ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

விஜயகாந்தின் டெண்டரை கூட்டிய திமுக .. கடுப்பில் எடப்ஸ்- பன்னீர்ஸ்.- மோடிஸ்

டிஜிட்டல் திண்ணை:  திமுக அதிமுக  - விஜயகாந்த் யார் பக்கம்?minnambalm : “எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல சில நாட்களாக தமிழ்நாட்டு
அரசியலில் எல்லா சாலைகளும் சாலிகிராமத்தை நோக்கியே செல்கின்றன. திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட இறுதி செய்யப்படும் நிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு தெரியாததால் இரு தரப்பினருமே தேமுதிகவை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளைத் தீவிரமாக செய்துவருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாமக ஏழு சீட்டுகளும் ஒரு மாநிலங்களவை சீட்டும் பெற்று விட்டதையடுத்து தேமுதிகவும் அதே அளவு இடங்களைக் கேட்டது. மேலும் பாமகவுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுவதுபோலவே தேர்தல் நிதியும் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பாஜக, அதிமுகவிடம் கோரிக்கை வைத்தது தேமுதிக. ஆனால் பாஜக இதுபற்றி அதிமுகவிடம் பேசிக்கொள்ளுமாறு கடைசி நேரத்தில் சொல்லிவிட்டதால் அதிமுகவோ தேமுதிகவின் டிமாண்டுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. 7 சீட்டுகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 சீட்டுகள் வரை தர சம்மதிக்கும் அதிமுக அணி மற்ற ‘சமாச்சாரங்கள்’ எதுவும் இல்லை என்றும் சொல்லிவிட்டார்களாம். அதனால் விஜயகாந்தும், பிரேமலதாவும் அதிமுக, பாஜக மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்திருக்கிறார். உடல் நலம் பற்றி விசாரிக்கத்தான் வந்ததாக வெளியே ஸ்டாலின் சொன்னாலும், உள்ளே சில நிமிடங்கள் பேசியபோது, ‘வாங்க ஒண்ணா இருப்போம்’ என்று ஸ்டாலினே விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தேமுதிக இப்போதைய சூழலில் திமுக அணிக்கு வந்தால் கூட அவர்களது கோரிக்கைகள் நிறைவேறுவது கஷ்டம்தான் என்கிறது திமுக தரப்பு. திமுக அணியில் காங்கிரஸ் ஏற்கனவே பத்து சீட்டுகளைப் பெற்றுவிட்டது. மீதி அங்கே இருப்பது முப்பது சீட்டுகள். ஏற்கனவே மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு என கணக்குப் போட்டு வைத்திருந்தார் ஸ்டாலின். ஆனால் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வரும் அக்கட்சிகள் எல்லாம் தங்களுக்கு இரண்டு சீட்டுகள் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். சிபிஎம் முக்கு இரண்டு சீட் கொடுக்கும் பட்சத்தில் தங்களுக்கும் இரண்டு சீட் கேட்கிறது இந்திய கம்யூனிஸ்டு கட்சி.
மதிமுக குழு நேற்று அறிவாலயத்தில் திமுக குழுவை சந்தித்தபோது மதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் என்று சுட்டிக் காட்டி ஏழு தொகுதிகளைக் கேட்டிருக்கிறார்கள். அதிர்ச்சி அடைந்துவிட்டாராம் துரைமுருகன். ஏழு சீட்டுகள் கேட்டால்தான் இரண்டு சீட்டில் வந்து திமுக நிற்கும், எடுத்த எடுப்பிலேயே இரண்டு கேட்டால் ஒன்றே ஒன்று என்று கறாராய் பேசி அனுப்பியிருப்பார்கள் என்று ஏழு சீட் கேட்டதற்குக் காரணம் சொல்கிறார்கள் மதிமுகவில். இப்படி கூட்டணிக் கட்சிகள் எல்லாம் இரண்டிரண்டு சீட்டுகள் கொடுத்தால் திமுக, தான் நினைத்தது போல் 22 முதல் 24 சீட்டுகளில் கூட நிற்க முடியாமல் போகும் சூழல் இருக்கிறது.
இந்த நிலையில் தேமுதிகவை அணியில் சேர்த்தால் இடப் பங்கீடு மேலும் சிக்கலாகும் வாய்ப்பிருக்கிறது. எனவே நான்கு சீட்டுகளுக்கு தேமுதிக ஒப்புக்கொண்டு வருமா என்று திமுக தரப்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிலோ 5 சீட்டுக்கு ஓ.கே என்கிறார்கள். இந்தக் குழப்பத்துக்கு இடையேதான் தனது பேரம்பேசும் திறனை அதிகரிப்பதற்காக நாற்பது தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம் என்று நேற்று அறிவித்தார் விஜயகாந்த். இதற்குப் பிறகும் துணை முதல்வர் ஓ.பன்னீர் கூட, ‘அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தஞ்சை மாவட்டப் பொதுக்கூட்டங்களில், ‘எங்க கட்சிக்கு 2 பர்சண்ட் , 3 பர்சண்ட்னு யார் சொன்னது? இந்தக் கூட்டத்தை அவங்ககிட்ட கொண்டுபோய் காட்டுங்க’ என்று பேசிவருகிறார். அதேசமயம் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகிய மூவரும் சாலிகிராமம் வீட்டுக்குள் உட்கார்ந்து திமுக அணிக்கு செல்வதா, அதிமுக அணிக்கு செல்வதா, தனித்துப் போட்டியிடுவதா என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக