ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

மதிமுக தொண்டர்கள் மீது செருப்பு வீசிய பாஜக பெண் ... திருப்பூரில் ..

THE HINDU TAMIL : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் சிலைக்கு முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பெண் தொண்டர் ஒருவர் காலணி வீசியதால், மதிமுகவினர் அவரைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பகல் 2.35 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரசு விழா நடைபெறும் இடத்துக்கு மாலை 3.05 மணிக்கு வருகிறார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அங்கிருந்து 100 மீ தொலைவில் அரசுவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையை முன்னிட்டு, திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக தமிழக பாஜக தலைவர்கள் முகாமிட்டு பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவிநாசி - பெருமாநல்லூர் வரை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

;இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே பெரியார் சிலை, அண்ணா சிலை, குமரன் சிலைக்கு மாலை அணிவித்த  வைகோ கருப்புக் கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். காவிரி பிரச்சினை, கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்துக்கான தேவைகளை மோடி நிறைவேற்றவில்லை என்று வைகோ குற்றம் சாட்டினார். இப்போராட்டத்தில் ஏராளமான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
அப்போது திடீரென பாஜக பெண் தொண்டர் சசிகலா (24) என்பவர் கூட்டத்துக்குள் காலணி வீசியதோடு, பாஜகவுக்கு ஆதரவாகவும் மோடியைப் புகழ்ந்தும் ஆவேசமாகக் கோஷங்கள் எழுப்பினார். இதனால் மதிமுக தொண்டர்கள் அவரைத் தாக்கினர். போலீஸார் இதைத் தடுத்து நிறுத்தும் போது போலீஸாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காயப்பட்ட பாஜக பெண் தொண்டரை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.  இதைத் தொடர்ந்து மதிமுக தொண்டர்களை வைகோ சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
மதிமுக தொண்டர்கள் பாஜக பெண் தொண்டரைத் தாக்கிய சம்பவத்தால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக