கடியை, பா.ஜ., தரப்பு தந்து வருகிறது.

பிற கட்சிகளிடம் பேச்சு நடத்தி, கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பு, தேர்தல் செலவு உள்ளிட்ட விஷயங்களிலும் இழுபறி தொடர்கிறது. மொத்தத்தில், உறுதியான, தெளிவான தலைமையுடன் இல்லாத, அ.தி.மு.க.,வும், கள நிலவரங்களே தெரியாத, பா.ஜ.,வின் டில்லி தலைவர்களும், பேச்சு என்ற பெயரில், திரைமறைவுக்குள் நடத்தி வரும் இந்த கயிறு இழுக்கும் போட்டிதான், இத்தனை திணறல்களுக்கும் காரணம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக