ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

சின்னத்தம்பி யானையின் சோகப் பயணம்... பொதுமக்களை தொந்தரவு செய்யாமல் ...


polimernews.com :ஊர், ஊராக நுழைந்த போதும், மனிதர்கள் பலர் இடையூறு செய்த போதும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் தனது பயணத்தை மேற்கொள்கிறது சின்னத்தம்பி யானை. அதைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானை, ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 25ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
பிடிபட்ட யானை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில், டாப்ஸிலிப்பில் இருக்க முடியாமல் தனது வாழ்விடத்தை தேடி சின்னத்தம்பி தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.தளி, கம்பளாம்பட்டி, மனுப்பட்டி, ஆலாம்பாளையம், திருப்பூர் மாவட்டம் மைவாடி வரை சின்னத் தம்பி நடந்து சென்றது.

 உணவு, நீரில்லாமல் 300 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்ததால் சோர்வடைந்த யானை, திருப்பூர் மாவட்டம் மைவாடியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தது. அப்போது பொதுமக்கள் பலரும் சின்னத்தம்பியை புகைப்படம் எடுத்தனர்.
பொதுமக்களின் சத்தம், பட்டாசு வெடிப்பு உள்ளிட்ட எந்த தொந்தரவுகளைக் கண்டும் ஆக்ரோசம் கொள்ளாத சின்னத்தம்பிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
மைவாடி வனப்பகுதியில் சுற்றித் திரியும் சின்னத்தம்பியைப் பிடிக்க சலீம், மாரியப்பன் என்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆனால்  சின்னத்தம்பியை பிடித்து மீண்டும் அதன் வாழ்விடத்திலேயே விட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே மைவாடி பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார். சின்னதம்பியை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவது குறித்த அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே சின்னத்தம்பியுடன் சுற்றித் திரிந்த மற்றொரு காட்டுயானையான விநாயகத்தை பிடித்த வனத்துறையினர், அதனை முதுமலையில் விட்டனர். ஆனால் அங்கு உணவோ, தண்ணீரோ எடுத்து கொள்ளாமல் வாழ்விடத்தை பிரிந்த சோகத்தில் அந்த யானை தவித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக