வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

என்.ராம் : ரஃபேல் போர் விமான பேச்சுவார்த்தைகளை வலிமையற்றதாக்கிய பிரதமர் அலுவலகம்: உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகம்

படம். | ஆர்.வி.மூர்த்தி. tamil.thehindu.com : சர்ச்சைக்குரிய ரூ.7.87 பில்லியன் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளின் உச்சகட்டத்தில் பிரான்ஸுடன் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பிரதமர் அலுவலகமும்  “இணைப்பேச்சுவார்த்தைகள்” நடத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பை எழுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. 
இதனையடுத்து, பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தைகளினூடே பிரதமர் அலுவலகமும் இணைப்பேச்சுவார்த்தை நடத்தியதால், “பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாடு பலவீனப்பட்டுப் போனதோடு இந்திய பேச்சுவார்த்தை குழுவையும் பலவீனப்படுத்தியது” என்று பாதுகாப்பு அமைச்சகம் தன் எதிர்ப்பை எழுத்து முலம் பதிவு செய்துள்ளது. அதாவது நவம்பர் 24, 2015 தேதியிடப்பட்ட பாதுகாப்புத் துறை குறிப்பு ஒன்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் அதில், “இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் அங்கம் வகிக்காத எந்த அதிகாரிகளும் பிரான்ஸ் அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அறிவுரை வழங்கலாம். மேலும் பாதுகாப்பு அமைச்சகக் குழு நடத்தும் பேச்சுவார்த்தைகளினால் ஏற்படும் விளைவில் பிரதமர் அலுவலகம் நம்பிக்கை கொள்ளவில்லை எனும்போது திருத்தப்பட்ட வேறு ஒரு பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகம் முறையான தளத்தில் மேற்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர், 2018-ல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் படி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஏர் ஸ்டாஃப் துணைத் தலைவர் தலைமையில் 7 உறுப்பினர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று கூறியிருந்தது, அப்போது பிரதமர் அலுவலகமும் கூடவே நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிடவில்லை.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வெளிப்படுத்துவது என்னவெனில், ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ”பிரதமர் அலுவலகம் எடுத்த நிலைப்பாடு, ஏற்கெனவே பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாடுடன் முரண்பாடு கொண்டுள்ளது” என்பதையே.  அப்போதைய பாதுகாப்புச் செயலர் ஜி.மோகன் குமார் இதனை தன் கைப்படவே தெரிவித்துள்ளார். அதாவது அவர் தன் கைப்பட எழுதியதில் பிரதமர் அலுவலகம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியது., ஏனெனில் அது எங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளை வலிவற்றதாக்குகிறது, அல்லது சீரியஸாகக் கீழறுப்பு செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உறுதியான எதிர்ப்பு:

நவ.24, 2015 தேதியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் உள் அறிவிக்கை.
 ஜி.மோகன் குமார் பதிவு செய்த அவரது கைப்பட எழுதிய எதிர்ப்பு நவம்பர் 24, 2015 அன்று விமானப்படை இரண்டாம் பிரிவின் உதவிச் செயலர் எஸ்.கே.சர்மா தயாரித்த குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனை வழிமொழிந்தவர்கள்: இணைச் செயலர் மற்றும் கொள்முதல் மேலாளர் (ஏர்), அமைச்சகத்தில் உள்ள கொள்முதல் தலைமை இயக்குநர் ஆகியோர்களாவார்கள்.
இந்நிலையில்தான் மூல ஒப்பந்தத்திற்குத் துளிக்கூட சம்பந்தமில்லாத புதிய ரஃபேல் ஒப்பந்தம் ஏப்ரல், 2015-ல் பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே 2016 குடியரசுத் தின விழாவுக்காக டெல்லி வருகை தந்த போது ரஃபேல் ஒப்பந்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.  36 ரஃபேல் போர் விமானங்களுக்கான அரசாங்கக்களுக்கு இடையேயான உடன்படிக்கை செப்.23, 2016-ல் கையெழுத்தாகிறது.
பாதுகாப்பு அமைச்சக குறிப்பின் படி பிரதமர் அலுவலகமும் இணையாகப் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறது என்ற விவரம் பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் ஜெனரல் ஸ்டீபன் ரெப் அக்டோபர் 23, 2015-ல் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாகவே தெரியவந்துள்ளது. இந்தக் கடிதத்தில், “பிரதமர் அலுவலக இணைச் செயலர் ஜாவேத் அஷ்ரப், மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரின் ராஜீய ஆலோசகர் லூயி வாஸி என்பவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் , அதாவது 201-10-2015-ல் நடந்த தொலைபேசி உரையாடல் குறிப்பிடப்பட்டுள்ளது.”
ஜெனரல் ரெப்பின் கடிதம் பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கொண்டு வந்தது. இந்திய பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்.பி.பி.சின்ஹா உதவித்தலைவர், ஆகியோரும் அஷ்ரபுக்கும் இதனை எழுத்து மூலம் தெரியப்படுத்தினர்.
இதற்கு நவம்பர் 11, 2015-ல் பதிலளித்த பிரதமர் அலுவலக இணைச்செயலர் அஷ்ரப்,  தான் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார், மேலும் பிரான்ஸ் அதிபர் அலுவலக வழிகாட்டுதலின் படி வாஸி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜெனரல் ரெப் கடிதத்தில் உள்ள விஷயங்கள் தொடர்பாக பேசியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே ஏ.எஃப்.பி செய்தி ஏஜென்சியில் கூறியதாக லே மோண்டே என்ற ஊடகம் செப்டம்பர் 2018-ல் வெளியிட்ட செய்திகளின்படி  பிரதமர் மோடி அரசின் புதிய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ரிலையன்ஸ் குழுமத்தின் பெயர் தோன்றியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமாகும்.
இதனையடுத்தே பிரதமர் அலுவலக இணைச்செயலருக்கும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசகருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் பேச்சுவார்த்தைகளின் ஊடே இணையாக நிகழ்ந்ததாகக் கருதப்படுதற்கு இடமுண்டு என்பதை பாதுகாப்பு அமைச்சக குறிப்பும் குறிப்ப்பிட்டுள்ளது.
அந்தக் குறிப்பில், “இப்படிப்பட்ட இணைப்பேச்சுவார்த்தைகளை பிரான்ஸ் தங்கள் பக்கம் சாதகமாக விளக்கம் அளித்துக் கொள்ள வழிவகை செய்யும் அதனால் அது நம் நலன்களுக்குக் கேடு விளைவிக்கும், இந்திய பேச்சுவார்த்தைக் குழு எடுத்த நிலைப்பாடு பலவீனமடையும். அதுதான் இந்தச் சந்தர்ப்பத்தில் நடந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
 பிரான்ஸ் அரசு பிரதமர் அலுவலக இணைப் பேச்சுவார்த்தைகளை தங்கள் பக்கம் சாதகமாக மாற்றியதற்கு ஓரு  “பிரகாசமான உதாரணம்”  என்னவெனில் ஜெனரல் ரெப் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட விஷயமே. அது என்னவெனில், “பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசகருக்கும் இந்தியப் பிரதமர் அலுவலக இணைச் செயலருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவை கருத்தில் எடுத்துக் கொண்டு விநியோக நடைமுறைகளில் வங்கி உத்தரவாதம் எதுவும் தேவையில்லை, மேலும் அந்த அனுகூலக் கடிதம் தொழிற்துறை சப்ளையர்களின் சப்ளை நடைமுறைகளை முறையாக அமல்படுத்துவதற்கான போதுமான உத்தரவாதங்களை வழங்குகிறது”
இதுதான், இந்த விஷயம்தான்... ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு எடுத்த நிலைப்பாட்டிற்கும் பிரதமர் அலுவலக பேச்சுவார்த்தைக்கும் இடையேயான முரண்பாடு விவகாரம் எழுந்ததாக பாதுகாப்பு அமைச்சக குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது வர்த்தக ரீதியான வழங்கல்கள் அரசு உத்தரவாதம் என்ற ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், அல்லது வங்கி உத்தரவாதம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு வங்கி உத்தரவாதம் பற்றிய பேச்சே இல்லை என்று பாதுகாப்பு அமைச்சக குறிப்பு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்திய பேச்சுவார்த்தைக் குழு எடுத்த நிலைப்பாட்டுக்கும், பிரதமர் அலுவலகப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டுக்கும் இடையேயான இன்னொரு முரண்பாடு நடுவர் ஏற்பாடு பற்றியது.
இணைப் பேச்சுவார்த்தைகளில் முரண்பாடான இருவேறு நிலைப்பாடுகளை இந்தியத் தரப்பு எடுப்பதில் இந்த ஒரு தருணம் மட்டுமல்ல. இதற்கு முன்னரே எழுந்த செய்திகளின்படி , தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனவரி 2016-ல் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் முரண்பாடு நிலவியது, இதனை தி இந்து ஆங்கிலம் கொண்டுள்ள ஆவணமும் உறுதி செய்கிறது.  அரசு உத்தரவாதம் அல்லது வங்கி உத்தரவாதம் என்பது தேவையில்லை எனறு அஜித் தோவல், மனோகர் பாரிக்கருக்கு அனுப்பிய முன்மொழிவையும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் தன் கோப்புக் குறிப்பில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்: தி  இந்து (ஆங்கிலம்)
தமிழில் : இரா.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக