வியாழன், 28 பிப்ரவரி, 2019

அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு ..

THE HINDU TAMIL : இரட்டை இலை சின்னத்தைக் கோரி அதிமுகவும் டிடிவி தினகரனும் வழக்கு தொடுத்த நிலையில், சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சின்னம் முடக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வந்தனர்.
இருதரப்பும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 23 அன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கி அறிவித்தது. இதை எதிர்த்து இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரனும் சசிகலாவும் தனித்தனியாக மேல் முறையீடு செய்தனர்.
அதையடுத்து, தினகரன் அமமுக கட்சி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். திருவாரூரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், குக்கர் சின்னத்தை ஒதுக்கித் தரக் கோரி தினகரன் மனு அளித்தார்.
இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை வழங்கவில்லை என்றால், தினகரன் மனுவின் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கி தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக