செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

2 கைகளை இழந்தவருக்கு கைகள் பொருத்தப்பட்டது - ஸ்டான்லி மருத்துவ மனை மாற்று உடல் உறுப்பு ,,


மாலைமலர் : 2 கைகளை இழந்த வாலிபருக்கு மூளைச்சாவு அடைந்தவரின் கைகளை பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த போடிக் காமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (30). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கட்டிட வேலை செய்து வந்தார். கொத்தனாரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி சித்தையன் கோட்டை என்ற இடத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் வயரில் அந்த கம்பி உரசியது. இதில் அவரது 2 கைகளும் முழங்கைக்கு கீழே கருகியது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருந்தும் பலனில்லை. 2 கைகளையும் இழந்துவிட்டார். அவரால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.


இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி. வினய்யை சந்தித்தார். அப்போது அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

அவரது உதவியுடன் கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களை சந்தித்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தானமாக பெற்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் 2 கைகளையும் மீண்டும் பொருத்த முடியும் என நம்பிக்கை அளித்தனர்.

இதற்கிடையே மரணம் அடைந்த ஒருவரின், 2 கைகளையும் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன் வந்தனர். உடனே கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி மதுரையில் இருந்து விமானம் மூலம் நாராயணசாமி சென்னை வந்தார்.

அங்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வி.ரமாதேவி தலைமையில் 75 பேர் அடங்கிய குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 13 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவருக்கு தொடர் சிகிக்சையும், தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார்.

அது குறித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவி கூறியதாவது:-

ஸ்டான்லி ஆஸ்பத்திரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நிலை மையமாகும். இருந்தாலும் மூளை சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அரசு மருத்துவமனையில் இதுவே முதல் முறையாகும்.உலகம் முழுவதும் 87 ஆஸ்பத்திரிகளில் இதுவரை 110 பேருக்கு இந்த வகை அறுவை சிகிச்சை மூலம் மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பொருத்தப்பட்ட நாராயணசாமியால் சில பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பிசியோ தெரபி சிகிச்சையை கட்டாயம் அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் தான் அவரது கைகள் சரியாக செயல்படுத்த முடியும்.

தற்போது அவரால் கைகளை உயரே தூக்க முடியும், செல்போன் மற்றும் டெலிபோனில் கால் செய்ய முடியும். கோப்பை உள்பட பாத்திரங்களை எடுக்க முடியும். தமிழ்நாட்டிலேயே இவருக்குதான் முதன் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் இத்தகைய ஆபரேசன் மூலம் மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்றார்.

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமசிவாயம் கூறும் போது, “முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. அது தொடர வேண்டுமெனில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் கைகளை தானம் செய்ய பொதுமக்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் கைகள் துண்டிக்கப்பட்ட சுமார் 6 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு பொருத்த வேண்டும். தாமதம் ஏற்பட்டால் மீள்சி திறன் குறையும் என்றார்.

இதற்கிடையே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பெற்ற நாராயணசாமிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியிடத்திற்கான அரசாணையை வழங்கினார். அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக