திங்கள், 4 பிப்ரவரி, 2019

சின்னத்தம்பி பாதுகாப்பு குழு - கண்ணீருடன் நடைபெற்ற முதல் போராட்டம்!

சின்னத்தம்பி போராட்டம்விகடன் :சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது.
சின்னத்தம்பி போராட்டம்கோவையைச் சேர்ந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானையைக் கடந்த வாரம் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். குடும்பத்தை விட்டுப் பிரித்து,  தந்தங்கள் உடைந்து, ரத்த காயங்களுடன் இடமாற்றம் செய்ததால் சின்னத்தம்பி யானைக்காகப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சின்னத்தம்பி யானை  கடந்த சில நாள்களுக்கு முன் தன் குடும்பத்தைத் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்தது.
தன் வாழ்விடத்தைத் தேடி சின்னத்தம்பி சுமார் 80 கி.மீ-க்கு மேல் நடந்துவிட்டான். ஆனால், தன் வாழ்விடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் சின்னத்தம்பி யானை வனப்பகுதிக்குச் செல்ல மறுத்து வருகிறது.
இதனிடையே, சின்னத்தம்பியை யானையை மீண்டும் பிடித்து, கூண்டில் அடைத்து, அதைக் கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றும் முயற்சியைக் கைவிட்டு, அதை மீண்டும் கோவை வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் போராட்டம் நடைபெற்றது. இதில்  சமூக நீதிக்கட்சி, ஆனைக்கட்டி பழங்குடி மக்கள், தடாகம் பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது, “வனத்தை ஆக்கிரமிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வனத்தை உருவாக்கும் யானைகளைக் கூண்டில் அடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது இனப்பெருக்க காலகட்டம். இந்த நேரத்தில் சின்னத்தம்பியை தன் குடும்பத்தை விட்டுப் பிரித்தது மிகவும் வேதனை. இதேப்போன்று, இந்த அதிகாரிகள் தங்களது குடும்பத்தை விட்டு இடமாற்றம் செய்தால் ஏத்துக் கொள்வார்களா? யானையை ஓய்வே எடுக்க விடாமல் வனத்துறை விரட்டி வருகின்றனர். இதனால், அது மேலும் சோர்வடையும். ஏற்கெனவே மயக்க ஊசி போட்டிருக்கும் சூழ்நிலையில், சின்னத்தம்பியை மீண்டும் மயக்க ஊசி போட்டு பிடிக்கக் கூடாது. அவனைக் கும்கியாக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மீண்டும் வனப்பகுதியிலேயே விடவேண்டும்” என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பழங்குடி மக்கள் சின்னத்தம்பியை மீண்டும் தடாகம் பகுதியில் விடச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதனர். சின்னத்தம்பி யானையை மீட்பதற்காக, சின்னத்தம்பி பாதுகாப்பு குழுவும் தொடங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக