சனி, 16 பிப்ரவரி, 2019

அதிமுகவுக்கு 25, பா.ம.க.வுக்கு 4 , தே.மு.தி. க.வுக்கு 3 மீதம் உள்ள 8 தொகுதிகளில் பாஜக

மாலைமலர் :தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி உருவாகி உள்ளது. ரகசியமாக நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.
பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்து அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தினார். பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரியுடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.


இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது. யார்- யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் மட்டும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கும், பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்.

அ.தி.மு.க. தனது தொகுதிகளில் த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிக்கு தலா 1 தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பா.ஜனதா தனது தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி. க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முடிவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருகட்சி தலைவர்களும் இணைந்து வெளியிடுவார்கள்.

பியூஷ்கோயல் வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னை வந்து இறுதிக்கட்ட பேச்சு நடத்துகிறார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

பா.ஜனதாவுக்கு தென் சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதம் உள்ள 2 தொகுதிகள் திருப்பூர், பொள்ளாச்சியா? அல்லது நெல்லை, ராமநாதபுரமா? என்பதில் மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

பா.ம.க.வுக்கு அரக்கோணம், ஆரணி, தர்மபுரி தவிர சிதம்பரம் அல்லது விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவையும், தே.மு.தி.க.வுக்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தே.மு.தி.க. கூடுதலாக சேலம் தொகுதியையும் கேட்கிறது. அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்து விட்டது.

வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி பவுர்ணமி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் தொகுதி பங்கீடு விவகாரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக