வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

நிலத்தடி நீரை எடுப்பவர்கள் ஒரு கனமீட்டருக்கு ரூ.2வரை கட்டணம் செலுத்த வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு

தண்ணீர்... தண்ணீர்... கே.பி.பெருமாள்
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. வீடுகளில் ஒரு அங்குலத்திற்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கனமீட்டர் வரைநிலத்தடி நீரை எடுப்பவர்கள் ஒரு கனமீட்டருக்கு ரூ.2வரை கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் வீடுகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. 2019 ஜுன் மாதம் முதல் நிலத்தடி நீர் எடுத்து பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் காலம் நிர்ணயித்துள்ளது.
வர்த்தகப் பண்டமாக நீர்
உலக வர்த்தக அமைப்பின் காட் ஒப்பந்தம் தண்ணீரைவர்த்தகப் பண்டமாக வரையறுத்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவதை தடைசெய்யக் கூடாது எனக்கூறப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில்ஐ.நா.சபையில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்கக் கூடாது என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்தனஎன்பது நினைவுகூரத்தக்கது.
நீருக்கு நிபந்தனைகள்
உலக வங்கியும் உலக வர்த்தக அமைப்பும் தங்களிடம் கடன் பெற வரும் நாடுகளுக்கு கீழ்கண்ட மூன்று அம்சத்தில் ஏதாவது ஒன்றை நிபந்தனையாக விதிக்கின்றன.
1. ஒட்டுமொத்தமாக தண்ணீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்து விடுவது.
2. நீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார்
நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது.

3. தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்து விடுவது.
-இந்த கொள்கையின் படி இங்கிலாந்து நாட்டில் ஒட்டுமொத்த தண்ணீர் விநியோகமும்
மேலாண்மையும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில்
தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். இந்த கொள்கையின் மூலம்
விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் உள்ள
10 நிறுவனங்கள் 150 நாடுகளில் 200 கோடிவாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம்
செய்து வருகின்றன. இன்னும் பல நாடுகளில் தண்ணீர் விநியோகிப்பதற்கான
முயற்சிகளை செய்து வருகின்றன.
இந்தியாவில் தண்ணீர் கொள்கை
இந்தியாவில் நீர் பயன்பாடு மாநில பட்டியலில் வருகிறது. ஆனாலும் மத்திய அரசு, தண்ணீர் பயன்பாடுகள் குறித்து 1987ம் ஆண்டு ஒரு தேசிய நீர் கொள்கையை கொண்டு வந்தது. அதன் பின் 2002ம் ஆண்டு ஒருதேசிய நீர் கொள்கையை வெளியிட்டது. அது அமலில்இருந்து வருகிறது. 2012ம் ஆண்டு புதிதாக தேசிய நீர்வரைவுக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வரைவுக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்வருமாறு:
K தண்ணீரை பொருளாதார பண்டமாக பார்க்க வேண்டும்.
K தண்ணீரை வீணாக்குவது, மாசுபடுத்துவது ஆகியவற்றிற்கு அபராதம்.
K இந்திய அனுபவ உரிமைச் சட்டம் 1882, பாசன சட்டங்கள் ஆகியவை நில
உரிமையாளர்களுக்கு அந்த நிலத்தின் அடியில் உள்ள தண்ணீர் சொந்தம் என்று
கூறுகிற பிரிவு மாற்றப்பட வேண்டும்.
K சாத்தியமான அளவு நீரின் மறுசுழற்சி, மறு உபயோகம், மறுநீர் பாசனம் உட்பட
பொதுவாக ஊக்குவிக்க வேண்டும்.
K பாசன உபயோகத்தில் நீர்சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். சொட்டு நீர்
பாசனம், நீரூற்று பாசனம் ஆகிய பாசன நுணுக்கங்கள், தானியங்கி பாசனமுறைகள்,
இயற்கையில் ஆவியாதலைக் குறைத்தல் ஊக்கப்படுத்த வேண்டும்.
K ஒவ்வொரு மாநிலத்திலும், தண்ணீர் விலை விகிதமுறை உருவாக்கப்படவும் தண்ணீர்
கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை உருவாக்க ஒரு அமைப்பு இருக்க
வேண்டும்.
K நீரிலிருந்து அதிக பலனை உறுதி செய்திட தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்ய
வேண்டும்.
K நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு இந்த கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு
கொடுக்க வேண்டும்.
K மின்சாரத்தை குறைந்த விலையில் கொடுப்பது மின்சாரம், தண்ணீர் இரண்டும்
வீணாவதற்கு இட்டுச் செல்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.
K விவசாயத்திற்கு குறிப்பிட்ட அளவிற்கு நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்காக சலுகை
வழங்க வேண்டுமெனில் இப்பயன்பாட்டிற்கு தனியாக மின்சாரம் வழங்க பரிசீலிக்க
வேண்டும்.
K நகர்ப்புறங்களில் குடியிருப்புகளுக்கு நிலத்தின் மேலுள்ள நீரையே பயன்படுத்த
வேண்டும். மாற்றுநீர் வழங்கவாய்ப்பு இருந்தால் அதனையும் பயன்படுத்தலாம்.
K சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரை
அடிப்படை சுத்திகரிப்புக்கு பிறகு கழிப்பறைக்கு மீண்டும்
பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.
K கிராமப்புறங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய மிகக்குறைந்த
நீரை பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதிகள், கழிவு நீர் அகற்றுதல்
ஆகியவற்றிற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
K நகர்ப்புற நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்த கரிப்பு திட்டங்கள் ஒரே நேரத்தில்
ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்திட வேண்டும். நீருக்கான கட்டணம் கழிவு
நீருக்கானதையும் சேர்த்து வசூலிக்க வேணடும்.
K அகில இந்திய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில் உள்ளூர் அளவில்,
ஆற்றுப்பாசன அளவில், தனித்தனியாக அமைப்புகள் உருவாக்கி அதன் மூலம்
தண்ணீர் விநியோகம் செயல்படுத்த வேண்டும்.
K பொது - தனியார் கூட்டு முறையில் சேவை வழங்குவதற்கு தனியார் துறைக்கு
ஊக்கமளிக்க வேண்டும். இப்படியாக அந்த வரைவுக் கொள்கை, ஏராளமான
நிபந்தனைகளை விதிக்கிறது.
சூயஸ் இப்படித்தான் நுழைகிறது
2012ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நீர் வரைவுக்கொள்கையில் கூறப்பட்டுள்ளவைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதி தான் சமீபத்தில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் 2019 ஜுன் முதல் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு. தமிழ்நாட்டில்பல பெருநகரங்களில் அந்நிய நாட்டின் தண்ணீர் கம்பெனிகளால் குடிநீர் வழங்கிட ஒப்பந்தம் போடப்பட்டு கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் சூயஸ்போன்ற தனியார் கம்பெனிகள் மூலம் தண்ணீர் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெப்சி, கோகோகோலா கம்பெனிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதிவழங்கியுள்ளது. இதனால் ஒருநாளைக்கு பல லட்சம்லிட்டர் தண்ணீரை மிகச் சொற்பமான விலைக்கு உறிஞ்சி எடுத்து அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்வதைநாம் அறிவோம். தாமிரபரணி ஆற்றை நம்பி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த நிலத்தை நம்பி இரண்டு மாவட்டத்திலும் உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் தேவையை தாமிரபரணி ஆறு நிறைவேற்றி வருகிறது. விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுகின்ற ஆற்றுநீரை ஆட்சியாளர்கள் பெப்சி-கோக் போன்ற தனியாருக்கு கொடுப்பதினால் விவசாயமும், குடிநீரும் பாதிக்கின்றன. இதுபோல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் கொள்ளை நடைபெற்று வருகிறது.
பெரும் நகரங்களின் குடிநீர் தேவையைப் பன்னாட்டு,உள்நாட்டு தண்ணீர் கம்பெனிகளான பெக்டல், சூயஸ், விவெண்டி, டாடா, ரிலையன்ஸ் போன்றவைகளிடம் ஒப்படைத்தால் நாம் குடிநீருக்கே ஏராளமான பணங்களை செலவு செய்ய வேண்டியது ஏற்படும். வரைவு கொள்கையில் குறிப்பிட்டது போல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூல்செய்யும் நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டால் இந்தியாவில்விவசாயம் செய்பவர்கள் அத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். ஏனெனில் இந்தியாவில் சிறு-குறுவிவசாயிகள் தான் அதிகம். அவர்கள், வரைவுத் திட்டத்தில்குறிப்பிட்டது போல நவீன முறைக்கு செல்வது அவ்வளவுஎளிதல்ல. மேலும் மானாவாரி விவசாயம் நமது நாட்டில் அதிக அளவில் நடைபெறுகிறது. எனவே நீர்வரைவுக் கொள்கையில் குறிப்பிட்டது போல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் வசூல் செய்தால் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விவசாயஉற்பத்தி பாதிக்கப்படும்.
மாற்றுத் திட்டம்
இந்தியாவில் சராசரியாக 4000 பில்லியன் கனமீட்டர் மழைப் பொழிவு மூலம் நீர் கிடைக்கிறது. இதில் இயற்கையாக ஆவியாதல், கடலுக்கு செல்லுதல் போக 1869 பில்லியன் கனமீட்டர் நீர் ஆறுகள், குளங்கள், ஏரிகள், இதர நீர்நிலைகளுக்கு வருகிறது. இந்த நீரில் 1123 பில்லியன் கனமீட்டர் நீர் மட்டுமே விவசாயத்திற்கு, குடிநீர், இதரபயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்துகிறோம் என்று 2012 நீர்கொள்கையின் வரைவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் நீர், கிடைக்கும் மொத்த நீரில் நான்கில்ஒரு பங்கை விட சற்று அதிகம் அவ்வளவே. கிட்டத்தட்ட 3 பங்கு நீர் இயற்கையினால் உறிஞ்சப்படுகிறது. ஆவியாகிறது. கடலில் கலக்கிறது. இந்த 3 பங்கு நீரை சேமிக்கதிட்டம் உருவாக்குவதற்கு பதிலாக, நாம் பயன்படுத்தும் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில்தண்ணீரை தனியாரிடம் தரை வார்க்க முயற்சி செய்து வருகிறது. நீரை சேமிப்பதற்கு என்று முறையாக நிதிஒதுக்கீடு செய்து செயல்படுத்தினால் வீணாகும் மூன்று பங்கு நீரில் அரைப்பங்கு அளவிற்கான நீரை சேமித்தாலே மிகப்பெரிய அளவில் தண்ணீர் கிடைக்கும்.
எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீர்கொள்கைக்கு எதிராகவும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் நிலத்தடிநீருக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என்கிற அறிவிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் தீவிரமடைந்துள்ளது.
கட்டுரையாளர்: மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
#தீக்கதிர் 8/2/2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக