வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் முகத்தைக்கூட மூடிக்கொண்டு வந்திருந்தார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹ்மான் மகள்!மின்னம்பலம் : ஆடை சுதந்திரம் தொடர்பான சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் விளக்கமளித்துள்ளார்.
பிப்ரவரி 5 அன்று மும்பையில், ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதைக் கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு கதீஜா ரஹ்மான் முகத்தைக்கூட மூடிக்கொண்டு முகத்திரை அணிந்து வந்திருந்தார். இதனால், மகளுக்கு ரஹ்மான் ஆடை சுதந்திரம் வழங்கவில்லை எனவும், அவர் பழைமைவாதத்தைக் கடைப்பிடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, நிதா அம்பானியுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி மற்றும் மகள்கள் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “எனது குடும்பப் பெண்கள் நிதா அம்பானியுடன் இருந்தபோது” என்று கேப்ஷன் கொடுத்து, அவரவர் ஆடையைத் தேர்வு செய்துகொள்வதற்கான சுதந்திரம் அவரவருக்கு உண்டு என ஹேஷ்டேக்கில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஹ்மான் மகள் கதீஜாவே இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அண்மையில் மேடை நிகழ்ச்சியில் என் தந்தையுடன் நான் பேசிய உரையாடல் பரவலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. எனினும், நான் உடுத்திய ஆடை எனது தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாகச் சில கருத்துகள் வெளியாகியுள்ளன. நான் உடுத்தும் ஆடைகளுக்கும், எனது பெற்றோருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உடுத்தியிருந்த முகத்திரையை நான் விரும்பியே உடுத்தினேன்.
எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதற்கான முதிர்ச்சி எனக்கு உள்ளது. எந்தவொரு நபருக்கும் அவர் விரும்பும் ஆடையை உடுத்த சுதந்திரமுண்டு. அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன். ஆகையால், உண்மையான சூழல் என்னவென்பதை தெரிந்துகொள்ளாமல் நீங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக