வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

அனில் அம்பானியை கைவிட்ட முகேஷ் அம்பானி .. காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா?

vikatan.com -mukilan : இப்படியான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் நிறுவனம், ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் எப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்ற கேள்வியும்
எழாமலில்லை.
து 2006-ம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல பிசினஸ் பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்' வெளியிட்ட இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 14.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் மூன்றாவது இடத்தில் இருந்தார் அனில் அம்பானி. ஆனால், இன்று அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் வீழ்ச்சியும், அதனால் ஏற்பட்ட கடனும் அவரை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளும் அளவுக்கு அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. 
ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து நிறுவனத்தைக் கவனித்துவந்தனர். என்றாலும், நிர்வாக விஷயங்களில் ஆரம்பக்காலம் தொட்டே மூத்த சகோதரரான முகேஷ் அம்பானியின் கையே ஓங்கியிருந்தது. இந்த நிலையில், அனிலின் அரசியல் ஆர்வம், சமாஜ்வாதிக் கட்சியின் ஆதரவுடன் எம்.பி-யானது, பிறகு இரண்டே வருடத்தில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தது போன்றவை எல்லாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இமேஜை பாதிக்கும் வகையில் இருப்பதாக முகேஷ் கருதினார். இதனால், ஒருகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார். முகேஷ் அம்பானியின் சம்மதம் இல்லாமல் அனில் தன்னிச்சையாக எதையும் நிறுவனம் சார்பில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 
பிரிந்த சகோதரர்கள்
இது அனிலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், தன் தாயார் கோகிலா பென்னிடம் பிரச்னையைக் கொண்டுசென்று, தனக்கு சொத்தைப் பிரித்துத் தருமாறு கேட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த கோகிலா, அனிலை சமாதானப்படுத்திப் பார்த்தார். ஆனால், தனது பங்கைப் பிரித்துக்கொண்டு செல்வதில் அனில் உறுதியாக இருந்ததால், சில பிசினஸ் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் 2005-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துகள் பிரிக்கப்பட்டன. அதன்படி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு திட்டங்களைச் செயல்படுத்தும் ரிலையன்ஸின் முக்கிய நிறுவனமான ஆர்.ஐ.எல்  மற்றும் அதன் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ஐ.பி.சி.எல் ஆகியவை முகேஷ் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டன. ரிலையன்ஸ் இன்ஃபோ.காம், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி ஆகியவை அனிலுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. 
சொத்துப் பிரிப்பு நடந்த காலகட்டத்தில், அப்போதுதான் செல்போன் பரவலாக அறிமுகமாக ஆரம்பித்திருந்ததால், டெலிகாம் துறைக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. அந்த வகையில் டெலிகாம் துறையை தன்வசப்படுத்திக்கொண்ட அனிலின் நடவடிக்கை புத்திசாலித்தனமானதாகப் பார்க்கப்பட்டது. அதேசமயம், முகேஷ் அம்பானியின் கையில் சென்ற எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சர்வதேசச் சந்தையின் சூழல் காரணமாக அப்போது நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தது. இதனால், 2006-ம் ஆண்டில் முகேஷ் அம்பானியைக் காட்டிலும் அனிலின் சொத்துமதிப்பு சுமார் 550 கோடி ரூபாய் அதிகமாக இருந்தது. அத்துடன் மேலே சொன்னபடி நாட்டின் பணக்காரர் பட்டியலிலும் 3-வது இடத்தைப் பிடித்தார் அனில் அம்பானி. 
அம்பானி சகோதரர்கள்
இப்படி உயரத்துக்குச் சென்ற அனில் அம்பானிதான் இன்றைக்கு 46,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதோடு, எரிக்சன் நிறுவனத்துக்கான 453 கோடி ரூபாய்க் கடனைக்கூட கட்ட முடியாமல் தவித்துவருகிறார். இந்தக் கடனை நான்கு வாரங்களுக்குள் கட்டாவிட்டால் சிறைக்குச் செல்லக்கூடிய அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளார். 
கடனில் சிக்கிய அனில் அம்பானி
முன்னதாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் சொத்துகளை விலைக்கு வாங்கிக்கொண்டு தனது கடனை அடைக்க உதவுமாறு சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியையும் நாடினார் அனில். அப்படிச் செய்தால், மொத்த கடன்தொகை 18,000 கோடி ரூபாயாகக் குறையும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், அப்படி விலைக்கு வாங்கும்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பழைய கடன்களுக்கும் உத்தரவாதம் அளிக்குமாறு தமது நிறுவனத்தைக் கேட்கக் கூடாது என்று முகேஷ் அம்பானி விதித்த நிபந்தனையால், அது நடக்காமல்போனது. இதன் காரணமாகவே, தற்போது எரிக்ஸன் நிறுவனத்து மட்டுமான கடன் நிலுவைத் தொகையான 450 கோடி ரூபாயை அடுத்த நான்கு வாரத்துக்குள் அனில் அம்பானி திருப்பிச் செலுத்தவில்லை என்றால், சிறை செல்ல வேண்டியிருக்கும் எனப் புதன்கிழமையன்று எச்சரித்தது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் அனிலை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 1 கோடி ரூபாயை அபராதமாகவும் விதித்தது. 

இந்நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கான கடனை அனில் எப்படித் திருப்பிச் செலுத்தி, சிறைத்தண்டனையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு, தொழில்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது. 
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் ஒருமுறை கால அவகாசம் பெற்று, பிறகு மீண்டும் ஒருமுறை கால அவகாசம் கோரி, அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் அனில். இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட எரிக்ஸன் நிறுவன வழக்குரைஞர்கள், ``அனிலின் இந்த நடவடிக்கை, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான எண்ணம், அவரிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. அனில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிறுவன சொத்துகளை விற்றுள்ளது மட்டுமல்லாது, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரஃபேல் விமான ஒப்பந்தம் செய்துகொள்ளும் அளவுக்கும் பணம் வைத்துள்ளார்’’ என்று குற்றம்சாட்டினர். 
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனம், தீர்ப்பை ஏற்று அதன்படி நடந்துகொள்வோம் எனக் கூறியிருந்தது. 
கைவிட்ட சகோதரன்
தற்போது கடனை அடைக்க, அனிலுக்கு நிறுவன ஆவணங்களின் அடிப்படையில் பல வாய்ப்புகள் உள்ளதாகத் தோன்றினாலும், அதை நிறைவேற்றுவது என்பது சவால்மிகுந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது அனில் அம்பானி முன் மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, 2017-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்பது அல்லது ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான (அனிலுக்குச் சொந்தமானவை) ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களின் உதவியைக் கோருவது அல்லது ஜியோ ஒப்பந்தத்தில் இடம்பெறாத ஆர்காம் சொத்துகளை (சர்வதேசப் பங்குச்சந்தைகள் மற்றும் ரியல் எஸ்டேட்) விற்பது. 
ஆனால், ``பழைய கடன்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டேன்’’ என்ற முகேஷ் அம்பானியின் பின்வாங்கல் முதலாவது வாய்ப்பைச் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. ஜியோவுக்கு அல்லாமல் வேறு டெலிகாம் நிறுவனத்துக்கு விற்க முயன்றாலும் இதே நிபந்தனைதான் விதிக்கப்படும் என்பதால், அதைக் கைவிடும் நிலைதான்.
அனிலுக்குச் சொந்தமான பிற நிறுவனங்களின் உதவியைக் கோரினால், அந்த நிறுவனங்களின் குறைந்த சதவிகிதப் பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பதாலும், அவற்றின் நிர்வாகத்தன்மை குறித்து கேள்விகள் எழும் என்பதாலும் இரண்டாவது வாய்ப்பும் அடிபட்டுப்போகிறது. 
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
மூன்றாவதாக ஜியோ ஒப்பந்தத்தில் குறிப்பிடாத மற்ற சொத்துகளை விற்கலாம் என்றால், அதை வாங்கக்கூடிய தகுதியான நிறுவனத்தைத் தேட வேண்டும். ஏற்கெனவே கடந்த சில வருடங்களாக இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், பயன் ஏதுமில்லை. 
இத்தகைய நிலையில், அனில்  எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு தன்னைச் சூழந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு வரப்போகிறார் என்பது தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்கள் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம் இப்படியான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் நிறுவனம், ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் எப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்ற கேள்வியும் எழாமலில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக