திங்கள், 4 பிப்ரவரி, 2019

சின்னத்தம்பியை சிதைத்து கும்கியாக்க .. தமிழக மிருக அரசு முயற்சி

சின்னதம்பி
சின்னத்தம்பி மற்றும் கும்கி யானை நினைவில் வலி இருக்கும் சின்னதம்பி... கும்கி யானையாக மாறுமா?ஜார்ஜ் அந்தோணி vikatan : “ஒரு யானையைக் கும்கியாக மாற்றுவது என்பது மனிதனுக்கு எளிமையான காரியமாக இருக்கிறது. ஆனால்  கும்கியாக மாறுவதற்கு யானைதான் பல தியாகங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது” கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் இருந்த சின்னதம்பி என்கிற யானை “தன்னை  யானைகள் கொண்டு பிடிப்பார்கள் என எப்போதும் நினைத்திருக்காது”  எல்லா இடங்களிலும் ஒற்றை யானை எனப் பதிவுசெய்யப்பட்டாலும் சின்னதம்பி குடும்பத்துடன் இணைந்தே  இருந்தது. தன்னுடைய குடும்ப உறுப்பினர்களைக் கடந்து தனக்கு எதுவும் நிகழாது என சின்னதம்பி நம்பியது. காரணம் ஆறேழு  காட்டு யானைகள் இருக்கிற குழுவில் இருந்து ஒரு யானையை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. யானைகள் தாய் வழி சமூகத்தை அடிப்படையாகக் கொண்டவை. பெண் யானைதான் கூட்டத்தை வழி நடத்தும்.   ஆபத்தெனத் தெரிந்தால் ஒரு யானை இன்னொரு யானைக்கு அரணாகவே  இருக்கும். இந்த விஷயம் வனத்துறைக்கும்,  மருத்துவருக்கும் கூட நன்கு தெரியும். அதனால்தான் சின்னதம்பியை பிடிப்பதற்கு முன்பு மூன்று நாட்களாக அதைக் கண்காணித்திருக்கிறார்கள். சின்னதம்பி யானையை 3 நாட்கள் கண்காணித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. மயக்க மருந்து செலுத்திய சின்னதம்பி  சமவெளிப் பகுதியை விட்டு மேடு பள்ளங்கள், ஆறு, குளம், சரிவான இடம், பள்ளத்தாக்கு இருக்கிற பகுதிக்கு சென்று விடக் கூடாது. அப்படி மயக்கமடைந்த யானை வேறெங்கும் விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால்  வேறு விதமான விளைவுகளை வனத்துறை சந்திக்க நேரிடும்.அதனால் சின்னதம்பி யானை சமவெளிக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். 

விஜய், சேரன், கலீம் , முதுமலை நான்கு யானைகளுமே அனுபவம் வாய்ந்த மாவூத்துக்களால் கும்கியாக மாற்றப்பட்டவை. நான்கு கும்கி யானைகளில் முதுமலை கும்கி யானையும் கலீம் கும்கி யானையும் அனுபவமும் ஆக்ரோஷமும் கொண்டவை. கலீம் யானையைத் தவிர்த்து மற்ற மூன்று யானைகளும் முதுமலை முகாமில்  பயிற்சி பெற்றவை. முதுமலை கும்கி யானைக்குக் கடுமையான கட்டளைகள் வழங்கினால் அது மிகக் கடுமையாகவே நடந்துகொள்ளும். அப்படித்தான் அதன் முந்தைய வரலாறுகள் அமைந்துள்ளது.

சின்னதம்பியை தேடும் குடும்பம் நேரம் வரும் வரை காத்திருப்போம் என்கிற அடிப்படையில் சின்னதம்பிக்கு எதிராக  நிகழ்ந்தது எல்லாமே வன்முறைதான். கடந்த மாதம் 25 தேதி சமவெளிக்கு அதாவது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திற்கு வந்த பிறகே அதற்கு மயக்க ஊசியைச் செலுத்தியிருக்கிறார்கள்.  சின்னதம்பி யானைக்கு 9 மில்லி அளவுக்கு மயக்க ஊசியைச் செலுத்தியிருந்தார்கள். மயக்க ஊசி செலுத்திய யானையைப் பதற்றத்திற்கு கொண்டு வர வேண்டும். யானை பதற்றமடைந்தால் அதனுடைய உடல் வெப்பமாகும் நிலையில் ஊசி உடனடியாக வேலை செய்ய ஆரம்பிக்கும். ஊசி செலுத்தியவுடன் கும்கி யானைகளைக் கொண்டு அதைப் பயமுறுத்த ஆரம்பிப்பார்கள். கும்கி யானைகள் பயன்பாட்டிற்கு  வந்த பிறகு இந்த நடைமுறையைத்தான் வனத்துறையும் கால்நடை மருத்துவர்களும் பின் பற்றுகிறார்கள். அதன்படியே அன்றைய காலை 6 மணிக்கு மேல் மயக்க ஊசியைச் செலுத்தி யானையைப் பதற்றமடைய வைத்துப் பிடித்தார்கள். பிடிபட்ட யானைக்குக் கும்கி யானைகளின் துணை கொண்டு  கால்களில் சங்கிலியும், கழுத்தில் கயிறும் போட்டுத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.  சின்னதம்பி பாதி மயக்க நிலையிலேயே இருந்தது. இதற்கிடையில் சின்னதம்பியோடு இருந்த மற்ற காட்டு யானைகளால் பணியில் எந்தப் பின்னடைவும் நிகழ் கூடாது என்பதால் 20 மேற்பட்ட வேட்டைத்தடுப்பு காவலர்கள்  அவற்றை ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
நான்கு கும்கி யானைகள் சேர்ந்து ஒரு காட்டு யானையை இழுத்து வந்து லாரியில் ஏற்றுவது என்பது  எளிதான காரியம்தான். ஆனால் சின்னதம்பி யானையை ஏற்றுவதில் நான்கு கும்கி  யானைகளின் பலமும் அனுபவமும் சோதித்துப்பார்க்கப்பட்டது. கும்கி யானைகள் போதாதென்று ஜேசிபி இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன.அதற்குக் காரணம் சின்னதம்பி யானையின் உடல்பலமும், மனபலமும்தான்.எல்லா நிகழ்வுகளும் சின்ன தம்பிக்கு எதிராகவே அமைய வனத்துறை யானையை லாரியில் ஏற்றும் பணியை தொடங்கியது. இந்த இடத்தில் தான் சின்னதம்பியின் ஒட்டு மொத்த நம்பிக்கையும் பலமும் சிதைந்து போனது. நான்கு கும்கி யானைகள், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் என சின்னதம்பியை முட்டித் தள்ள வேறு வழியின்றி லாரியில் ஏற்றப்பட்டது. உடலெங்கும் கும்கி யானைகள் தந்தங்களை கொண்டு குத்தி லாரியில் ஏற்றிவிட்டன. பிடிபடும்போது நன்றாக இருந்த தந்தங்கள் லாரியில் ஏற்றப்பட்ட பிறகு உடைந்திருந்தன. தந்தம் உடைந்த யானையின் படம் இணையத்தில் பரவ சின்னதம்பி மீது மக்களுக்குப் பரிதாபம் ஏற்பட ஆரம்பித்தது.

ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்ட பொழுதே சின்னதம்பி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு விட்டது. யானையோ மனிதர்களோ தன்னுடைய இருப்பிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் முடிவு என்பது நாடு கடத்துவதற்கு ஒப்பானது. பிடித்துச்செல்லப்பட்ட யானை டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது என வனத்துறை அறிவித்தது. இதற்கிடையில் சின்னதம்பியின் குடும்ப யானைகள் சின்னதம்பி யானையைத் தேடி சுற்றுவதாகச் செய்திகள் பரவின. கோவையைச் சேர்ந்த பலரும் இணையதளங்களில் மீண்டும் சின்னதம்பியை கொண்டு வந்து பிடித்த இடத்தில் விட்டு விடுங்கள் என “bringbackchinnathambi” என்கிற ஹேஷ் டேக் பயன்படுத்தி தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
சின்னதம்பி பிடிபட்டு வனத்திற்குள் விடப்பட்ட 7 நாட்கள் கழித்து மீண்டும் ஊருக்குள் வந்த தகவல் வனத்துறையைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. எப்படியும் அதனுடைய பழைய இருப்பிடத்திற்குச் சென்று தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னதம்பி கிளம்பியிருக்கிறது.  காலர் ஐடி பொருத்தப்பட்ட சின்னதம்பி காட்டுக்குள்விடப்பட்ட அன்றே தன்னுடைய இருப்பிடத்தைத் தேட தொடங்கியிருக்கிறது. ஆனால் யானை மலைப்பகுதியை விட்டு சமவெளி பகுதியான பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராம பகுதிக்குள்  வந்தபிறகே வெளி உலகத்திற்குத் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட  நடவடிக்கைகள் மேற்கொண்டனர். பட்டாசு வெடிப்பது, வான வேடிக்கை நிகழ்த்துவது எனப் பல வழிகளில் யானையைக் காட்டுக்குள் விரட்ட முயன்றனர் ஆனால் வனத்துறையினரின் முயற்சி பலனளிக்கவில்லை. டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி கடந்த 3 நாட்களில் 100 கிலோ மீட்டருக்கு மேலாக நடந்து வந்திருக்கிறது. வரகளியாறு, அங்கலக்குறிச்சி, கோட்டூர், உடுமலைப்பேட்டை வழியாக வந்து தற்போது மடத்துக்குளம் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்போதுவரை யாரையும்  துன்புறுத்தாமல் அசம்பாவித நிகழ்வுகளிலும் ஈடுபடாமல் செல்வதால்  வனத்துறை சின்னதம்பி யானையைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் சின்னதம்பி கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே யானை அதன் பலம் முழுவதையும் இழந்து நிற்கிறது. இப்போதைக்கு சின்னதம்பியை கும்கியாக மாற்ற முயல்வதைவிட அதைக்  காப்பாற்ற முயற்சி எடுப்பதே முக்கியமானது என விலங்கு  நல ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சின்னதம்பியின் வாழ்க்கையில் அடுத்து என்ன? என்கிற கேள்விக்குப் பதில்  மீண்டும் இந்தக் கட்டுரையின்  முதல் பத்திக்கே செல்கிறது.  அதனைப் பிடிக்க டாப்ஸ்லிப்பில் இருந்து கலீம் கும்கி யானை  சின்னதம்பி இருக்கிற இடத்தை நோக்கிக் கிளம்பியிருக்கிறது. நினைவில் வலியிருக்கும் யானை எளிதில்  கட்டுப்படும் என நினைக்கிறவர்கள் மதுக்கரை மகாராஜாவை ஒரு நொடி நினைத்து கொள்ளவேண்டும்!
““ஒரு யானையைக் கும்கியாக மாற்றுவது என்பது மனிதனுக்கு எளிமையான காரியமாக இருக்கிறது. ஆனால்  கும்கியாக மாறுவதற்கு யானைதான் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக