வியாழன், 28 பிப்ரவரி, 2019

7 தொகுதிகளை பெறுவதில் தேமுதிக உறுதி- அதிமுக, பாஜக கடும் அதிருப்தி

/tamil.thehindu.com : அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7,
பாஜகவுக்கு 5, என்.ஆர்.காங்கிரஸுக்கு1 என 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுடன் கூட்டணி பேசுவதற்கு முன்பே தேமுதிவுடன் பாஜக பேசி வந்தது. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுடம் பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்தது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த தேமுதிக, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டும் உள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் தரும்போது தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு வங்கி உள்ள தேமுதிகவுக்கும் 7 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், 4 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பில்லை என அதிமுக மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் எனக் கூறப்பட்டது.
திமுக, காங்கிரஸ் தரப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். தேமுதிகவுக்காக ஒரு தொகுதியை விட்டுத்தர காங்கிரஸ் தயாராக இருந்தது. அதிக கூட்டணி கட்சிகள் இருப்பதால் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பில்லை என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜகவின் வற்புறுத்தலால் தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை தர அதிமுகமுன்வந்துள்ளது. ஆனால், பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் அதிமுக, பாஜக தலைவர்கள் தேமுதிக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு எந்த அளவில் உள்ளது என திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''அதிமுக கூட்டணியில் பாமக இணையும் வரை திமுகவின் கூட்டணி பட்டியலில் தேமுதிக இல்லை. பாமகவை கொண்டு வரும் முயற்சி தோற்றதால் திமுகவில் ஒரு தரப்பினரும் காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தின. காங்கிரஸ் ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்ததால் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரைதர முன்வந்தோம். ஆனால், தேமுதிக  முதலில் 7 தொகுதிகளையும் பிறகு 6 தொகுதிகளையும் கேட்டதால் எந்த முடிவும் ஏற்படவில்லை'' என்றார்.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கும் இல்லை. திமுகவுக்கும் இல்லை. எதிரணியில் தேமுதிக இணைந்தால் அந்த அணி பலம் பெற்று விடுமோ என்றகவலைதான் இரு கட்சிகளுக்கும். அதனால், இரு கட்சிகளும் தேமுதிகவிடம் விடாமல் பேசி வருகின்றன என்று அதிமுக, திமுகவில் பலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். தேமுதிகவின் முடிவு தெரியாததால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் அதிமுக, திமுக இரு கட்சிகளும் தாமதித்து வருகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக