ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

பிரதமர் நரேந்திர மோடி : மீண்டும் பிரதமராகி மே 26-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் உங்களுடன் பேசுவேன்

மாலைமலர் :நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்று மே 26-ம் தேதி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுடன் பேசுவேன் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி,
 நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார். மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாக பல சந்தர்ப்பங்களில் மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று வானொலி மூலம் மோடி பேசிய 53-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், ‘தேர்தல்கள் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாகும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகள், பிரசாரம் ஆகியவற்றில் அடுத்த 2 மாதங்களுக்கு நாங்கள் தீவிரம் காட்ட வேண்டியுள்ளது. நானும் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்.

எனவே, ஆரோக்கியமான ஜனநாயகம் நிலவும் வகையில் (பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மோடியின் வானொலி உரைக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் உங்களை என்னால் சந்திக்க முடியாது.
உங்களுடைய நல்லாசிகளின் துணையால், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் சக்தியுடன் வரும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று (26-ம் தேதி) மீண்டும் பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உங்களுடன் கலந்துரையாடுவேன். இது மேலும் பல ஆண்டுகளுக்கு தொடரும்’ என தெரிவித்துள்ளார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக