வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

திமுக கூட்டணியில் இடதுசாரிகள், மதிமுக, விசிக கேட்கும் தொகுதிகளும் சாத்திய கூறுகளும்

கூட்டணி தலைவர்கள் - மு.அப்துல் முத்தலீஃப் /tamil.thehindu.com : திமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக் கேட்கும் தொகுதிகள் மற்றும் திமுக நிலைப்பாடு குறித்த ஒரு அலசல்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைய உள்ளது. டிடிவி தினகரன், கமல்ஹாசன் தனியாக போட்டியிடுகின்ற நிலையில் உள்ளனர். சீமான், பண்ருட்டி வேல்முருகன், மமக உள்ளிட்ட கட்சிகளும் முடிவெடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். தேமுதிக, தமாகா எந்தப்பக்கம் என மதில் மேல் பூனையாக உள்ளனர். அதிமுக தேர்தல் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ளனர். இதுதவிர சிறிய கட்சிகளும் இணைய உள்ளனர். தேமுதிக, தமாகா, சரத்குமார் உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
திமுக தேர்தலுக்காக கூட்டணி என தனியாக அமைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் மக்கள் பிரச்சினைகளுக்காக தோளோடு தோள் நின்று போராடிய தோழமைக்கட்சிகளே தற்போது கூட்டணி காண உள்ளன. இதில் காங்கிரஸுக்கு திமுக 9 மற்றும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி என 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்டது.

மீதமுள்ள  30 தொகுதிகளில் மேற்சொன்ன மற்ற கட்சிகளுக்கு அவர்கள் மனம் நோகாவண்ணமும், தனது கட்சியினர் மனம் நோகாவண்ணமும் இடங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள இடங்களில் திமுக போட்டியிடும். திமுக கூட்டணியை பலமாக ஆதரிக்கும் கட்சி என்றால் முதலில் மதிமுகவைச் சொல்லலாம்.
மதிமுக
கூட்டணி குறித்துப் பேச கணேசமூர்த்தி தலைமையில் மதிமுக குழு அமைத்துள்ளது. அந்தக்குழு திமுக அமைத்துள்ள பேச்சுவார்த்தைக்குழுவுடன் பேச உள்ளது. மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கோருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் திருச்சி, விருது நகர், ஈரோடு, காஞ்சிபுரம் இந்த நான்கில் 3 தொகுதிகளை ஒதுக்க பேசிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதில் மதிமுகவுக்கு இரண்டு அல்லது ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழு இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது.
அவர்கள் கோவை, மதுரை, நாகை, கன்னியாகுமரி, வடசென்னை உள்ளிட்ட 5 இடங்களுக்கான பட்டியலை அளித்துள்ளதாகவும், அதில் 2 தொகுதிகளை கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் கோவை மற்றும் மதுரை தொகுதிகளை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 தொகுதிகள் கோரப்பட்டு கோவை, நாகை, தென்காசி உள்ளிட்ட தொகுதிகள் பட்டியல் அளிக்கப்பட்டதாகவும் அதில் இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தொகுதிகள் பட்டியல் அளிக்கப்பட்டு இரண்டு தொகுதிகள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேலூர் தொகுதியை விடுத்து ராமநாதபுரம் அல்லது மயிலாடுதுறையை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர மனித நேய மக்கள் கட்சியும் மயிலாடுதுறை தொகுதியை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக