வியாழன், 28 பிப்ரவரி, 2019

மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன?

vinavu.com - nandan: >புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாஜக –
சங்க பரிவாரக் கும்பலும் இந்திய ஊடகங்களும் போருக்கான அறைகூவலை பகிரங்கமாக விடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் #PulwamaRevenge என ஹேஸ்டேகைப் போட்டு இந்தியா முழுக்க பரப்பிவிட்டது சங்க பரிவாரக் கும்பல். தேசபக்திக்கு மொத்த உரிமையாளர்களாக காவி பரிவாரத்தை முன்னிறுத்தும் முயற்சி தீவிரமாக நடந்தது. தில்லியில் போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்த மோதி அங்கே அப்பட்டமாக ‘அரசியல்’ பேசினார். இது முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலருக்கே பிடிக்கவில்லை. அடுத்த நாளிலேயே “இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது” என எரியும் போர்வெறிக்கு தூபம் போட்டார், மோடி.

இதனைத் தொடர்ந்து இந்திய விமானங்கள் போர் ஒத்திகை என 10 நாட்களுக்கு பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு டி.ஆர்.பி-யை ஏற்றிக் கொண்டன ஊடகங்கள்.
26-02-2019 அன்று அதிகாலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷி இ முகம்மது தீவிரவாத முகாமை தாக்கி அழித்ததாகவும், 1,000 கிலோ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 300 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும் இந்தியா தெரிவித்தது. மீண்டும் அனைத்து ஊடகங்களும் குதூகலித்தன. #Surgicalstrike2.0 என்ற ஹேஷ்டேகைப் போட்டு சங்கிகள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.
இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க, ஊடகங்களோ மற்றொருபுறம் புதிய புதிய வான்வழித் தாக்குதல் வீடியோக்களை, இந்தியாவின் தாக்குதல் வீடியோ என வெளியிட்டு கல்லா கட்டின. அவை அனைத்தும் பொய்யானவை என்பது அடுத்த சில மணி நேரங்களிலேயே அம்பலமானது. சிறிதும் குற்றவுணர்வற்ற இந்த ஊடகங்கள் தவறான வீடியோக்களை வெளியிட்டதற்கு மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. மிரேஜ் 2000 விமானத்திற்கு பதில் ரஃபேல் விமானத்தையே குண்டு வீசியதாக கூட கூசாமல் புளுகினர்.
நேர்மையான பத்திரிகையாளர்களும், முன்னாள் இராணுவத்தினர் சிலரும், இந்தியாவின் இந்தத் தாக்குதல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். எந்தக் கேள்விக்கும் அரசு தரப்பிலிருந்தோ, சங்க பரிவாரக் கும்பலிடமிருந்தோ, இவர்களின் பொய்யைப் பரப்பும் கோயபல்சு ஊடகங்களிலிருந்தோ எவ்வித பதிலும் வரவில்லை. மாறாக, தேசபக்தியின் பெயரில் மோடி துதி மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கிறது.
ராஜீவ் தியாகி என்ற இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இத்தாக்குதல் குறித்து அவர் கூறுகையில், “தனிப்பட்ட வகையில் மோடிக்கு புகழாரம் சூட்டும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. படையணிகளை, போர்த்தந்திர ரீதியில் குறைவான மதிப்பு கொண்ட இலக்குகளைத் தாக்க பயன்படுத்தியிருக்கிறது. இதன் மூலம், இந்த அரசு ஆயுதப் படையணிகளை தமது பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்தியுள்ளது.” என்றார்.
மேலும், “இந்த அரசாங்கம், விமானப்படையை என்ன செய்யச் சொல்லியிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முதலில் நாம் எந்த தொழில்நுட்பத்தை படையணிகள் பயன்படுத்தினர் என்பதையும், ஆயுதங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.
தேர்ந்தெடுக்கப்படும் இலக்கின் மதிப்பைப் பொருத்தும் ஆயுதம் தேர்வு செய்யப்படவேண்டும். ஒரு விமானி இலக்கை நோக்கி குண்டுகளை வீசுகையில் இலக்கு, கண்ணுக்கு தெளிவாக தெரிய வேண்டும். ஒருவேளை இருளில் கண்ணில் படவில்லை எனில், லேசர் ஒளிப்பானைக் கொண்டு அப்பகுதியை ஒளிரச் செய்து, குண்டுகளை வீச வேண்டும். ஆயுதம் குறிப்பான இலக்கில் சென்று வெடிக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு விமானி கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறார், ராஜீவ் தியாகி.
“எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்தும், தீவிரவாதிகளின் முகாம்தான் அழிக்கப்பட்டது என்றும், ஊடகங்கள் எந்த அடிப்படையில் கூறுகின்றன? அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடுத்த பின்னர், இந்திய விமானப் படைக்கே அந்த விவரங்கள் தெரிந்திருக்க முடியாது. ஆகவே கண்டிப்பாக இந்திய அரசாங்கத்தின் ஏஜெண்டுகள்தான் தொலைக்காட்சி சேனல்களுக்கும், அச்சு ஊடகங்களுக்கும் போலி செய்திகளை அளிகின்றனர்.” என்று ராஜீவ் தியாகி கூறியுள்ளார்.
“நமக்கு ஜெய்ஷ்-ஈ-முகமது அமைப்பின் முக்கிய தளம் பாஹவல்பூரில்தான் இருக்கிறது என்பது தெரியும். ஆனால், நாம் குறைவான முக்கியத்துவம் கொண்ட பாலக்கோட் தளத்தைத் தாக்கியிருக்கிறோம். ஏனெனில் அங்கு அருகில் உள்ள இஸ்லாமாபாத் இராணுவத் தளத்திலிருந்து பாகிஸ்தான் விமானம் கிளம்பி வந்து சேரவே 10 நிமிடங்கள் ஆகியிருக்கும்” என்கிறார்.
இதன் மூலமாக, இந்தியாவின் இந்தத் தாக்குதலால் எவ்விதப் பயனும் இல்லை. இவர்கள் சொல்வது எதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இது வெறுமனே அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்கிறார் ராஜீவ் தியாகி.
புல்வாமா தாக்குதலில் இந்திய உளவுத்துறை, பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி, மற்றும் மோடியின் ஆட்சி லட்சணம் ஆகியவை கேள்விக்குள்ளாக்கப்படாமல் விட்டதன் விளைவுதான் இன்று எல்லையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் போர் மேகம்.
27.02.2019 அன்று காலையில் தமது எல்லைக்குள் புகுந்த இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், இரண்டு இந்திய விமானப்படை விமானிகளைக் கைது செய்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து வாய்திறவாமல் கள்ள மவுனம் சாதித்த மோடி அரசு, பாகிஸ்தான் அரசு இது குறித்த ஆதாரங்களை வெளியிட்டதும், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, அதில் அறிக்கை ஒன்றை வாசித்துவிட்டு சென்றுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் இன்று மதியம் சுமார் 3:30 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு அறிக்கையை வாசித்தார்.
அதில், பாகிஸ்தானின் விமானம் இந்தியாவின் எல்லைப்பகுதிக்குள் வந்ததாகவும், அதனை விரட்டிச் சென்ற இந்திய விமானங்கள் அதனை சுட்டு வீழ்த்தியதாகவும், அவ்விமானம் பாகிஸ்தானின் எல்லைக்குள் வீழ்ந்ததாகவும் தெரிவித்தது இந்திய அரசு. மேலும், இந்திய விமானம் ஒன்றை நாம் இழந்துள்ளதாகவும், ஒரு விமானியைக் காணவில்லை என்றும், பாகிஸ்தான் ஒரு விமானியை கைது செய்து வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது, அது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் கூறிவிட்டு எழுந்து போய்விட்டார் ரவீஷ்குமார். இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
அபிநந்தன் என்ற ஒரு விமானி பாகிஸ்தான்வசம் உள்ளதாக புகைப்படங்கள் வெளியான பிறகும் எதுவும் தெரியாதது போல பூசி மொழுகிச் சென்றிருக்கிறது இந்திய அரசு. மோடி அரசின் அல்ப தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு விமானி பணயம் வைக்கப் பட்டிருக்கிறார்.
ஒரு விமானியின் இழப்பை எண்ணி வருந்துகிறது பொதுச் சமூகம். #AbhiNandan என்றும் #SayNoToWar என்றும் டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அபிநந்தனின் கைதுக்கு காரணமான மோடி அரசின் போர் வெறி அம்பலமாகியிருப்பதையே இது காட்டுகிறது.
மொத்தத்தில், தேர்தல் வெற்றிக்காக யார் தாலியையும் அறுக்கத் தயங்காத காவிக் கும்பலின் ரத்த வெறிக்கு தற்போது இந்திய வீரர்களின் உயிர், ரத்தம் சொட்டச் சொட்ட சூடாகக் கிடைத்திருக்கிறது. மோடியும், அர்னாப் வகையறாக்களும், புதிய ஆயுத புரோக்கர் அம்பானி வகையறாக்களும் ராணுவத்தினரின் ரத்தக் கடலில் முக்குளிக்க, கரையில் உட்கார்ந்து “போர், போர்” என்று குதூகலிக்கின்றனர் “தேஷ பக்தர்கள்”. மோடி அரசின் தோல்விகள் அனைத்தையும் போர் எனும் நிகழ்ச்சி நிரலில் தள்ளி விட்டு நாட்டு மக்களை தண்டிப்பதைத் தாண்டி இந்த போர் மற்றும் பதட்டம் என்ன செய்து விடும்?
வினவு செய்திப் பிரிவு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எனும் இரு ஏழை நாடுகள் போரிடுவதால் இரு நாட்டு மக்களுக்கும்தான் இழப்பே அன்றி அது மோடியின் வெற்றி தோல்வி சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. போருக்கு எதிராகவும், போர் வெறியைக் கிளப்பும் சங்கிகளுக்கும் எதிராக நாம் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக